கனிமொழி சொன்னதை கேட்டீங்களா.. விஜய்யை ஹீரோவாக வைத்து போட்ட பதிவு.. ஒருத்தரும் தவெகவை விட்டு வைக்கல
சென்னை: தையூரில் தவெக நிர்வாகி தொடர்பான கொலை சம்பவத்தை சுட்டிக்காட்டி, நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தலைவர்கள் தவெக அரசை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.. சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், கொலை, கொள்ளை மற்றும் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். இந்நிலையில், சென்னையில் இளைஞர் பிரதீப் ராஜ் கொலை செய்யப்பட்டதை முன்வைத்து திமுக எம்.பி. கனிமொழியும் முதல்வர் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது, தையூரில் தவெக நிர்வாகி ஒருவர் கூலிப்படையை ஏவி இளைஞர் பிரவீன்குமார் கொலை செய்யப்பட்டதாக வெளியாகியுள்ள தகவலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தவெக நிர்வாகிகள் தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டிய அவர், கட்சியின் நிர்வாகிகள் மக்கள் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மாறி வருவதாக விமர்சித்துள்ளார். மேலும், தவெக நிர்வாகிகளை முதல்வர் விஜய் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதே காரணத்துக்காக, பாஜக முன்னாள் தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசனும் தவெக அரசை நேற்றைய தினம் விமர்சித்திருந்தார்..
எடப்பாடி பழனிசாமி, வானதி சீனிவாசன்
சட்டம் ஒழுங்கு தொடர்பான காவல்துறை மானியக் கோரிக்கையில் முதல்வர் விஜய் பதிலளிப்பார் என எதிர்பார்த்த நிலையில், மக்கள் பிரச்சினைகளைப் பேசாமல் 50 ஆண்டுகால பழங்கதைகளை பேசிக் கொண்டிருக்கிறார்.. மாநிலத்தில் ரவுடிகளின் அட்டகாசமும் ஆயுதக் கலாச்சாரமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டமுத.. முந்தைய ஆட்சியை விட தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு மேலும் படுபாதாளத்துக்கு சென்று கொண்டிருக்கிறது.. மக்கள் எதிர்பார்த்த மாற்றம் இதுவல்ல என்றெல்லாம் கடுமையாக சாடியிருந்தார்.
2 நாட்களுக்கு முன்பு, பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "4 மாத கால தவெக ஆட்சியில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் விற்பனை மற்றும் ஊழல் அதிகரித்துள்ளது.. தவெக தலைமையில் தமிழ்நாட்டில் மோசமான ஆட்சி தான் நடைபெறுகிறது" என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார்,
நேற்று புகார் - இன்று படுகொலை
இந்நிலையில், தலைநகர் சென்னையில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி, போலீஸ் அதிகாரி ஒருவர் மீதும் புகார் கூறி பேட்டியளித்த பிரதீப் ராஜ் என்ற இளைஞர், அடுத்த 24 மணி நேரத்திற்குள் வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது சட்டம்-ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
நேற்று புகார் - இன்று படுகொலை என்று சோஷியல் மீடியாக்களில் கொலையுண்டவரின் போட்டோவுடன், இது குறித்த செய்தி வைரலாகி வருகிறது.
கனிமொழியின் காட்டம்
இந்நிலையில் தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு நிலையையும், முதல்வர் விஜய்யின் அமைதியையும் விமர்சித்து திமுக நாடாளுன்ற உறுப்பினர் கனிமொழி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், "மீண்டும் ஒரு கொலை! இப்படி நாள்தோறும் தொடரும் கொலை கொள்ளை சம்பவங்களால் ஒரு சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியவில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் விஜய், தான் ஒரு முன்னாள் கதாநாயகன் என்பதால், வணிகத் திரைப்படங்களில் காட்டப்படுவதைப் போல, முதலில் கொடூரக் கொலைகள் அரங்கேறுவதை வேடிக்கை பார்த்துவிட்டு, பின்னர் தனது 'கதாநாயக சாகசங்களை' காட்டலாம் என்று ஏதேனும் திட்டம் வைத்திருக்கிறாரா என்ற குழப்பம் மக்களிடையே எழுகிறது" என்று விமர்சனம் செய்துள்ளார்
விஜய்க்கு சிக்கல்?
ஆக, அதிமுக, பாஜக, திமுக என மூன்று முக்கிய கட்சிகளும் தவெக அரசின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவது, முதல்வர் விஜய் தலைமையிலான அரசுக்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.. ஆட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே சட்டம் ஒழுங்கு விவகாரம் அரசியல் ரீதியாக முக்கிய பிரச்சினையாக மாறியிருக்கிறது..
அடுத்தடுத்து எழும் இந்த விமர்சனங்கள் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசுக்கு அரசியல் ரீதியாக நெருக்கடியையும் தந்து கொண்டிருப்பதாகவே தெரிகிறது...!!


Click it and Unblock the Notifications
