கரூர் சம்பவம்: பலியானவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைக்கு எதிராக வழக்கு.. தமிழக அரசு பரபர வாதம்
சென்னை: கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கியது என்பது அரசின் கொள்கை முடிவு என்றும் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டுதான் அரசு பணி வழங்கும் விவகாரத்தில் அரசு செயல்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு தரப்பில் மதுரை ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு வேலை வழங்கியது. இதற்கு எதிராக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையின் போது தமிழக அரசு பரபர வாதங்களை முன்வைத்துள்ளது. தமிழக அரசு வைத்த வாதங்களின் விவரம் வருமாறு:-

தமிழக அரசு வைத்த வாதம்
'கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலை என்பது அரசின் கொள்கை முடிவு ஆகும். அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு தான் அரசு பணி வழங்கும் விவகாரத்தில் அரசு செயல்பட்டுள்ளது' என்று தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர் தரப்பில் வைக்கப்பட்ட வாதத்தில், தமிழ்நாட்டில் மட்டும் 39 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவிக்கிறார்கள். 20 லட்சம் பேர் அரசு வேலைக்காக விண்ணப்பிக்கிறார்கள்" என்று வாதிட்டனர். உடனே அரசு தரப்பு வைத்த வாதத்தில், "மனுதாரர் தரப்பில் அவர் போட்டி தேர்வுக்கு தயாராகி வருவதாக குறிப்பிட்டாலும் அவர் தொடர்ந்து இருப்பது பொது நல வழக்கா அல்லது அவருக்கு பணி வழங்க பரிசீலிக்க கோரும் வழக்கா? என்று தெளிவு இல்லை.
உயிரிழந்த குடும்பத்தினரின் வழ்வாதாரம் கருதிதான் அரசு பணியை வழங்கியுள்ளது . தற்காலிகமாகவே பணி வழங்கப்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டு அரசாணைப்படி கருணைப்பணியை நிரந்தரம் செய்ய ஆணைய ஒப்புதலில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது" என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு பணி
தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி கரூரில் மக்கள் சந்திப்பை நடத்தினர். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பான வழக்கை உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ விசாரித்து வருகிறது. கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை விஜய், மாமல்லபுரம் ஹோட்டலுக்கு வரவழைத்து ஆறுதல் கூறியிருந்தார்.
சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு தவெக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்த நிலையில், கரூரில் பாதிக்கப்பட்டவர்களை குடும்பத்தினரை சந்தித்த முதல்வர் விஜய், அவர்களின் 31 பேருக்கு அரசு பணிக்கான பணி நியமன ஆணைகளை வழங்கினர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு வேலைக்கான பணி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் மனித நேய ஜனநாயக கட்சியின் மாநில துணை செயலாளர் சீனி அகமது மற்றும் நாம் தமிழர் கட்சியின் மீனவர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் தீரன் திருமுருகன் உள்ளிட்டோர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அரசு பணி நியமனம் தற்காலிகமானது என்றும் நீதிமன்றத்தின் மறு ஆய்வுக்கு உட்பட்டது எனவும் கூறியிருந்தது.


Click it and Unblock the Notifications
