பெகாசஸ் விவகாரம்.. உண்மைகள் வெளிவரட்டும்.. தனிநபர் சுதந்திரம் காக்கப்படட்டும்.. கமல் வரவேற்பு
சென்னை: பெகாசஸ் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வரவேற்றுள்ளார்.
இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் என்ற ஒட்டுக் கேட்கும் சாப்ட்வேரை பயன்படுத்தி இந்தியாவில் உள்ள பத்திரிகையாளர்கள், மத்திய அமைச்சர்கள், ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் என 300-க்கும் மேற்பட்டோரின் செல்போன் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக வெளியான செய்திகள் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மக்களவையிலும் மாநிலங்களவையிலும் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஆனால் அதற்கு மத்திய அரசு முனைப்பு காட்டவில்லை என கூறப்படுகிறது. பெகாசஸ் விவகாரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.

நேற்று விசாரணை
இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா ஹோலி ஆகியோர் அமர்வு முன் நேற்றைய தினம் விசாரணைக்கு வந்தது. அதில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்சநீதிமன்ற அமர்வு, பெகாசஸ் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த 3 பேர் கொண்ட சிறப்பு குழுவை ஏற்படுத்த விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

பலர் வரவேற்பு
மேலும் சிறப்பு குழுவின் விசாரணையை உச்சநீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என அந்த அமர்வு தெரிவித்திருந்தது. தொழில்நுட்ப வளர்ச்சி எந்தளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு தனிமனித பாதுகாப்பும் முக்கியமானது என நீதிபதிகள் தெரிவித்தனர். இதை பல்வேறு தரப்பினர் வரவேற்றுள்ளனர்.
Recommended Video

கமல் கட்சி
இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில் பக்கத்தில் கூறுகையில் பெகாசஸ் மென்பொருள் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் விசாரணை நடத்த உச்ச நீதிமன்றமே சிறப்பு நிபுணர் குழுவை அமைத்துள்ளதை மநீம வரவேற்கிறது. உண்மைகள் வெளிவரட்டும், தனிநபர் சுதந்திரம் காக்கப்படட்டும் என தனது ட்விட்டரில் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

கடிவாளம்
இதே போல் இந்த தீர்ப்பை தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே எஸ் அழகிரியும் வரவேற்றுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் பெகாசஸ் ஒட்டு கேட்கும் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் ஜனநாயகத்திற்கு எதிராக செயல்பாடுகளுக்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு கடிவாளமாக அமைந்துள்ளதாக கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications