அந்த “பாயிண்ட்”.. எடப்பாடிக்கு மலைபோல் உதவிய தமிழக அரசு! உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பரபர வாதம்
சென்னை: எம்.எல்.ஏ. பதவியில் எடப்பாடி பழனிச்சாமி நீடிப்பதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட கோ வாரண்டோ வழக்கில் தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் எடுத்துக்கொடுத்த முக்கிய பாயிண்ட் அவருக்கு உதவி உள்ளது.
முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அவர் தனது வேட்புமனுவில் சொத்து, கல்வித் தகுதி போன்ற விவரங்களை மறைத்து, தவறான தகவல்களை தெரிவித்து இருப்பதாக கூறி, அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. சுப்புரத்தினம் கோ வாரண்டோ வழக்கை தாக்கல் செய்து இருந்தார்.

வேட்புமனுவில் கல்வித் தகுதியையும், சொத்துக்களையும் மறைத்தது செயல் தவறானது என்றும், ஊழல் நடவடிக்கை எனவும் தெரிவித்து உள்ளார். வேட்புமனுவில் சொத்துக்கள் குறித்த விவரங்களை எடப்பாடி பழனிசாமி மறைத்ததுடன், எம்எல்ஏவாக பெற்ற ஊதியத்தையும் அவர் தெரிவிக்கவில்லை எனவும், சேலம் நீதிமன்றத்தில் சொத்து விவரங்களை மறைத்தது தொடர்பாக அவருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு உள்ளதாகவும், அந்த வழக்கிற்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நிலுவையில் உள்ளதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.
எனவே எடப்பாடி பழனிசாமி எடப்பாடி தொகுதி எம்.எல்.ஏ.வாக செயல்பட தடை விதிக்க வேண்டும் எனவும், எந்த தகுதியின் அடிப்படையில் எதிர்க்கட்சித் தலைவராகவும், எம்.எல்.ஏ.வாகவும் பதவியில் நீடிக்கிறார் என விளக்கமளிக்க உத்தரவிடுவதுடன், அவரை பதவி நீக்கம் செய்து அவருக்கு வழங்கிய ஊதியத்தை திரும்பப்பெற உத்தரவிட வேண்டும் எனவும் அவர் மனுவில் குறிப்பிட்டு இருக்கிறார்.
உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், வேட்புமனுவில் இந்த தகவல்களை மறைத்ததால் கோ வாரண்டோ வழக்கு தாக்கல் செய்யலாம் எனவும் வேட்பு மனுவில் தகவல்களை மறைத்துள்ளதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாகவும், எடப்பாடி பழனிசாமி இந்த குற்றச்சாட்டை மறுக்கவில்லை எனவும் வாதிடப்பட்டது.
தமிழ்நாடு அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர் சண்முகசுந்தரம், தவறான தகவலை வேட்புமனுவில் தெரிவிப்பது தகுதியிழப்பாகாது எனவும், இது தொடர்பாக தேர்தல் வழக்கு தான் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்து இருந்தார். இதனை அடுத்து, தலைமை நீதிபதி வேட்புமனுவில் தவறான தகவல் இருந்தால் தேர்தல் வழக்கு தொடரலாமே, தவிர கோ வாரண்டோ வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்றார்.
ஆனால் மனுதாரர் தரப்போ, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி இந்த வழக்கை தாக்கல் செய்ய முடியும் என தெரிவித்தது. இதனை அடுத்து, கோ வாரண்டோ வழக்கை வேட்புமனுவில் தவறான தகவல் தெரிவித்தால் தாக்கல் செய்யலாம் என்பது தொடர்பான தீர்ப்பு விபரங்களை தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், விசாரணையை நவம்பர் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.
இதில், "வேட்புமனுவில் தவறான தகவலை தெரிவிப்பது தகுதியிழப்பு ஆகாது எனவும், தேர்தல் வழக்கு மட்டுமே இது தொடர்பால் தாக்கல் செய்திட முடியும் என தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தெரிவித்த கருத்தை உயர்நீதிமன்றமும் வழி மொழிந்து, வழக்கு விசாரணையை ஒத்திவைக்க காரணமாக அமைந்து உள்ளது.












Click it and Unblock the Notifications