1986 டூ 2016.. கருணாநிதியின் 30 வருட சட்டமேலவை கனவு? நிறைவேற்றுவாரா மு.க.ஸ்டாலின்?
சென்னை: சட்டமேலவையை விரைவில் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது. கடந்த 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில் திமுக கொண்டுவர முயற்சித்தது. ஆனால் நடக்கவில்லை. ஏனெனில் அடுத்து வரும் அதிமுக சட்டமேலவை கனைவை கலைத்துவிடுகிறது, இந்த முறை நிறைவேறுமா என்பதை பார்ப்போம்.
Recommended Video
திமுக நேற்று வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் நடுத்தர வர்க்கத்தினர், ஏழைகள், முதல் தலைமுறை பட்டதாரிகள், இளம் வாக்காளர்கள் ஆகியோரை குறிவைத்து பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
இதேபோல் திமுக வெளியிட்ட முக்கியமான அறிவிப்பு சட்டமன்ற மேலவை. தாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் சட்டமன்ற மேலவை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது.

கனவு நிறைவேறவில்லை
1986ம் ஆண்டு எம்.ஜி.ஆர் ஆட்சியின்போது அதிரடியாக கலைக்கப்பட்ட மேலவையை மீண்டும் கொண்டுவர கடந்த 1989-ம் ஆண்டு முதல் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கடும் முயற்சி செய்து வந்தார் ஆனால் கருணாநிதிக்கு கடைசிவரை அந்த கனவு நிறைவேறவே இல்லை. ஒவ்வொரு தேர்தலின்போது திமுகவின் தேர்தல் அறிக்கையில் சட்டமேலவை இடம் பெறும். ஆனால் நடந்தது இல்லை.

சட்டமன்ற மேலவை
தமிழ்நாடு சட்டமன்ற மேலவை என்பது தமிழ்நாடு சட்டமன்றம் ஈரங்க அவையாக இருந்த காலகட்டத்தில், அதன் மேலவையாக இருந்தது. இந்த அவையின் உறுப்பினர்கள் நேரடி மற்றும் மறைமுகத் தேர்தல்கள் மூலமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சில உறுப்பினர்கள் மாநில ஆளுனரால் நியமிக்கப்பட்டனர். அரசியலமைப்புச்சட்டத்தின்படி மேலவை ஒரு நிரந்தர அமைப்பு. ஆறாண்டுகள் பதவிக் காலம் கொண்ட இதன் உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை ஓய்வு பெறுவார்கள்.

கருணாநிதிக்கு எதிரான முடிவு
தமிழகத்தில் 1921-ம் ஆண்டு முதல் சட்ட மேலவை செயல்பட்டு வந்தது. 465 உறுப்பினர்களாக இருந்த இதன் எண்ணிக்கை 1965ம் ஆண்டு தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 234 என நிர்ணயிக்கப்பட்டபோது, அந்த கணக்கின்படி 78 ஆகக் குறைக்கப்பட்டது. சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்த தமிழக சட்டமன்ற மேலவையை கடந்த 1986- ம் ஆண்டு அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆர் அதிரடியாக கலைத்தார். 1986-ம் ஆண்டு மே 14 ம் தேதி சட்டமன்றத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்ட இதற்கான தீர்மானம், பின்னர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டதையடுத்து மேலவை கலைக்கப்பட்டது. மேலவை கலைக்கப்பட்டபோது அதன் தலைவராக இருந்தவர் 'சிலம்புச்செல்வர்' ம.பொ.சி. எதிர்க்கட்சி தலைவராக இருந்தவர் கருணாநிதி. பழுத்த அனுபவஸ்தர்களும், தேர்ந்த அறிஞர்களும், அறிவார்ந்த நிபுணர்களும் இடம்பெற்ற அந்த அவை, எம்.ஜி.ஆரால் அரசியல் காரணங்களுக்காக கலைக்கப்பட்டதாக அப்போது விமர்னங்கள் எழுந்தது.

நிறைவேறவில்லை
இந்நிலையில் 1989-ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்தபின் மீண்டும் மேலவையைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளை கருணாநிதி மேற்கொண்டார். இதற்கான தீர்மானம், 1989-ம் ஆண்டு பிப்ரவரி 20-ம் தேதி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 1990-ம் ஆண்டு மே மாதம் 10ம் தேதி ராஜ்யசபாவில இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மக்களவையில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்படவில்லை.
இதற்கிடையே 1991ம் ஆண்டு திமுக அரசு கலைக்கப்பட்டது. அடுத்துவந்த தேர்தலில் வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வரானார். முந்தைய ஆட்சியில் திமுக கொண்டுவந்த மேலவைக்கான தீர்மானத்தை ரத்து செய்து செய்தார். அதன்பிறகு 1996 மற்றும் 2006களில் ஆட்சிக்கு வந்த கருணாநிதி சட்டமேலவையை கொண்டு முயற்சி செய்தார் இதற்கான தீர்மானம் 2010 ஏப்ரல் மாதம் 12ம் தேதி தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு, அன்றே மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கருணாநிதி தந்த அழுத்தத்தால் மத்திய அரசு இதை நாடாளுமனறத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்து நிறைவேற்றி, 2010ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்,றி அதன்படி மீண்டும் மேலவையும் அமைக்கப்பட்டது.

திமுக வாக்குறுதி
ஆனால் 2011ல் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா சட்டமேலவையை அமைக்கவே இல்லை. கடந்த 2011 முதல் 2021வரை 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத நிலையில் திமு இந்த முறை எப்படியும் சட்டமேலவையைஅமைக்க வேண்டும் என்று விரும்புகிறது. இதுபற்றி திமுக தலைவர் முக ஸ்டாலின் வாக்குறுதி அளித்துள்ளார். அவர் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் அரசியல் அறிஞர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தொழிலாளர்களின் பிரதிநிதிகள், சமூக சேவகர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஆகியோர் இடம்பெற்று, அரிய ஆலோசனைகளைக் கூறத்தக்க வகையில், தமிழ்நாட்டில் மீண்டும் சட்டமன்ற மேலவையை விரைவில் கொண்டுவர உரிய அரசியல் சட்டத்திருத்தம் செய்ய வலியுறுத்துவோம்" என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications