கீழடி டிஎன்ஏ டெஸ்ட்.. தாழிகளில் அந்த கொலஸ்ட்ரால்.. 2500 ஆண்டுகளுக்கு முன்பே இறைச்சி உணவா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சிவகங்கை கீழடி உள்ளிட்ட தொல்லியல் தளங்களில் நடத்தப்பட்ட அதிநவீன டி.என்.ஏ டெஸ்ட்டில் 2600 ஆண்டுகள் பழமையான கீழடி மக்களின் மரபணுவும் இன்றைய தமிழக மற்றும் இலங்கைத் தமிழர்களின் மரபணுவும் அச்சு அசலாக ஒன்றுபோல இருப்பது உறுதியாகியுள்ளது. அதுமட்டுமல்ல, அகழாய்வில் கிடைத்த பானை மற்றும் தாழிகளில் படிந்துள்ள கொலஸ்ட்ராலை வைத்து, பண்டைய தமிழர்கள் இறைச்சி, பால், அரிசி மற்றும் தினை போன்ற உணவுகளை விரும்பி சாப்பிட்டு வாழ்ந்துள்ளனர் என்பதும் தெரியவந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இந்திய தொல்லியல் துறையினாலும், தமிழக தொல்லியலாளர்களினாலும் அகழாய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.. ஒவ்வொரு முறை நடத்தப்படும் அகழாய்வுகளிலும், ஒவ்வொரு கட்டத்திலும் இந்திய வரலாற்றையே மாற்றியமைக்கும் அளவுக்கு அரிய சான்றுகள் கிடைத்து வருகின்றன.

Keeladi DNA Test Keeladi Excavation Ancient Tamil Civilization Tamil Archaeology

சிவகங்கை கீழடி ஆய்வுகள்

கொந்தகையில் மனித எலும்புக் கூடுகளுடன் கூடிய 137 முதுமக்கள் தாழிகள் கண்டெடுக்கப்பட்டதை தொடர்ந்து, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மரபியல் துறைத் தலைவர் முனைவர் ஜி. குமரேசன் தலைமையிலான ஆய்வுக் குழுவினர் களத்தில் இறங்கி அதிநவீன மரபணு பகுப்பாய்வுகளை மேற்கொண்டு வந்தனர். அந்த ஆய்வில்தான், இப்போது மீண்டும் ஒரு ஆச்சரியம் தரக்கூடிய தகவல் வெளியாகி உள்ளது..

பொதுவாக காலம் கடந்து சிதைந்துபோகும் எலும்புத் திசுக்கள், தாழிகளின் சுவர்களில் உறைந்துபோன கொழுப்பு சத்துகள் மற்றும் தொல்லியல் மனிதர்களின் பற்களில் ஒட்டியிருந்த பாக்டீரியாக்கள் என்றெல்லாம் சல்லடை போட்டு சேகரிக்கப்பட்ட மாதிரிகளிலிருந்து பண்டைய டி.என்.ஏ மூலக்கூறுகள் பிரிக்கப்பட்டன.

இறைச்சி - கொழுப்புகள்

இதில் கீழடியின் கொந்தகை சுடுகாட்டிலிருந்து மட்டும் சுமார் 75,000 தரவுகளும், ஆதிச்சநல்லூரில் இருந்து 9,000 தரவுகளும், சிவகலையிலிருந்து 6,000 தரவுகளும் எனப் பல்லாயிரக்கணக்கான "அல்லீல் அதிர்வெண்" தரவுகள் நுட்பமாக பகுப்பாய்வு செய்யப்பட்டன. இந்த மரபணு குறியீடுகளை தற்கால மனிதர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்துள்ளனர்.

ஆராய்ச்சியாளர்கள் கீழடி (கி.மு. 600), ஆதிச்சநல்லூர் (கி.மு. 1000), சிவகலை (கி.மு. 3300) ஆகிய இடங்களில் கிடைத்த மனித எலும்புகளை டி.என்.ஏ (DNA) ஆய்வு செய்தார்கள். அதில் கிடைத்த ரத்த வழி மரபணுக்கள், இன்றைக்கு தமிழ்நாட்டில் வாழும் மக்கள், இலங்கையில் வாழும் தமிழர்கள் மற்றும் தென்கிழக்கு ஆசிய மக்களின் மரபணுவோடு அச்சு அசலாக ஒத்துப்போகின்றன. அதாவது, நாம் எல்லாருமே ஒரே முன்னோர்களின் வழிவந்தவர்கள் என்பது நிரூபணமாகியுள்ளது.

தோண்டி எடுக்கப்பட்ட பானைகள்

மனிதர்களை பற்றி மட்டுமல்லாமல், அந்த காலத்தில் தமிழர்கள் வளர்த்த ஆடு, மாடு போன்ற கால்நடைகள் எந்த வகையைச் சேர்ந்தவை, அவை எங்கிருந்து எங்கு கொண்டு செல்லப்பட்டன என்பதைக் கண்டறிய, அவற்றின் புரதங்களை (Protein Sequencing) ஆய்வகத்தில் ஆராய்ந்து வருகிறார்கள்.

மேலும், தோண்டி எடுக்கப்பட்ட பானைகள் மற்றும் தாழிகளின் சுவர்களில் கொலஸ்ட்ரால் அதிகம் படிந்திருந்தது. இதைக் கொண்டு, பண்டைய தமிழர்கள் உணவில் இறைச்சியை மிக அதிகளவில் விரும்பிச் சாப்பிட்டுள்ளார்கள் என்பதை ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.

அதேசமயம், வெறும் இறைச்சி மட்டுமல்லாது பால், தினை, அரிசி, தேங்காய் மற்றும் ஆமணக்கு எண்ணெய் போன்றவற்றையும் பயன்படுத்தியதற்கான உயிரி வேதியியல் சான்றுகளும் இப்போது கிடைத்துள்ளன. மேலும் கொடுமணல், சிவகலை, ஆதிச்சநல்லூர் மாதிரிகளை ஆராய்ந்ததில், 2500 ஆண்டுகளுக்கு முன்பே அரிசியுடன் நெய், பீன்ஸ், கீரை, வெள்ளரிக்காய் மற்றும் நிலக்கடலை போன்றவற்றை சேர்த்து சமைக்கும் சமையல் பண்பாடு தமிழர்களிடம் இருந்துள்ளதும் இந்த ஆய்வுகளில் நிரூபணமாககி உள்ளது.

சிவகளை இரும்புக் கருவிகள்

பண்டைய தமிழர்கள் என்ன சாப்பிட்டார்கள், எப்படி வாழ்ந்தார்கள் என்று புறநானூறு, அகநானூறு, குறுந்தொகை, பொருநராற்றுப்படை போன்ற சங்கப் பாடல்களில் ஏற்கனவே கூறப்பட்டுள்ளது. அந்த புத்தகக் குறிப்புகள்தான், இப்போது அறிவியலாளர்கள் கண்டுபிடித்துள்ள டி.என்.ஏ மற்றும் உணவு ஆராய்சி முடிவுகள் உண்மைதான் என்பதை உறுதி செய்ய உதவியாக இருந்துள்ளன.

அதேபோல, சிவகளையில் கிடைத்த இரும்புக் கருவிகள் கி.மு. 3345-ம் ஆண்டை சேர்ந்தவை. அதாவது, உலகிலேயே முதன்முதலில் இரும்பை உருக்கி பயன்படுத்திய பெருமை தமிழர்களுக்கே உண்டு என்பதற்கு இது மிகப்பெரிய சான்றாகும்.. அந்தப் பழமையான இரும்பு ஆதாரத்தோடு, இப்போது கிடைத்துள்ள இந்த டி.என்.ஏ ஆய்வுகளும் சேரும்போது, தமிழர்களின் நாகரிகம் எவ்வளவு பழமையானது என்பது இன்னும் வலுவாக நிரூபணமாகிறது.

இந்த அறிவியல் முடிவுகளை மேலும் உறுதி செய்ய, ஆய்வுக் குழுவினர் இன்னும் 2 கட்ட சோதனைகளைச் செய்யவுள்ளனர். அதன்பிறகு, இந்த ஆதாரங்களை உலகளவில் புகழ்பெற்ற அறிவியல் இதழ்களில் கட்டுரையாக வெளியிட்டு, உலக அரங்கில் தமிழரின் தொன்மையை அதிகாரப்பூர்வமாக நிலைநிறுத்த முயன்று கொண்டிருக்கிறார்கள்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+