என்ன இந்த அடி அடிக்கிறாப்ல.. இந்தியா முழுக்க ஏன் தோற்றீங்க? சட்டசபையில் காங்கிரஸை விளாசிய கேஎன் நேரு
சென்னை: சட்டசபையில் திமுக சார்பாக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு கொடுத்து பதிலடி அக்கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக பாரத் ஜோடோ யாத்திரை காரணமாகவே திமுகவுக்கு அத்தனை எம்பிக்கள், எம்எல்ஏ-க்கள் கிடைத்தார்கள் என்று காங்கிரஸ் கட்சியின் தாரகை கத்பர்ட் பேசியதற்கு, கேஎன் நேரு கொடுத்த பதிலடி வீடியோ பலராலும் பகிரப்பட்டு வருகிறது.
சட்டசபையில் திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் பேச்சுகள் சோசியல் மீடியாவில் பாராட்டுக்களை பெற்று வருகின்றன. நேற்று உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் மானியக் கோரிக்கையை தாக்கல் செய்தார். அப்போது இடைமறித்து ஆதவ் அர்ஜுனா பேசுகையில், 23 கட்சிகளின் கூட்டணியோடு தான் தேர்தலை சந்தித்தீர்கள். நாங்கள் தனியாக நின்று 108 தொகுதிகளில் வென்றுள்ளோம்.

காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இல்லையென்றால், தமிழ்நாட்டில் 50 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்க மாட்டீர்கள். திமுக இன்று எதிர்க்கட்சியாக இருப்பதற்கு காரணம் காங்கிரஸ், விசிக, ஐயூஎம்எல், கம்யூனிஸ்ட்கள் தான் என்றார். இதற்கு பதில் அளித்த திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, கூட்டணியாக நின்றுதான் வெற்றி பெற்றோம். அதனை ஒப்புக் கொள்கிறோம்.
ஆனால் எங்கள் கூட்டணியில் நின்று வெற்றி பெற்றவர்களின் ஆதரவை கொண்டு தான் இன்று ஆட்சி அமைத்துள்ளீர்கள். அவ்வளவு ரோஷம் இருந்தால், அவர்களை வெளியே அனுப்பிவிட்டு ஆட்சி நடத்துங்கள். 1980களில் துவண்டு போய் நின்ற போது காங்கிரஸ் கட்சிக்கு கை கொடுத்தது திமுக தான். திமுக இல்லையென்றால் காங்கிரஸே வந்திருக்காது.
எங்களை விட்டு தனியாக நின்று காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் எங்காவது வென்றிருக்கிறதா.. என்று கேள்வி எழுப்பினார். இதற்கு காங்கிரஸ் சட்டசபைக் குழு தலைவர் தாரகை கத்பர்ட் எழுந்து பதில் அளிக்கையில், காங்கிரஸ் கட்சியின் பாரத் ஜோடா யாத்திரை நடந்ததன் மூலமாகவே உங்களுக்கு இத்தனை எம்பிக்கள் கிடைத்தார்கள். அதுதான் உண்மை.
அன்று எங்களின் கூட்டணியால் தான் திமுகவுக்கு இத்தனை எம்பிக்கள், எம்எல்ஏக்கள் கிடைத்தது என்பதை மறுப்பதற்கு இல்லை. காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்த போது, திமுகவுக்கு பிரதிநிதித்துவம் அளித்தோம். 22 ஆண்டுகள் உங்களுடன் பயணித்தோம். இன்று எங்களுக்கான வாய்ப்பு அமைந்துள்ளது என்று கூறினார்.
இதற்கு கேஎன் நேரு பதில் அளித்த போது, காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் மட்டுமே யாத்திரை போகவில்லை. இந்தியா முழுவதும் யாத்திரை சென்றார்கள். இந்தியா முழுவதும் சென்றும் பெரிய வெற்றியை பெறவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் 10 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியை வெல்ல வைத்துள்ளோம். ஊர் முழுவதும் 2 இடங்கள் பெற்ற போது கூட, காங்கிரஸ்க்கு 10 இடம் கொடுத்தது திமுக தான் என்று பதிலடி கொடுத்தார்.
2019ல் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும், 2024ல் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி 10 இடங்களிலும் வென்றது. 2019ல் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெறவில்லை. அதேபோல் 2024ல் காங்கிரஸ் கட்சி மொத்தமாக 99 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாட்டில் கன்னியாகுமரி மாவட்டத்தில் மட்டுமே பாரத் ஜோடோ யாத்திரை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
