சென்னை தி நகரில் தங்க நகை திருடிய குடும்ப பெண் ரேகா.. காரணத்தை கேட்டு ஆடிப்போன போலீஸ்
சென்னை: சென்னை தியாகராய நகரில் உள்ள ஜவுளிக்கடையில் புதிய ஆடைகளை வாங்கிவிட்டு ரங்கநாதன் தெரு வழியாக சென்ற பெண்ணிடமும், தி நகர் உஸ்மான் சாலையில் உள்ள நகைக்கடையில் தங்க கம்மல் மற்றும் வெள்ளி கொலுசுகளை வாங்கி கொண்டு திரும்பிய பெண்ணிடமும் ஒரு பெண் நகை பறித்துள்ளார். நகை பறிப்பில் ஈடுபட்ட பெண் குடும்ப பெண் என்பதை பார்த்து ஆடிப்போனார்கள்.. கணவனை இழந்த அந்த பெண் 3 பெண் குழந்தைகளையும், தனது மாற்றுத்திறனாளி தங்கையையும் காப்பாற்ற வேண்டி திருடியதாக கூறியுள்ளார்.
சென்னையில் குடும்ப பெண்கள் கூட நகை திருடுவார்கள் என்பது உண்மையில் நம்ப முடியாததாக இருக்கிறது. ஏனெனில் திருடுவதை சிலர் வாழ்நாள் முழுவதும் வழக்கமாக வைத்துள்ளார்கள். அவர்களை பிடித்து ஜெயிலில் போட்டாலும் வெளியில் வந்து திருடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். ஆனால் சிலர் குடும்ப வறுமைக்காக திருடுகிறார்கள். வேறுவழியில்லாமல் திருடுவதாக கூறுகிறார்கள். அப்படித்தான் சென்னை திநகரில் நகை திருடிய பெண் போலீசாரிடம் கூறியுள்ளார்..

சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி அடுத்த வல்லஞ்சேரியை சேர்ந்த 41 வயதாகும் நந்தினி என்பவர் சென்னை தியாகராய நகரில் உள்ள ஜவுளிக்கடையில் புதிய ஆடைகளை வாங்கிவிட்டு ரங்கநாதன் தெரு வழியாக பஸ் ஸ்டாண்டிற்கு போய் இருக்கிறார். அப்போது கூட்டநெரிசலை பயன்படுத்தி அவர் மணிபர்சில் வைத்திருந்த தங்க சங்கிலியை யாரோ கண் இமைக்கும் நேரத்தில் திருடிச்சென்றுவிட்டார்கள். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த நந்தினி போலீசில் புகார் அளித்தார்.
இது ஒருபுறம் எனில், கொட்டிவாக்கம், இளங்கோ நகரைச் சேர்ந்த 50 வயதாகும் சசிகலா என்பவரும் தியாகராய நகர் உஸ்மான் சாலையில் உள்ள நகைக்கடையில் தங்க கம்மல் மற்றும் வெள்ளி கொலுசுகளை வாங்கி கொண்டு திரும்பிக் கொண்டிருந்தார். அவர் வாங்கிய நகைளைய யாரோ திருடிவிட்டார்கள். அவரும் மாம்பலம் போலீசில் புகார் அளித்தார். 2 பெண்களும் அளித்த புகாரின்பேரில் மாம்பலம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் 2 பேரிடமும் நகை திருட்டில் ஈடுபட்டது ஒரே பெண்தான் என்பது அவர்களுக்கு தெரியவந்தது. அவர், திருவொற்றியூர் காலடிப்பேட்டையை சேர்ந்த ரேகா (30) என்பதை கண்டுபிடித்தனர். தலைமறைவாக இருந்த ரேகாவை போலீசார் அண்மையில் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 46.50 கிராம் தங்க நகைகள் மற்றும் 144 கிராம் எடை கொண்ட 2 ஜோடி வெள்ளி கொலுசுகளை போலீசார் மீட்டனர்.
போலீஸ் விசாரணையில், திருட்டு தொழிலில் இறங்கியது குறித்து குடும்ப பெண்ணான ரேகா கூறுகையில், எனக்கு 13 வயதிலேயே கல்யாணம் ஆகிவிட்டது. 3 பெண் குழந்தைகளுக்கு தாயாக இருக்கிறேன். எனது கணவர் இப்போது உயிருடன் இல்லை. இதனால் குடும்ப பாரம் என் மீது விழுந்தது. 3 பெண் குழந்தைகளையும், எனது மாற்றுத்திறனாளி தங்கையையும் காப்பாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் ஒரு, ஜவுளி கடையில் வேலைக்கு சேர்ந்தேன். அதில் வந்த வருமானம் போதவில்லை. எனவே திருட்டு தொழிலை கையில் எடுத்தேன்.
மக்கள் அதிகம் கூடும் இடங்களில் புகுந்து, பெண்களை குறி வைத்து முககவசம் அணிந்து நகைகளை திருடி செல்ல தொடங்கினேன். அதில் நல்ல வருமானம் எனக்கு கிடைத்தது. கண்காணிப்பு கேமராவால் போலீசில் மாட்டிக்கொண்டேன். வறுமையால் தான் திருட்டு தொழிலில் இறங்கினேன்" இவ்வாறு கூறினார்.












Click it and Unblock the Notifications