கர்நாடகாவைப் பாருங்க.. எவ்வளவு ஒற்றுமையா இருக்காங்க! ஆனால், தமிழ்நாட்டில்? மாணிக்கம் தாகூர் வேதனை!
சென்னை: கர்நாடகாவில் அரசியலை விட தண்ணீர் பிரச்சினைக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது எனவும், ஆனால், தமிழகத்தில் மேகதாது அணையை தடுக்க வேண்டும் என்ற அக்கறையை விட அரசியல் லாபமே முக்கியமாக பார்க்கப்படுகிறது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தொகுதி மறுசீரமைப்பு மசோதா மீண்டும் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு இருக்கிறது.
ஏப்ரல் மாதம் ஒத்திவைக்கப்பட்ட அதே மசோதாவை மத்திய அரசு மீண்டும் கொண்டு வருவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. பாஜக பல்வேறு அரசியல் கட்சிகளை பலவீனப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும், பிளவை ஏற்படுத்த முயற்சிக்கிறது.

மாணிக்கம் தாகூர்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, எந்த வகையிலும் இந்த மசோதாவை நிறைவேற்ற முயற்சி செய்கிறது. அடுத்த வாரம் எந்த நேரத்திலும் இந்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்ற சாத்தியம் உள்ளது. நீட் தேர்வுக்கு எதிரான மாணவர் போராட்டங்கள் மற்றும் ஜூலை 20 ஆம் தேதி நடைபெற்ற காவல்துறை நடவடிக்கை காரணமாக கடந்த வாரம் மக்களின் கவனம் முழுவதும் அந்த விவகாரத்தில் இருந்ததால், மத்திய அரசு இந்த மசோதாவை தற்காலிகமாக ஒத்திவைத்தது.
தொகுதி மறுசீரமைப்பு
தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் இந்திய தேசிய காங்கிரஸின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. தமிழக காங்கிரஸ் அதே நிலைப்பாட்டையே கொண்டிருக்கிறது. இந்த மசோதாவை எந்த வடிவில் கொண்டு வந்தாலும், அது தமிழ்நாட்டின் நலனுக்கும், மாநிலங்களின் உரிமைகளுக்கும், தமிழ்நாட்டின் அரசியலுக்கும் எதிரானது என்பதே எங்கள் உறுதியான நிலைப்பாடு. மேலும், தொகுதி மறுவரையறை தமிழகத்திற்கு மிகவும் ஆபத்தானது என்றும், இந்த விவகாரத்தில் எந்தவித சமரசமும் செய்யக் கூடாது.
அன்புமணி ராமதாஸ்
கடந்த காலத்தில் தி.மு.க. தொகுதி மறுவரையறைக்கு எதிராக குரல் கொடுத்தது. அந்த நிலைப்பாட்டிற்கு அப்போது அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தடுஹ். இனி அந்த நிலைப்பாட்டில் இருந்து யார் விலகுகிறார்கள், யார் சேர்கிறார்கள் என்பதை மக்கள் பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். ராகுல் காந்தி, தமிழகத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிராக வாக்களிக்காதவர்கள் எட்டப்பர்கள் என்று கூறியுள்ளார். அப்படிப்பட்ட எட்டப்பர்களின் பட்டியலில் தற்போது அ.தி.மு.க. மற்றும் அன்புமணி ராமதாஸ் உள்ளனர். இனி புதிதாக யார் சேரப் போகிறார்கள் என்பதை அவர்களிடமே கேட்க வேண்டும்.
காவிரி பிரச்சனை
கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் கர்நாடக நலனுக்காக பேசுவார். அதில் எந்த ஆச்சரியமும் இல்லை. என்னைப் பொறுத்தவரை தமிழக நலன்தான் முக்கியம். தமிழக முதலமைச்சர் கர்நாடக முதலமைச்சரிடம் பேசினால் அதில் எந்தத் தவறும் இல்லை. தமிழ்நாட்டில் ஒருவரை பார்த்து மற்றொருவர் கை நீட்டிக் கொள்கிறோம். அதுதான் இங்குள்ள பிரச்சினை. கர்நாடகாவை பார்த்து நாம் அனைவரும் கை நீட்ட வேண்டும்.
தண்ணீர் பிரச்சினை
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் கொண்டு வந்த திருத்தங்களையும் இணைத்தே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தை ஆதரித்தவர்கள், சட்டமன்றத்திற்கு வெளியே வந்து அது தவறான முடிவு என்று கூறினால், மக்களிடம் என்ன எண்ணம் உருவாகும்? . தமிழகத்தில் சிலருக்கு தண்ணீர் பிரச்சினையை விட அரசியல்தான் முக்கியமாக இருக்கிறது. மேகதாது அணையை தடுக்க வேண்டும் என்ற அக்கறையை விட அரசியல் லாபமே முக்கியமாக பார்க்கப்படுகிறது.
அனைத்துக் கட்சிக் கூட்டம்
ஆனால் கர்நாடகாவில் அரசியலை விட தண்ணீர் பிரச்சினைக்கே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மேலும், மேகதாது விவகாரம் தொடர்பாக தமிழக அரசு உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் சட்டமன்றத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து தீர்மானம் நிறைவேற்றிய நிலையில், வெளியே வந்து அதற்கு எதிராக கருத்து தெரிவிப்பது சரியான அணுகுமுறை அல்ல. இது மாநிலத்தின் ஒற்றுமையை பாதிக்கும்.
காங்கிரஸ்
கர்நாடகாவில் பா.ஜ.க. மூத்த தலைவர் எடியூரப்பா கூட காவிரி நீரை திறந்து விடக்கூடாது என்று கூறுகிறார். ஆனால் தமிழக பா.ஜ.க. மாநிலத் தலைவர் அதுபற்றி பேச மறுக்கிறார். கர்நாடகாவில் டி.கே. சிவகுமார், எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்கள் அரசியல் வேறுபாடுகளை மறந்து மாநில நலனுக்காக ஒன்றாக நிற்கிறார்கள். அதேபோல் தமிழகத்திலும் காங்கிரஸ், பா.ஜ.க., பா.ம.க., அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழக உரிமைக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எங்களின் விருப்பம்" என்று கூறினார்.


Click it and Unblock the Notifications
