கரூர் துயர சம்பவம்... நெரிசலில் சிக்கி பலியான 40 பேரின் உடல்களும் உறவினர்களிடம் ஒப்படைப்பு
கரூர்: கரூரில் நேற்று நடைபெற்ற விஜய்யின் பிரசார பொதுக்கூட்டத்தில் 40 பேர் பலியான சம்பவம் நாட்டை உலுக்கியுள்ளது. இந்த துயர சம்பவம் தொடர்பாக விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்ற நிலையில், 40 பேரின் சடலங்களும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று பரப்புரை முடிந்த பிறகு எங்கும் நிற்காமல் நேராக தனி விமானத்தில் புறப்பட்டு சென்னை சென்றடைந்தார். இங்கு மக்கள் 40 பேர் உயிரிழந்திருந்தாலும் விஜய் 3 மணி நேரம் கழித்தே ஆறுதல் ட்வீட்டை போட்டிருந்தார்.

இருந்தபோதிலும் விஜய் கரூரில் இருக்காமல் சென்னை சென்றதை பலரும் விமர்சித்து வந்தனர். இந்த நிலையில் விஜய் கரூருக்கு நேரில் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், இதற்காக போலீசாரிடம் அனுமதி கேட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தவெக தலைவர் விஜய் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் வகையில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளார். சனிக்கிழமை தோறும் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அவர் கரூரில் நேற்று இரவு பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள உருக்கமான அறிக்கையில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்குவதாக தெரிவித்துள்ளார். இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த வக்கீல் அணியினர் சென்னையில் நீதிபதி தண்டபாணியை சந்தித்து நேரில் முறையிட்டனர்.
"கரூர் நெரிசல் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும்" என்றும் கோரிக்கை விடுத்தனர். இதனை தொடர்ந்து நீதிபதி தண்டபாணி, "இது தொடர்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யுங்கள்" என்றும், வழக்கை நாளை பிற்பகல் விசாரிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மதுரை உயர்நீதிமன்றத்தில் திங்கட்கிழமை காலை மனுதாக்கல் செய்யப்படுகிறது.
இதற்கிடையே கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 40 பேரது அடையாளமும் காணப்பட்டு அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்கள் விவரம் வருமாறு:
கரூர் பாகநத்தம் ஒத்தப்பட்டி காலனியை சேர்ந்த தாமரைக்கண்ணன் (வயது 25), கரூர் விஸ்வநாதபுரி பகுதியை சேர்ந்த ஹேமலதா மற்றும் அவரது மகள்களான சாய் லக்ஷனா (8), சாய் ஜீவா (4), கரூர் காவலர் காலனி வடிவேல் நகரை சேர்ந்த சுகன்யா (33), கரூர் காமராஜபுரம் வடக்கு பகுதியை சேர்ந்த ஆகாஷ் (23),
கரூர் காந்திகிராமம் பகுதியை சேர்ந்த தனுஷ்குமார் (24), கரூர் பசுபதிபாளையம் மேங்காட்டு தெருவை சேர்ந்த வடிவழகன் என்கிற வடிவேல் (54), கரூர் ஏமூர்புதூர் பகுதியை சேர்ந்த சந்திரா (40), கரூர் வேலுச்சாமிபுரம் வடிவேல் நகரை சேர்ந்த குருவிஷ்ணு (2), கரூர் கோடங்கிபட்டி பகுதியை சேர்ந்த ரமேஷ் (32),
கரூர் காந்திகிராமம் பகுதியை சேர்ந்த சனுஜ் (13), கரூர் எல்.என்.எஸ். கிராமம் பாரதியார் தெருவை சேர்ந்த ரவிகிருஷ்ணன் (32), கரூர் ஏமூர்புதூர் பகுதியை சேர்ந்த பிரியதர்ஷினி (35) மற்றும் அவரது மகளான தரணிகா (14), கரூர் வேலுச்சாமிபுரம் போரூர் ரோடு பகுதியை சேர்ந்த பழனியம்மாள் மற்றும் கோகிலா (14), மண்மங்கலம் அருகம்பாளையம் அரசு காலனி பகுதியை சேர்ந்த மகேஸ்வரி (45),
கரூர் அரவக்குறிச்சி தொக்குப்பட்டிபுதூர் பகுதியை சேர்ந்த அஜிதா (21), கரூர் ராயனூர் வடக்கு பாரதியார் நகர பகுதியை சேர்ந்த மாலதி (36), கரூர் ரத்தினம் சாலையை சேர்ந்த சுமதி (50), கரூர் கருப்பாயி கோவில் தெருவை சேர்ந்த கிருத்திக் யாதவ் (7), சேலம் மாவட்டம் சுக்காம்பட்டியை சேர்ந்த ஆனந்த் (26), கரூர் பிச்சம்பட்டி தலைப்பட்டி பகுதியை சேர்ந்த விஜயராணி (42),
கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்த பாத்திமா பானு (29), கரூர் அன்புநகர் வடக்கு காந்திகிராமத்தை சேர்ந்த கிஷோர் (17), கரூர் வெங்கமேட்டை சேர்ந்த ஜெயா (55), கரூர் ஏமூர்புதூர் பகுதியை சேர்ந்த அருக்காணி (60), கரூர் வேலாயுதம்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயந்தி (43), ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை சேர்ந்த ரேவதி (52),
திருப்பூர் வெள்ளகோயில் தாராபுரம் மெயின் ரோட்டை சேர்ந்த மணிகண்டன் (33), ஈரோடு மாவட்டம் கொடுமுடி பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (34), திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வடக்கு தாலிப்பட்டியை சேர்ந்த சங்கர் கணேஷ் (45), திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் செம்மாண்டபாளையத்தை சேர்ந்த கோகுலப்பிரியா (28) உள்ளிட்ட 40 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications