“கருணாநிதி கதை வசனம் எழுதி சம்பாதித்த பணத்தை என்ன செய்தார் தெரியுமா?” - ஸ்டாலின் சொன்ன தகவல்!
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதி 'பெண் சிங்கம்' படத்திற்கு கதை வசனம் எழுதி சம்பாதித்த பணத்தை என்ன செய்தார் என முதல்வர் ஸ்டாலின் விழா ஒன்றில் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற நிகழ்ச்சியில், "The Dalit Truth" புத்தகத்தை வெளியிட்டு உரையாற்றினார்.
அப்போது பேசிய ஸ்டாலின், பட்டிலயலினத்தவர், பழங்குடியினருக்கு தி.மு.க அரசு செயல்படுத்திய திட்டங்கள் பற்றிக் குறிப்பிட்டுப் பேசினார்.

தொகுப்பு நூல்
ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி கே.ராஜூ தொகுத்த "The dalit truth" என்ற ஆங்கிலப் புத்தக வெளியீட்டு விழா சென்னை பெரியார் திடலில் நேற்று நடைபெற்றது. இந்த புத்தகத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.
சுகதேவ தோரட் முதல் புத்திதி ராஜசேகர் அவர்கள் வரை கல்வியாளர்கள் இளம் அரசியல் தலைவர், சிறந்த நிர்வாகிகள், ஆராய்ச்சியாளர்கள், சமூக சிந்தனைமிக்க திரைப்பட இயக்குநர் என 13 பேருடைய கட்டுரைகள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன.

திமுக ஆட்சி
இந்த புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய முதல்வர் ஸ்டாலின், "சமூகநீதிக்காக, ஆட்சியில் இருக்கும்போது மட்டுமல்ல, எதிர்க்கட்சியாக இருந்தபோதும் போராடியும் அதற்காகப் பல்வேறு தியாகங்களையும் செய்திருக்கக்கூடிய இயக்கம்தான் திமுக. சில எடுத்துக்காட்டுகளை நான் உங்களிடத்தில் சொல்ல வேண்டும் என்றால், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பட்டியலின, பழங்குடியின மக்களுக்கான இடஒதுக்கீட்டை 16 விழுக்காட்டில் இருந்து முதன் முதலில் 18 விழுக்காடாக 1971-ஆம் ஆண்டு கலைஞர் தலைமையில் அமைந்த ஆட்சிதான் நிறைவேற்றிக் கொடுத்தது.

கருணாநிதி
1989-ல் பழங்குடியினர் என தனியாக ஒரு விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியதும் திமுக ஆட்சிதான். 2009-ல் அருந்ததியின மக்களுக்கு உள்ஒதுக்கீடாக மூன்று விழுக்காடு வழங்கியதும் திமுக ஆட்சிதான். நாட்டிலேயே முதலாவதாக டாக்டர் அம்பேத்கர் பெயரில் சட்டப் பல்கலைக்கழகத்தை அமைத்ததும் கருணாநிதி தலைமையில் இருந்த தி.மு.க ஆட்சிதான். அனைத்துச் சமுதாய மக்களும் ஓரிடத்தில் ஒற்றுமையாக ஒருமித்த கருத்தோடு, சாதிப் பாகுபாடுகளை எல்லாம் மறந்து, அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் சமத்துவபுரங்களை பெரியார் பெயரில் உருவாக்கியதும் கருணாநிதி தலைமையில் இருந்த திமுக ஆட்சிதான்.

பெண் சிங்கம்
'பெண் சிங்கம்' என்ற திரைப்படத்திற்கு கருணாநிதி வசனம் எழுதியிருக்கிறார். அந்தக் கதை வசனம் எழுதி தந்தமைக்காக அவருக்கு கொடுத்த சம்பளம் 50 லட்சம் ரூபாய். அந்தப் பணத்தோடு சேர்த்து தன்னுடைய சொந்தப் பணம் 11 லட்சத்து 5 ஆயிரம் ரூபாயையும் சேர்த்து, 61 இலட்சத்து 5000 ரூபாயை பொறியியல் மருத்துவக் கல்வி பயிலக்கூடிய அருந்ததியர் மாணவர்களுக்கு கல்வி வளர்ச்சிக்காக ஒவ்வொரு மாணவருக்கும் ஆண்டுதோறும் 5 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கியவர் கருணாநிதி." எனத் தெரிவித்தார்.

பா.ரஞ்சித்
மேலும், புத்தகம் குறித்து பேசிய ஸ்டாலின், ஜிக்னேஷ் நேவானி, சூரஜ் யெங்டே போன்ற இளம் ஆற்றலாளர்களும் இந்தத் தொகுப்பில் தங்களுடைய கட்டுரைகளை அளித்திருப்பது சிறப்புக்குரியதாக அமைந்திருக்கிறது.
அதேபோல தமிழ்நாட்டைச் சார்ந்த திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் இந்தியாவில் தலித் சினிமா என்ற கட்டுரையில், சமூக ஆதிக்கங்களுக்கு எதிராக திராவிட இயக்கத் திரைப்படங்கள் அமைந்திருந்ததை அவர் இந்தப் புத்தகத்தில் சுட்டிக்காட்டியிருக்கிறார். மேலும், திமுக-வினுடைய காலம் என்பது, அத்தகைய முற்போக்கு புரட்சிக் கருத்தியல் திரைப்படங்கள் வணிக ரீதியாகவும் வெற்றி பெறும் என்று தயாரிப்பாளர்கள் நம்பிய காலமாக இருந்ததையும் அவர் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்." எனப் பேசியுள்ளார்.

நெஞ்சுக்கு நீதி
மேலும் பேசிய ஸ்டாலின், இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கியிருக்கக்கூடிய தி.மு.க இளைஞரணிச் செயலாளராக இருக்கக்கூடிய என்னுடைய மகன் உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள 'நெஞ்சுக்கு நீதி' திரைப்படம் வருகிற 20ஆம் தேதி வெளிவர இருக்கிறது. நேற்று முன்தினம் அந்தப் படத்தை எனக்குப் போட்டுக் காண்பித்தார்கள்.
பட்டியலின மக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளை எதிர்த்தும் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அரசியலமைப்புச் சட்டத்தின் வழியாக வழங்கியிருக்கக்கூடிய உரிமைகள் குறித்தும் அந்தத் திரைப்படம் பேசியிருக்கிறது, மிகச் சிறப்பாக இருக்கிறது அந்தத் திரைப்படம்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications