காவிரியில் தண்ணீர் திறந்த கர்நாடகா.. உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு முன் இறங்கி வந்த டிகேஎஸ்
சென்னை: காவிரியில் கர்நாடக அரசு நீர் திறந்துவிட்டுள்ளது. கபினியில் சுமார் 12,000 கன அடி திறக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகா அரசு கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி நீரை திறந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் திங்கட்கிழமை வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், நீதிமன்றத்திடம் குட்டு வாங்குவதில் இருந்து தப்பிக்க கர்நாடகா தண்ணீரை திறந்து விட்டு இருக்கலாம் என விவசாயிகள் கூறுவதை கேட்க முடிந்தது.
காவிரியில் தமிழகத்தில் நியாயமாக கிடைக்க வேண்டிய நீரை கொடுக்க கூட கர்நாடகா மறுத்து வருகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, கர்நாடக அரசு தமிழகத்திற்கு ஆண்டுதோறும் மொத்தம் 177.25 டி.எம்.சி நீர் திறந்துவிட வேண்டும்.

காவிரி நீர்
ஆனால், கர்நாடகாவோ வெறும் உபரி நீரை மட்டுமே தமிழகத்திற்கு திறந்துவிடும் நிலையில், தமிழகத்தின் உரிமைப்படி நீர் வழங்க மறுத்து வருகிறது. காவிரி ஆணையம், காவிரி ஒழுங்காற்று ஆணையம் உத்தரவிட்டாலும் கூட அதனை காற்றில் பறக்கவிட்டு, தண்ணீர் இல்லை என கைவிரித்து வருகிறது. இந்த ஆண்டும் கர்நாடகா அரசு தண்ணீர் திறக்க மறுத்து அடம் பிடித்து வந்த நிலையில், வருண பகவான் கருணையில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்தது.
இதனால், காவிரியில் இருந்து உபரி நீரை கர்நாடகா திறந்து விட்டுள்ளது. நியாயப்படி வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க மறுத்து வரும் கர்நாடகாவுக்கு எதிராக தமிழக அரசு மற்றும் திமுக தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நாளை மறுநாள் திங்கட்கிழமை விசாரணைக்கு வர உள்ள நிலையில், இன்று கே.ஆர்.எஸ் அணையில் இருந்து கர்நாடகா நீர் திறந்து விட்டுள்ளது.
வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறப்பு
வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி தண்ணீரை கே.ஆர்.எஸ் அணையில் இருந்து திறக்கப்பட்டு இருக்கிறது. கபினியில் சுமார் 12,000 கன அடி திறக்கப்பட்டுள்ள நிலையில், கர்நாடகா அரசு கே.ஆர்.எஸ் அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி நீரை திறந்துள்ளது. உச்ச நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வர உள்ள நிலையில், நீதிமன்றத்திடம் குட்டு வாங்குவதில் இருந்து தப்பிக்க கர்நாடகா தண்ணீரை திறந்து விட்டு இருக்கலாம் என விவசாயிகள் கூறுவதை கேட்க முடிந்தது.
கபினி அணையில் இருந்து 12 ஆயிரம் அடி நீர் திறக்கப்படும் நிலையில், தற்போது கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்திற்கு வரும் நீரின் அளவு 15 ஆயிரம் கன அடியாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் நீர்வரத்து கணிசமாக அதிகரிக்கும் என்பது விவசாயிகளுக்கு சற்று ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
தமிழக அரசு தாக்கல் செய்த மனு
காவிரி மேலாண்மை ஆணையம் கடந்த மாதம் 30 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவை கர்நாடகா பின்பற்ற வேண்டும், கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்) அணைகளில் இருந்து நீரை திறக்க வேண்டும். 15 நாட்களில் விநாடிக்கு 3,500 கன அடி வீதம் தண்ணீர் திறப்பதை உறுதி செய்ய கர்நாடக அரசு உத்தரவிட வேண்டும். ஜூன் மாதம் முதல் ஆகஸ்டு 12-ஆம் தேதி வரையிலான காலத்திற்கு பிலிகுண்டுலுவில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையான 26.954 டி.எம்.சி நீரை விழுக்காட்டின் அடிப்படையில் உடனே வழங்குமாறு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளுடன் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
காவிரி விவகாரத்தில் திமுகவும் இடையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளது. இந்த இரண்டு மனுக்களையும் சேர்த்து வரும் 17 ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் எடுத்துக்கொள்கிறது.


Click it and Unblock the Notifications
