கரூர் துயரம்.. எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றி.. அரசியல் செய்யும் விஜய்.. பத்திரிகையாளர் சுவாமிநாதன்!
சென்னை: தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள வீடியோ மூலமாக எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றி இருப்பதாக பத்திரிகையாளர் சுவாமிநாதன் விமர்சித்துள்ளார். சினிமா பாணியில் முதல்வரை கேள்வி எழுப்பியதன் மூலமாக, 41 உயிர்கள் பலியான விவகாரத்தையும் அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்கிறாரோ என்ற சந்தேகம் எழுவதாக தெரிவித்துள்ளார்.
கரூரில் நடந்த விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக 3 நாட்களாக அமைதியோ அமைதியாக இருந்த தவெக தலைவர் விஜய், இன்று வீடியோ ஒன்றை 4.45 நிமிடங்களுக்கு வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், கிட்டத்தட்ட 5 மாவட்டங்களுக்கு பிரச்சாரத்திற்கு சென்றுள்ளோம். இதுமாதிரி எதுவும் நடக்கவில்லை. கரூரில் மட்டும் நடக்கிறது.

எப்படி நடக்கிறது? மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும். மக்கள் அனைத்தையும் பார்த்துகொண்டுள்ளனர் என்று தெரிவித்தார். விஜய்யின் இந்த வீடியோ பல்வேறு தரப்பினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கரூர் துயர சம்பவத்திற்கு பொறுப்பேற்று கொள்ளாமல், வருத்தம் தெரிவிக்காமல் மீண்டும் முதல்வர் ஸ்டாலினை நோக்கி பஞ்ச் டயலாக் பேசி இருப்பது விமர்சனத்தை பெற்று வருகிறது.
விஜய்யின் வீடியோ தொடர்பாக பத்திரிகையாளர் சுவாமிநாதன் ஒன் இந்தியா தமிழ் சேனலில் பேசுகையில், விஜய்யின் வீடியோவை இரு கூறுகளாக பார்க்கிறேன். தவெக தொண்டர்களுக்கு ஆறுதல் தரும் செய்திகளும் இருக்கின்றன. இன்னொரு ஆபத்தான விஷயமும் இருக்கிறது. மனம் நிறைய வலி இருக்கிறது.. அன்பு, பாசத்தால் என்னை பார்க்க வருகிறீர்கள். கரூரில் ஏன் இருக்க முடியவில்லை என்பது வரை சரிதான்.
ஒரு தலைவராக விளக்கம் கொடுக்கிறார்.. அதன்பின் அரசியல் பாதையில் விஜய் செல்கிறார். மரணம் நடந்திருக்கும் இந்த சூழலில் விஜய் செல்வதால், சாமானிய அரசியல்வாதிகளுடன் விஜய்யும் ஒருவராக கலந்துவிட்டார் என்று தோன்றுகிறது. கரூரில் மட்டும் ஏன் நடக்கிறது என்று வினா எழுப்பி இருக்கிறார். இன்னொரு பக்கம் நீதிமன்றத்தை நாடி சிபிஐ விசாரணை கோரி இருக்கிறார்கள்.
அதற்காக விஜய் காத்திருக்க வேண்டும்.. இந்த நேரத்தில் ஒரு தலைவர் பேசும் போது, அது எமோஷனலாக மாறிவிடும். முதல்வரை பார்த்து கேள்வி எழுப்புகிறார். பழிவாங்கும் எண்ணம் இருந்தால், என்னை என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என்கிறார். இது எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் தன்மையை போன்ற ஒன்றுதான்.
41 உயிர்கள் பறிபோயிருக்கும் நிலையில், விஜய் அரசியல்மயமாக்குவதற்கு முயற்சிக்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது. திமுகவினர் அரசியல் செய்தனர். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திமுக இந்த வேகத்தை காட்டவில்லை. இந்த இடத்தில் விஜய்யும் அரசியல்தான் செய்கிறார். ஏற்கனவே தவெகவினர் 2026 தேர்தலை திமுக vs தவெக என்று பேசி வருகின்றனர். அதற்கான களத்தை இதிலும் பயன்படுத்துகிறார் விஜய்.
தவெக தொண்டர்கள் உயிரிழப்பை கடந்து, திமுக எதிர்ப்பை கூர்மைப்படுத்துகிறார். விஜய் உயிரிழப்பு வலியுடன் நிறுத்தி இருக்க வேண்டும். ஆனால் சினிமா பாணியில் திமுகவை சீண்டுகிறார். தவெக தொண்டர்கள் ஏற்கனவே திமுக மீது ஒரு வருத்தத்தில் உள்ளனர். அதனை தலைவரான விஜய்யும் உறுதி செய்கிறார். இது தேவையில்லாமல் களத்தில் ஒரு வெறுப்பு மனோபாவத்தை உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications