கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு அழுத்தம்.. காவல் நிலையத்தில் அத்துமீறல்.. தவெகவை விளாசிய கனிமொழி
சென்னை: கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும், தவெக அமைச்சர் காவல் நிலையத்துக்குள் அத்துமீறி ஆய்வு செய்ததோடு, பெண் காவலரின் செல்போனை சோதித்தது அத்துமீறல் என்றும் திமுக எம்.பி. கனிமொழி கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் கனிமொழி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: தொகுதி மறுவரையறையில் திமுகவின் நிலைப்பாட்டை மிகத் தெளிவாக கூறியுள்ளோம். நியாயமான தொகுதி மறுவரையறையே திமுகவின் கோரிக்கை. புதிய பில்லில் எதனை கொண்டு வரப் போகிறார்கள் என்று தெரியாமல் திமுகவின் நிலைப்பாட்டை சொல்வதற்கு வாய்ப்பில்லை. கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ ஆபாச மெசேஜ் விவகாரம் குறித்த கேள்விக்கு, எல்லா அரசியல் தலைவர்களும் இதைப் பற்றி பேசியிருக்கிறார்கள்.

கள்ளக்குறிச்சி ஆட்சியருக்கே அழைத்து நடந்து சம்பவத்திற்காக அமைச்சர்கள் மன்னிப்புக் கேட்டுள்ளனர். ஆனால், மன்னிப்பு கேட்டவர்களே இன்று நம்மைப் பார்த்து கேள்வி கேட்கின்றனர். சோஷியல் மீடியாவில் வந்த விஷயத்தை வைத்து கேள்வி கேட்க முடியுமா என்று தற்போது நம்மை நோக்கியே கேள்வி எழுப்பியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து வெளியில் பேச வேண்டாம் என்கிற அழுத்தத்தை தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.
ஆட்சியருக்கே இந்த நிலை
தேசிய மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தை தற்போது கையிலெடுத்துள்ளது. தவெக எம்எல்ஏ மீது புகார் தெரிவித்து தலைமைச் செயலருக்கு கடிதம் எழுதப்பட்டதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆட்சியருக்கு நியாயம் கிடைக்க வேண்டும், நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார்கள். மற்ற பெண்களைப் பாதுகாக்கும் நிலையில் உள்ள பெண்ணுக்கே இப்படிப்பட்ட ஒரு நிலை உள்ளது. நாங்கள் கேள்வி கேட்டால்தானே தவறு. இப்போது மகளிர் ஆணையம், தேசிய மகளிர் ஆணையம் கேள்வி கேட்டுள்ளது.
எந்த உரிமையும் கிடையாது
தவெக அமைச்சர் காவல் நிலையத்தில் ஆய்வு செய்தது, அங்கிருந்த பெண் காவலரின் செல்போனை வாங்கி சோதனை செய்தது குறித்த கேள்விக்கு, எனக்குத் தெரிந்தவரை காவல் துறையை கையில் வைத்திருக்கும் அமைச்சரைத் தவிர, மற்ற அமைச்சர்கள் காவல் நிலையத்திற்குள் செல்வதற்கோ, அங்கு ஆய்வு நடத்துவதற்கோ உரிமை கிடையாது. மேஜிஸ்திரேட், நீதிபதி நினைத்தால் அங்கு நடக்கும் நடவடிக்கைகளை கண்காணிக்கலாம். அல்லது காவல் துறை அதிகாரிகள் மட்டும் தான் காவல் நிலையத்துக்குள் சென்று ஆய்வு செய்ய முடியும்.
சட்டமீறல்
அமைச்சர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ ஆய்வு நடத்துவதற்கோ, எஃப்ஐஆர் கோப்புகள், கேஸ் டைரிகளை பார்ப்பதற்கு அவர்களுக்கு சட்டத்தில் எந்த உரிமையும் கிடையாது. இதுவே மிகப்பெரிய சட்ட மீறல். தொடர்ந்து இந்த ஆட்சியில் பல்வேறு வகையில் சட்ட மீறல்கள், குற்றச்செயல்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இப்போது காவல் நிலையத்துக்குள் சென்று குற்றச் செயல் செய்வது வருத்தமளிப்பதாக உள்ளது.
சோழ மன்னர் கூட இப்படி பண்ணதில்லை
பெண் காவலர்களின் செல்போனை வாங்கி அவர்களுடைய தனிப்பட்ட விஷயங்களைப் பார்ப்பது நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது. பல கோயில்களைக் கட்டிய சோழ அரசர்கள் கூட தங்களை கடவுளாக நினைத்துப் போற்றி பாட வேண்டும் என்று நினைத்தது கிடையாது. கடவுள் நம்பிக்கை இல்லாத கருணாநிதி ஆட்சியில் கூட கடவுளுக்கு நிகராக யாரையும் வாழ்த்தி கோஷமிட்டதில்லை.
கடவுளுக்கு நிகராக..
ஸ்டாலின் ஆட்சியில் ஆயிரக்கணக்கான கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஆனால், அங்குள்ள அமைச்சர்களையோ, முதலமைச்சரையோ பாராட்டும் நடவடிக்கை நடைபெறவில்லை. இது கடவுள் நம்பிக்கை, பக்தி இருக்கக்கூடிய மக்களையும் புண்படுத்தக்கூடிய செயல் இது. கடவுளுக்கு நிகராக யாரையும் வாழ்த்தும் வழக்கம் இல்லை. இது மிகவும் தவறான செயல். எல்லாவற்றிற்கும் வழக்குப் போடுபவர்கள் திருச்செந்தூர் விவகாரத்துக்கு என்ன வழக்குப் போடுவார்கள் எனத் தெரியவில்லை.
திமுக பின்வாங்காது
திமுக தலைவர்களை, தங்கள் எதிர்த்து பணியாற்றக்கூடிய, கேள்வி கேட்கக்கூடிய தலைவர்களை தாங்கள் வைத்திருக்கும் துறையின் மூலம் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். வழக்குப் பதிவு செய்வது, ரெய்டு போன்றவற்றை பயமுறுத்துவதற்காக செய்து கொண்டிருக்கிறது. இவற்றையெல்லாம் பார்த்து திமுக பின்வாங்காது. தமிழக முதல்வர் எந்த விஷயத்திற்கும் இதுவரை கருத்து தெரிவித்ததில்லை. ஆனால், தவெக அமைச்சர்கள் எங்களைப் பார்த்து கருத்து சொல்லவில்லை என்று கூறிக் கொண்டிருக்கின்றனர் என்றார்.


Click it and Unblock the Notifications
