எதற்காக "இந்தியா கூட்டணி.." கர்நாடகா எதிரி நாடாக பார்க்கல.. காங்கிரஸ்தான் பார்க்கிறது.. அண்ணாமலை
சென்னை: கர்நாடகா எதிரி நாடாக பார்க்கவில்லை. கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ்தான் தமிழகத்தை எதிரி நாடு போல பார்க்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு தொடர்ந்து முரண்டு பிடித்து வருகிறது. காவிரி ஒழுங்காற்று குழு, மேலாண்மை ஆணையம் தமிழகத்திற்கு நீர் திறந்து விட உத்தரவிட்டாலும் கூட அதையும் முழுமையாக பின்பற்றுவது இல்லை. தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட வாய்ப்பே இல்லை என்று கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார் கூறி வருகிறார். அதேபோல், சொற்ப அளவு தண்னீரை கர்நாடகா, காவிரியில் திறந்து விட்டாலும் கூட அதற்கும் அங்குள்ள கர்நாடக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இதனால், காவிரியில் தமிழகத்திற்கு உண்டான உரிமையை பெறுவதற்கு கூட பெரும் சட்டப்போராட்டங்களை தமிழக அரசு நடத்த வேண்டிய நிலைதான் உள்ளது. இந்த நிலையில், நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் துரைமுருகன், கர்நாடக அரசு ஏதோ எதிரி நாடு போல நடந்து கொள்வதாக விமர்சித்து இருந்தார். இது தொடர்பாக துரைமுருகன் கூறுகையில், ஒழுங்காற்று குழு ஒழுங்காக ஆற்றவில்லை.. காரணம் நாள் ஒன்றுக்கு 13 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வலியுறுத்தினோம்.
எதிரி நாடாக பார்க்கிறது: அவர்கள் நாள் ஒன்றுக்கு 2,600 கன அடி நீர் திறந்து விடுகிறோம் என்று சொல்லியிருக்கிறார்கள். இது போதாது என்பது எங்களின் நிலைபாடு. காவிரி மேலாண்மை ஆணையம் 3 ஆம் தேதி கூடும் என்று சொல்கிறார்கள். அவர்களிடம் மேல் முறையீடு செய்ய வேண்டும். அங்கும் தீர்வு கிடைக்கவில்லை என்றால் கோர்ட்டுக்கு போக வேண்டும். கர்நாடகாவில் இதுவரை இருந்த எந்த அரசும் இவ்வளவு முரண்டு பிடித்தது இல்லை.
எதோ ஒரு எதிரி நாட்டோடு மோதுவது போல நினைக்கிறார்கள்" என்று கூறினார். இந்த நிலையில், அமைச்சர் துரைமுருகன் கருத்து குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, கர்நாடகா எதிரி நாடாக பார்க்கவில்லை என்றும் அங்குள்ள காங்கிரஸ் தான் அப்படி பார்ப்பதாகவும் சாடியுள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை கூறியிருப்பதாவது:-
காங்கிரஸ் தான் அப்படி பார்க்கிறது: எங்களை எதிரி நாட்டை போல கர்நாடகா பார்க்கிறது என்று அமைச்சர் துரைமுருகன் கூறுகிறார். பிறகு எதற்கு இந்தியா கூட்டணி.. ஒருவேளை நீங்கள் ஜெயித்து வந்தால் கூட உங்களால் பிரச்சினைகளை தீர்க்க முடியுமா என்று இந்தியா கூட்டணி தலைவர்களை பார்த்து கேட்கிறேன். சம்பந்தமே இல்லாத... சித்தாந்தம் இல்லாத கூட்டணியாக உள்ளது. ஒரு பக்கம் அகிலேஷ் யாதவ், ஒருபக்கம் மம்தா பானர்ஜி, ஒரு பக்கம் அரவிந்த் கெஜ்ரிவால்...
நீங்களே யோசிச்சு பாருங்கள்.. இந்தியா கூட்டணி எப்படி இருக்கும் என்பதற்கு தமிழ்நாட்டில் இருக்கும் திமுகவும் கர்நாடகாவில் இருக்கும் காங்கிரசும். இந்த காவிரி நதி நீர் பங்கீட்டில் இவர்கள் செய்யும் டிராமா தெளிவாக தெரிகிறது. கர்நாடகா எதிரி நாடாக பார்க்கவில்லை. கர்நாடகாவில் உள்ள காங்கிரஸ் தமிழகத்தை எதிரி நாடு போல பார்க்கிறது என்பதுதான் உண்மை. இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications