தூத்துக்குடியில் மையம் கண்ட கனிமொழி புயல்.. கிராமம் கிராமமாக போகிறார்
தூத்துக்குடி தொகுதியில் கனிமொழி போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Recommended Video

சென்னை: தூத்துக்குடியை கனிமொழி விடுவதாக இல்லை? எம்பி தேர்தலை மனதில் வைத்து சும்மா ரவுண்டு கட்டி வலம் வந்து கொண்டிருக்கிறாராம்!
"ஒரு எம்.பி., ஒரு கிராமம்" திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தபோது, யாருமே எதிர்பார்க்காத வகையில், தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரி யூனியன் ஸ்ரீவெங்கடேசுவரபுரம் பஞ்சாயத்தை கனிமொழி எம்பி தேர்ந்தெடுத்தார்.
சென்னையில் வசித்து கொண்டு, டெல்லியில் எம்பியாக இருக்கும் கனிமொழியின் பார்வை தூத்துக்குடி மாவட்டம் மீது ஏன் விழுந்தது என்று அதிமுக மட்டுமல்லாமல் திமுக தரப்பிலேயே நிறைய சந்தேகங்கள், குழப்பங்கள் எழுந்தன.

ராசாத்தி அம்மாள்
விஷயம் ரொம்ப சிம்பிள்... தூத்துக்குடியை பொறுத்தவரை பெரும்பாலும் நாடார் இன மக்கள்.. அடுத்ததாக தேவர் சமுதாய மக்கள். இதில் கனிமொழி அம்மா ராசாத்தி அம்மாள் நாடார் சமுதாயத்தை சேர்ந்தவர் என்பதுடன், கனிமொழிக்கு சென்னையில் நாடார் சமுதாயத்தினரின் ஆதரவு நிறையவே இருக்கிறது.
|
வறட்சி பகுதி
இவர்களின் வாக்குகளை எளிதாக பெற முடியும் என்ற நம்பிக்கையில் இந்த கிராமத்தை அன்றைக்கு கனிமொழி தத்தெடுத்தாலும், " இப்பகுதியில் உள்ள குளங்களில் தண்ணீர் சுத்தமாக இல்லை, எந்தவொரு வளர்ச்சியும் இல்லாமல் உள்ளது. இப்படி வறட்சி பாதித்த பகுதியை தேர்ந்தெடுத்து வளமாக்குவதே தன் லட்சியம்" என்று காரணம் சொன்னார்.
|
எம்பி தேர்தல்
அதற்கேற்றபடி இதுவரை கிட்டத்தட்ட இந்த கிராமத்திற்கு 16 லட்சம் ரூபாயை ஒதுக்கி நலத்திட்டமும் செய்துள்ளார். இது கனிமொழி மீது நன்மதிப்பை அம்மாவட்டத்தில் ஏற்படுத்தி உள்ளது. எனவே கனிமொழி இந்த கிராமத்தை தத்தெடுக்க காரணமே எம்பி தேர்தலை மையப்படுத்திதான் என்று அப்போதே பேசப்பட்டது.

ஸ்டெர்லைட்
அதற்கேற்றபடி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் சூடு பிடித்தபோது, அங்கு நடந்த பல கூட்டங்களில் கனிமொழி பங்கேற்று மாவட்ட மக்களுக்கு ஆதரவாக இருந்தார். அதோடு, அங்கிருக்கும் தொழிலதிபர்கள், நாடார் சங்கங்கள் என பல தரப்பினரையும் நேரில் சந்தித்து பேசியும் வந்தார். ஒருவேளை இந்த தொகுதியில் வேட்பாளராக நிறுத்திவிட்டால், விமான நிலைய விரிவாக்கம் குறித்தும், கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு அனுமதி வாங்குவதுகுறித்தும் மத்திய அரசிடம் அணுகி அனுமதி வாங்கலாம் என்றெல்லாம் பல திட்டங்களையும் யோசித்து வைத்திருந்திருக்கிறார்.

ஜரூர் வேலைகள்
இதனிடையே கருணாநிதி மறைவுக்கு பிறகு கட்சியின் பொருளாளர் பதவி கைக்கு வரும் என எதிர்பார்த்து காத்து கிடந்த கனிமொழிக்கு ஏமாற்றமே மிஞ்சியது. எனினும், பல விஷயங்களை செயல்படுத்த திட்டமிட்டு வந்த தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட கனிமொழி அனுமதி கேட்க, அதற்கு மு.க.ஸ்டாலின் பச்சைக் கொடி காட்ட.. ஜரூர் வேலைகள் அந்த தொகுதியில் நடந்து வருகிறது.
|
கிராம சபை கூட்டம்
கனிமொழி மட்டும் இந்த தேர்தலில் நிற்பது உறுதியாகி விட்டால், கண்டிப்பாக 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைப்போம் என்று தென்மாவட்ட பிரமுகர்கள் பலமுறை தங்கள் விருப்பத்தை தெரிவித்து வந்தனர். அதற்கேற்றபடி இப்போது ஸ்டாலினின் கிராம சபை கூட்டம் சார்பாக தூத்துக்குடியில் நடத்தி வருகிறார் கனிமொழி. கிராமம் கிராமமாக சென்று இந்த கிராம சபை கூட்டத்தை நடத்தி தொகுதி மக்களின் ஆதரவை பெறும் முயற்சியிலும் இறங்கி உள்ளார்.

ஆதரவு கிடைக்க வாய்ப்பு
தொகுதியை பொறுத்தவரை, கருணாநிதி மகள், நாடார் சமுதாய ஆதரவை பெற்றவர், ஸ்டெர்லைட் விவகாரத்தில் போதுமான அளவுக்கு குரல் கொடுத்தவர், ஸ்ரீவெங்கடேசுவரபுரத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் விரிவாக்கம் உள்ளிட்ட எண்ணற்ற பணிகளை செய்து தந்திருப்பவர், தொடர்ச்சியாக கிராம மக்களை சந்தித்து கூட்டங்களை நடத்தி வருபவர் போன்ற பல காரணங்களுக்காக கனிமொழிக்கு நிறைய ஆதரவு தூத்துக்குடி மாவட்டத்தில் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications