கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்.. வழக்கு விசாரணை முடிவடைந்தது.. உயர் நீதிமன்றத்தில் போலீஸ் பதில்
கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கு விசாரணை நிறைவடைந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
சென்னை: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பான வழக்கின் விசாரணை நிறைவடைந்துவிட்டதாகவும், இரண்டு வாரங்களில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு படித்த வந்த மாணவி, கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 13-ம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்தார். பள்ளி வளாகத்திலேயே மாணவி மரணம் அடைந்ததால் இதில் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தன. எனினும், மாணவி மரணம் தொடர்பாக பள்ளி நிர்வாகம் சரியாக பதிலளிக்காததால் ஆத்திரமடைந்த உள்ளூர் மக்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் பள்ளியும், பள்ளி வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கு வேகம் எடுத்தது. பின்னர், மாணவியின் தந்தையின் கோரிக்கைபடி இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது. ஒருபுறம், வழக்கை சிபிசிஐடி விசாரித்து வரும் நிலையில், தனது மகளின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கக்கோரி மாணவியின் தாய் செல்வி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த இரண்டு வழக்குகளும் நீதிபதி ஜி.சந்திரசேகரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான காவல்துறை தரப்பு வழக்கறிஞர் சந்தோஷ், மாணவி மரண வழக்கின் விசாரணை நிறைவடைந்து விட்டதாகவும், மாணவி பயன்படுத்திய செல்போனை ஆய்வு செய்த தடயவியல் துறையிடம் இருந்து அறிக்கை பெறப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், வழக்கின் இறுதி அறிக்கை இரண்டு வாரங்களில் தாக்கல் செய்யப்படும் எனவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே, மாணவி மரணம் குறித்த வழக்கின் விசாரணையை சிறப்பு விசாரணை குழுவுக்கு மாற்ற கோரிய தாயார் மனுவுக்கு காவல் துறை பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், பதில் மனு தாக்கல் செய்யப்படும் வரை இறுதி அறிக்கை தாக்கல் செய்வதில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என மாணவியின் பெற்றோர் தரப்பு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். ஆனால், அந்த கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, வழக்கு விசாரணையை மார்ச் 23-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.












Click it and Unblock the Notifications