ஜெனரேட்டரை ஆஃப் செய்தது யார்? கரூர் கூட்ட நெரிசல் வீடியோவை காட்டி விளக்கிய செந்தில் பாலாஜி
சென்னை: "கூட்டத்திற்குள் சென்று ஜெனரேட்டரை வேறு யார் ஆஃப் செய்திருக்க முடியும்? ஜெனரேட்டர் ஆஃப் செய்யப்பட்ட பிறகு கூட தெருவிளக்குகள் எரிந்தன" என கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் ஜெனரேட்டர் ஆஃப் செய்யப்பட்டது தொடர்பான வீடியோவை ஒளிபரப்பி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் கொடுத்துள்ளார்.
கரூர் கூட்ட நெரிசல் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று வீடியோ வெளியிட்டு இருந்தார். மேலும், தவெகவினர், இந்த கூட்ட நெரிசல் பலி தொடர்பாக பல்வேறு யூகங்களையும் கிளப்பி இருந்தனர். இந்த நிலையில், அதற்கு பதில் அளிக்கும் விதமாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கரூரில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், இந்தத் துயரச் சம்பவத்தில் எங்கு தவறு நடந்தது என்று எல்லோருக்கும் சொல்ல வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. கரூரில் கடந்த 27 ஆம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மேற்கொண்ட பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் மின் தடை செய்யப்பட்டதாக தவெக தலைவர் உள்பட அனைவரும் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
எல்லோரும் லைவ் கவரேஜ் செய்கிறீர்கள். ஜெனரேட்டர் அறைக்குச் சென்று வேறு யார் அதை ஆஃப் செய்ய முடியும்? 20 ஆயிரம் பேருக்கு மேல் இருக்கும் கூட்டத்தில் சிலர் போய் அசாதாரண சூழலை ஏற்படுத்த முடியுமா? பெரும் கூட்டத்திற்குள் வெளி நபர்கள் ஒருசிலர் வந்து தவறான செயல்களில் ஈடுபட்டால் அவர்களை அனுமதிப்பார்களா? அந்தக் கட்சியினர் இருக்கும் கூட்டத்திற்குள் வேறு யாரும் விஷமத்தனம் செய்ய முடியுமா? ஜெனரேட்டர் ரூம் தகரங்கள் வைத்து அடைக்கப்பட்டுள்ளது. கூட்ட நெரிசல் ஏற்பட்ட போது, ஏராளமானோர் நாலாபுரமும் சிதறி ஓடினர்.
அப்போது, அந்தப் பகுதியில் இரும்பு தகரங்கள் வைத்து அடைக்கப்பட்டுள்ள ஜெனரேட்டர் அறைக்குள் சிலர் உள்ளே புகுந்தனர். அவர்கள் அந்த ஜெனரேட்டரை அணைத்து உள்ளனர். ஜெனரேட்டர் ஆஃப் ஆன போது கூட, தெரு விளக்குகள் அணையவில்லை. அவர்கள் அமைத்த கூடுதல் விளக்குகள் தான் அணைந்துள்ளன. அதை தெளிவாகப் பாருங்கள். இதனால், விஜய் மேற்கொண்ட பரப்புரையின் போது, யாரும் மின் தடை செய்யவில்லை என்று தெரிவித்தார். மேலும், ஜெனரேட்டர் அறைக்குள் கூட்டத்தில் இருந்த சிலர் நுழைந்த வீடியோவை செந்தில் பாலாஜி திரையில் ஒளிபரப்ப செய்து விளக்கம் அளித்தார்.
தவெக தலைவர் விஜய் மாவட்ட வாரியாக மக்கள் சந்திப்பு பரப்புரை பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் பரப்புரை மேற்கொள்ளும் இடங்களில் திமுகவை சேர்ந்தவர்கள் மின் தடை ஏற்படுத்துவதாகவும், ஆம்புலன்ஸ்களை கூட்டத்துக்குள் விடுவதாகவும் அந்த கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதற்கு திமுகவை சேர்ந்தவர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் தான் கரூரில் விஜய் மேற்கொண்ட பரப்புரையின் போது, ஏற்பட்ட கூட்ட நெரிசலில் திமுகவை சேர்ந்தவர்கள் மின் தடை செய்ததாக தவெக கட்சியினர் குற்றம் சாட்டினர். இதையடுத்து, கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது மின்தடை செய்யவில்லை எனவும், விஜய் பரப்புரைக்காக வைக்கப்பட்டிருந்த ஜெனரேட்டர் ஆஃப் செய்யப்பட்டதே காரணம் எனவும் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்துள்ளார்.
மேலும், இது தொடர்பான வீடியோ காட்சிகளை செய்தியாளர்களிடம் காட்டி விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக, இந்த விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் செய்தி தொடர்பாளர் அமுதா ஐஏஎஸ் நேற்று வீடியோ காட்சிகள் மூலம் விளக்கம் அளித்திருந்தார். மின்வாரிய அதிகாரியும் இதுதொடர்பாக விளக்கம் அளித்திருந்தார்.












Click it and Unblock the Notifications