கொடைக்கானலில் 10 ஆண்டுகளுக்கு பிறகு கோரமழை! 3 மணி நேரத்தில் 9 செ.மீ! பகீர் கிளப்பும் வீடியோ!
திண்டுக்கல்: கொடைக்கானலில் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு குறுகிய நேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் மலை கிராமங்கள் பல உருக்குலைந்துள்ளது. வெறும் 3 மணி நேரத்தில் 9 சென்டி மீட்டர் மழை பதிவானதாகக் கூறப்படும் நிலையில், பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு சாலைகள் சேதமடைந்துள்ளன. இப்படி ஒரு மழையை நாங்கள் பார்த்ததே இல்லை என்கின்றனர் அப்பகுதிவாசிகள். இந்நிலையில், கொடைக்கானல் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலையின் முக்கிய சுற்றுலாத் தலமாக விளங்குகிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்து வரும் நிலையில், கொடைக்கானலில் நேற்று பகல் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது.
திடீரென பெய்த கனமழையால் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. சில பகுதிகளில் மண் சரிவும் ஏற்பட்டது. இதனால் மலைப்பாதைகளில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது. கொடைக்கானலில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சியிலும் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

கொடைக்கானல் கனமழை
அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டிய வெள்ளம் தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின. இந்நிலையில், கொடைக்கானலில் இருந்து பெரியகுளம், தேனி உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் வழியில் அடுக்கம் மலை கிராமம் அமைந்துள்ளது. கனமழையின் காரணமாக பெருமாள்மலை முதல் அடுக்கம் செல்லும் சாலையில் 15-க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
மண் சரிவு
சில இடங்களில் சாலையின் ஒரு பகுதி மண்ணோடு சரிந்து விழுந்துள்ளது. மேலும், ஆங்காங்கே மரங்களும் முறிந்து விழுந்துள்ளன. பல அடி தூரத்துக்கு ஏற்பட்டுள்ள மண் சரிவால் சாலைகள் கடுமையாகச் சேதமடைந்துள்ளன. மலைப்பாதையில் ஏற்பட்டுள்ள இந்தச் சேதங்கள் வாகன ஓட்டிகளையும் பொதுமக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளன.
அடுக்கம் கிராமம்
சாலைகள் துண்டிக்கப்பட்டதால் அடுக்கம் கிராமத்துக்குச் செல்வதும், அங்கிருந்து வெளியே வருவதும் சவாலாக மாறியுள்ளது. கனமழையால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக அடுக்கம் கிராமத்துக்கான சாலைப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அக்கிராம மக்கள் அன்றாடத் தேவைகளுக்காகக் கொடைக்கானல் அல்லது பெரியகுளம் பகுதிகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தனித்தீவு
சாலை முற்றிலும் சேதமடைந்துள்ளதால் அத்தியாவசியப் பொருட்களைக் கொண்டு செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. மருத்துவத் தேவை உள்ளிட்ட அவசர உதவிகளுக்கு வெளியே செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால் என்ன செய்வது என்ற கவலையும் கிராம மக்களிடையே நிலவுகிறது. மழை ஏற்படுத்திய பாதிப்புகளால் அடுக்கம் கிராமம் வெளியுலகத் தொடர்பு துண்டிக்கப்பட்ட தனித்தீவு போலக் காட்சியளிக்கிறது. கிராமத்துக்கான போக்குவரத்தை விரைவாகச் சீரமைக்க வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது.
பொதுமக்கள் அதிருப்தி
இந்தப் பாதிப்பு நேற்று மாலை ஏற்பட்ட நிலையில், அதிகாரிகள் மீட்பு மற்றும் சீரமைப்புப் பணிகளைத் தாமதமாகத் தொடங்கியதாகப் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். சேதமடைந்த பகுதிகளைப் பார்வையிட வந்த அதிகாரிகள், செல்போன்களில் புகைப்படங்களை எடுத்துச் சென்றதாகவும், சாலைகளைச் சீரமைப்பதற்கான நிரந்தரத் தீர்வு குறித்து தெளிவான விளக்கத்தை தெரிவிக்கவில்லை என்றும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். எனவே, அடுக்கம் கிராமத்தில் உடனடியாக மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தி, சாலைப் போக்குவரத்தை மீண்டும் சீரமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.





Click it and Unblock the Notifications
