விஜய் உடன் இருந்தவர்கள் கைது செய்யப்படுவோமோ என பயந்துவிட்டார்கள்.. பத்திரிகையாளர் சிவப்பிரியன்!
சென்னை: கரூரில் தவெக தலைவர் விஜய் பிரச்சாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், 3 நாட்களுக்கு பின் விஜய் மவுனம் கலைத்துள்ளார். விரைவில் கரூர் செல்ல உள்ளதாக கூறியுள்ள விஜய், சிஎம் சார், ஏதாவது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமிருந்தால், என் மீது நடவடிக்கை எடுங்கள்.. தொண்டர்கள் மீது கை வைக்காதீர்கள் என்றும் கூறினார்.
விஜய்யின் இந்த வீடியோ புதிய விவாதமாகி இருக்கிறது. இந்த நிலையில் பத்திரிகையாளர் சிவப்பிரியன் ஒன் இந்தியா தமிழ் யூட்யூப் சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், அரசியலில் பலிகடாவாக்க்கப்பட்டுள்ளவர்கள் மக்கள்தான். விஜய்யின் பேச்சைக் கேட்க யாரும் வரவில்லை. அவரின் முகத்தை பார்க்க வந்தவர்கள். ஒருமுறையாவது பார்க்க மாட்டோமா என்று நினைத்து வந்தவர்கள்.

அரசியல்படுத்தப்படாத பெரும் கூட்டம் ஒன்று உள்ளது. அதன் விளைவு தான் கரூரில் நடந்தேறி இருக்கிறது. தவெகவினர் சொல்வதை போல் அது ஒன்றும் குறுகிய சாலை அல்ல.. இரு பக்கம் 40 அடிகள் சாலை அமைக்கப்பட்டது. தவெக செய்த முதல் தவறு 3 மணி முதல் 10 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது. ஆனால் தவெகவின் 12 மணிக்கு விஜய் வரவுள்ளதாக அறிவித்துவிட்டனர்.
இவர்கள் மாஸ் காட்டுவதற்காக அப்பாவி மக்களை பலிகடாவாக்கிவிட்டனர். விஜய் இரவு 7 மணியளவில் வேலுச்சாமிபுரத்திற்கு வந்துவிட்டார். உள்ளே வரும் போது விஜய்யின் பேருந்தில் லைட் எரியவில்லை. அவர் ஏன் லைட் ஆன் செய்யவில்லை என்று தெரியவில்லை. விஜய் முகத்தை பார்ப்பதற்காக பேருந்து அருகில் செல்ல தொடங்கிவிட்டனர். ஒரு கட்டத்தில் ஆம்புலன்ஸ் வருகிறது.
ஆம்புலன்ஸ்க்கு வழிவிட வேண்டும் என்று சிலர் மரத்திற்கு அருகில் சென்றுவிட்டார்கள். தவெகவினர் பலரும் மேல் இருந்தவாறு பார்க்க முயற்சிக்கின்றனர். மரத்தில் இருந்து பார்க்கும் போது, கிளை உடைந்து விழுகிறது. ஒரு கடையின் ஹோர்டிங் மேல் விழுந்ததால், அது இன்னும் சிக்கலாகிறது. சில சாக்கடைக்குள் விழுந்துவிட்டார்கள்.
அதிமுக அல்லது திமுக கூட்டம் நடத்தி இருந்தால், முதல் நாளே சாக்கடையை மூட சொல்லி இருப்பார்கள். அந்த சாக்கடைக்கு முன் தடுப்பு அமைத்திருப்பார்கள். இதனை தவெக ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருக்க வேண்டும். அவர்கள் செய்யவில்லை என்றால், காவல்துறை மற்றும் தமிழக அரசு செய்திருக்க வேண்டும். அதனால் தவெக மற்றும் தமிழக அரசு இரண்டும் தான் இதற்கு பொறுப்பு.
உளவுத்துறை கணிப்பு தோல்வி என்று சொல்ல முடியாது. தமிழக அரசு கொஞ்சம் கூடுதல் கவனத்துடன் இதனை அணுகி இருக்க வேண்டும். திருச்சி தொடங்கி எல்லா மாவட்டங்களிலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நடக்க வேண்டியதுதான். திருச்சி விமான நிலையம், நாகையிலேயே எவ்வளவு பெரிய பிரச்சனை நடந்தது என்று பார்த்தோம். அதனால் நடக்கட்டும் என்று விட்டுவிட்டார்களா என்ற கேள்வி எழுகிறது.
பிரச்சாரம் நடத்த அனுமதி கேட்ட அமைப்புக்கு அரசியல் அறிவு இல்லை. அதனால் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். ஏனென்றால் மக்களை காக்க வேண்டியது அரசுதான். 90 சதவிகித தவறு தவெக மேல் இருந்தாலும், 10 சதவிகித தவறு அரசு மீதும் உள்ளது. அங்கிருந்த மக்களுக்கு தண்ணீர் அளிக்கப்படவில்லை. இதனை களத்தில் இருந்தவர்களே கூறினார்கள்.
5 மணிக்கே மாவட்ட கண்காணிப்பாளர் விஜய்யிடம் பேச்சுவார்த்தை இருக்க வேண்டும். கரூர் பை-பாஸிலேயே அறிவுறுத்தி இருக்க வேண்டும்.. அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றால், கூட்டத்தை காவல்துறை ரத்து செய்திருக்க வேண்டும். அவர்கள் தான் விஜய்க்கு அனுமதி கொடுத்தவர்கள். விமர்சனங்களுக்காக 41 மக்களின் உயிரை கொடுத்துவிட முடியுமா?
விஜய் ரசிகர்கள் கல்ட் என்ற ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு சுற்றுகிறார்கள். அங்கிருந்த மக்கள் போதுமான போலீஸ் பாதுகாப்பு இல்லை என்று கூறுகிறார்கள். சாமானிய மக்கள் பொய் பேச மாட்டார்கள். இந்த இடத்தை முதலில் கொடுத்திருக்க கூடாது. ஊருக்கு வெளியில் போய் கூட்டம் நடத்துங்கள் என்று காவல்துறை சொல்லி இருக்க வேண்டும். விஜய் பேசிய போது, அசம்பாவிதம் நடந்தது.
அவர் போய்விட்டார். இப்போது தமிழக அரசுதான் ஹேண்டில் செய்து வருகிறது. விஜய் அங்கிருந்து ஓடிவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். கரூர் அரசு மருத்துவமனையில் தவெகவின் யாருமே இல்லை. விஜய்க்கு அரசியல் அனுபவம் இல்லை என்பது இந்த சம்பவத்தின் மூலம் தெரிகிறது. இந்த சூழலை கையாளக் கூடிய ஒருவரும் விஜய்யிடம் இல்லை. அவர்கள் பயந்துவிட்டார்கள். கைதாகிவிடுவோமா என்று பயந்துவிட்டார்கள்.
ஊழல்வாதிகள் என்று விஜய்யால் சொல்லப்பட்ட திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் தான் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்கிறார்கள். திருச்சியில் விஜய் செய்தியாளர்களை சந்தித்து மன்னிப்பு கேட்டு, உடனடியாக பொறுப்பேற்று இருக்க வேண்டும். திருச்சியில் இருந்து தவெகவினரை வழிநடத்தி இருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால், ஒரு தலைவருக்கு அழகு என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications