கிளாம்பாக்கத்தில் ஸ்கைவாக்.. ஸ்பீடு எடுத்த தமிழக அரசு.. 5,900 சதுரஅடி தனியார் நிலம் ரெடி? சூப்பர்ல
சென்னை: கிளாம்பாக்கத்தில் ஸ்கைவாக் அமைப்பது குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருக்கிறது. இது பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.
சென்னை நகருக்குள் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும்பொருட்டு, கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு பொதுப்பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமான சிஎம்டிஏ 400 கோடி ரூபாயில் புதிய புறநகர் பேருந்து முனையத்தை கட்டியது. கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து, இந்த முனையம் செயல்பட்டு வருகிறது.

ஆனால், இந்த பஸ் ஸ்டாண்டு துவக்கி வைக்கப்பட்டதிலிருந்தே, அதிருப்திகளும் வெடிக்க ஆரம்பித்தன. பேருந்து நிலையத்தில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்றும், அவசர கதியில் பேருந்து நிலையத்தை திறக்கப்பட்டுள்ளதாகவும் பயணிகள் தரப்பிலிருந்து ஆதங்கம் வெளிப்பட்டது.
போராட்டம்: முக்கியமாக, பொங்கல் பண்டிகை நேரத்தில், சொந்த ஊர்களுக்கு செல்ல போதுமான பஸ்களும் இல்லை என்றுகூறி நள்ளிரவிலேயே கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் போராட்டத்தை பயணிகள் நடத்தியிருந்தது பெரும் பரபரப்பை உண்டுபண்ணிவிட்டது. இதற்கு பிறகு தமிழக அரசு இந்த விஷயத்தில் தலையிட்டதையடுத்து, சர்ச்சைகளை முடிவுக்கு வந்தன.
இதனிடையே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான வழிகளை கண்டறிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும், 10 நாளில் அறிக்கை அளிக்க அந்தக் குழுவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தா.மோ.அன்பரசனும் சில நாட்களுக்கு முன்பு நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
பேருந்து வசதி: ஆனால், சென்னையின் பல பகுதிகளுக்கு வந்து செல்ல, மாநகர பேருந்து வசதி மட்டுமே பிரதானமாக உள்ளது. ரயில் போக்குவரத்திற்காக, பேருந்து முனையம் எதிரே புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணியும் நடந்து வருகிறது. இதனிடையே, ஜிஎஸ்டி மற்றும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது.
இவற்றை கடக்கும்போது பயணியர் விபத்தில் சிக்கும் அபாயமும் இருக்கிறது. அதாவது, ஜிஎஸ்டி சாலையின் நடுவிலேயே பஸ்களை நிறுத்தி பயணிகளை இறக்கிவிடுவதால், மாநகர பஸ்களை பிடிப்பதற்காக பயணிகளும் தங்கள் குழந்தைகளுடன் ஆபத்தான முறையில் கடக்க வேண்டியிருக்கிறது.
பயணிகள்: எனவே, பயணியர் எளிதாக சாலையை கடக்கவும், பேருந்து முனையம் - ரயில் நிலையத்தை இணைக்கவும் வசதியாக, 'ஸ்கைவாக்' என்ற ஆகாய நடைபாலம் அமைக்கப்பட உள்ளது.
இந்த திட்டத்திற்கு தேவைப்படும் 5,900 சதுர அடி தனியார் நிறுவன புன்செய் நிலத்தை கையகப்படுத்த உள்ளதாக, செங்கல்பட்டு மாவட்ட வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை தற்போது அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. நிலம் கையகப்படுத்தலால், மறுவாழ்வு, மறுகுடியமர்வு நடைமுறைகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம்: கடந்த மார்ச் மாதம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் - ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்க டெண்டர் கோரியிருந்தது தமிழ்நாடு அரசு. கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்தின் மையப்பகுதிக்கு 400 மீ நீளத்தில் ஆகாய நடைபாதையும், அமைக்கப்பட உள்ளது.
நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின் தூக்கி ஆகியவையுடன் கூடிய இந்த ஆகாய நடைமேம்பாலம் மட்டும் நடைமுறைக்கு வந்துவிட்டால், கிளாம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து பயணிகள், எளிதாக கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்தடைய முடியும்.
நம்பிக்கை: சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு மேல் இந்த ஆகாய நடைபாலம் அமைய இருப்பதால் , சாலையை ஆபத்தான முறையில் கடக்க வேண்டிய சூழ்நிலையும் ஏற்படாது என்பதால், பயணிகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications