தமிழ்நாட்டில் சென்னையை தவிர்த்து.. மதுரை, கோவைக்கு மெட்ரோ ரயில் தேவையில்லை.. கார்த்தி சிதம்பரம்!
புதுக்கோட்டை: தமிழ்நாட்டில் சென்னையை தவிர்த்து வேறு மாவட்டங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் தேவையில்லை என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் விஜய்க்கு கணிசமான வாக்குகள் கிடைக்கும் என்றாலும், அது சீட்டுகளாக மாறாது என்றும் கணித்துள்ளார்.
பீகார் சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 61 தொகுதிகளில் போட்டியிட்டு வெறும் 6 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி இருக்கிறது. பீகாரில் மிகப்பெரிய தோல்வியை காங்கிரஸ் கட்சி பெற்றுள்ள நிலையில், அனைவரின் கவனமும் தமிழ்நாடு பக்கம் திரும்பி இருக்கிறது. பீகார் தேர்தலில் முடிவுகள் தமிழ்நாட்டிலும் எதிரொலிக்கும் என்று பாஜகவினர் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் புதுக்கோட்டையில் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், பீகார் தேர்தலில் நாங்கள் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கவில்லை. அது தமிழ்நாட்டில் எதிரொலிக்காது. ஒரு மாநிலத் தேர்தல் முடிவுகள் இன்னொரு மாநிலத்தில் எதிரொலிக்காது. ஆனால் இந்த முடிவு காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு தான். என்டிஏ வலிமையான ஒரு கூட்டணியை அமைத்தது.
அந்த கூட்டணியில் லோக் ஜனசக்தி கட்சி கூடுதலாக 5% வாக்குகள் பெற்றுக் கொடுத்துள்ளது. மகளிருக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்தது அவர்களுக்கு சாதகமாக அமைந்துவிட்டது. வாக்கு திருட்டு காரணமா என்பது தொடர்பாக என்னிடம் தகவல் இல்லை. காங்கிரஸ் கட்சியின் வாக்கு சதவிகிதத்தில் எந்தக் குறைவும் ஏற்படவில்லை. அதேபோல் விஜய்க்கு கணிசமான வாக்குகள் வரும்.
ஆனால் அந்த வாக்குகள் சீட்டுகளாக மாறாது. 4 முனைப் போட்டி என்றால், அதில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வெல்லும். அதேபோல் பீகார் தேர்தலில் மகளிருக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்ததை போல் பாஜக கொடுக்க முடியாது. ஏனென்றால் பீகாரில் என்டிஏ கூட்டணி ஆட்சி நடக்கிறது. மகளிருக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்தது மாநில அரசு தான். மத்திய அரசு அப்படி கொடுத்தால், இந்தியா முழுவதும் கொடுக்க வேண்டிய சூழல் வரும்.
வேண்டுமென்றால் திமுக கொடுக்க வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் மெட்ரோ ரயில் திட்டம் தேவையில்லை. அதிக மக்கள் தொகை கொண்ட ஊர்களிலும் மெட்ரோ அவசியம். திருச்சி, மதுரை போன்ற மாவட்டங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் தேவையில்லை. அங்கு போக்குவரத்தை மேம்படுத்த மாற்று வழிகளை ஆராய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications