ரூமிலிருந்து எடப்பாடி இதை பார்ப்பார்.. ஸ்டாலின் தந்த வார்னிங்.. கோடநாடு வழக்கில் சிக்கிய பெரிய தடயம்
சென்னை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இதில் முக்கிய தடயம் சிக்கி உள்ளது.
கோடநாடு கொள்ளை மற்றும் கொலை வழக்கு விசாரணை தீவிரம் அடைந்துள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடி கைக்கு சென்றுள்ள நிலையில் வழக்கு விசாரணை கோணம் அப்படியே மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெயலலிதா மரணத்திற்கு பின் கடந்த 2017 ஏப்ரல் 24ல் கோடநாட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதில் எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் என்பவரும் கொள்ளையர்களால் கொல்லப்பட்டார்.

தடயங்கள் காணவில்லை: இந்த எஸ்டேட்டில் இருக்கும் சில முக்கியமான கோப்புகள் அப்போது காணாமல் போனதாக தகவல்கள் வந்தன. இந்த கோப்புகளை திருடத்தான் அங்கு கொலை நடந்தேறியதாகவும் கூறப்பட்டன. அதன்பின் கொள்ளையில் குற்றஞ்சாட்டப்பட்ட பலர் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். இந்த கோடநாடு மர்ம மரணங்கள் மற்றும் கொள்ளை பற்றி தமிழ்நாடு போலீஸ் 5 தனிப்படை அமைத்து விசாரித்து வந்தது.
தடயம்: இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி மீதும் புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ஜெயலலிதா அறையின் உடைக்கப்பட்ட பூட்டு இன்று கைப்பற்றப்பட்டது. சிபிசிஐடி செய்த விசாரணையில் இந்த பூட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் கொலை, கொள்ளை இடத்தில பல ஆவணங்கள் திருடப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட இந்த பூட்டு காரணமாக வழக்கில் பல திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வழக்கு பின்னணி: இதில் 5 தனிப்படை போலீசார் வெவ்வேறு இடங்களில் விசாரணை நடத்தி வந்தனர். கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கூட போலீசார் விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் தொடர்புடைய பலர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டனர். இந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவத்திற்கு பின் சரியாக 4 நாட்கள் கழித்து கொள்ளையில் ஈடுபட்ட கனகராஜ் விபத்து ஒன்றில் மர்மமாக மரணம் அடைந்தார்.
இவர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர். அதேபோல் இன்னொரு முக்கிய குற்றவாளி சயான் குடும்பத்தினர் விபத்தில் கொல்லப்பட்டனர். இதில் சயான் நூலிழையில் உயிர் தப்பினார். இந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு சினிமாவில் காட்டப்படுவது போல பல திருப்பங்களுடனும், புதிர்களுடனும் நகர்ந்து செல்கிறது. 5 தனிப்படை போலீசார் இந்த வழக்கை விசாரித்து வந்தனர். இந்த வழக்கில் சயான் நேரடியாக எடப்பாடி பழனிசாமி மீதே குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
எடப்பாடி பழனிசாமியை நோக்கி இவர் தனது கையை திருப்பி உள்ளார். எடப்பாடி பழனிச்சாமி சொல்லித்தான் கனகராஜ் இந்த திட்டங்களை தீட்டியதாக சயான் போலீசில் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இப்படி வழக்கில் போகஸ் எடப்பாடி பக்கம் திரும்பி உள்ளது. இந்த நிலையில்தான் வழக்கு தற்போது சிபிசிஐடி வசம் சென்றுள்ளது.
இதையடுத்து இந்த வழக்கை விசாரித்து வந்த தனிப்படை போலீசார் அது தொடர்பாக ரிப்போர்ட் ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். 1500 பக்கங்கள் கொண்ட ஆவணங்களை ரிப்போர்ட்டாக தாக்கல் செய்துள்ளனர். மூடி முத்திரையிடப்பட்ட, சீல் செய்யப்பட்ட கவரில் போலீசார் அறிக்கையை கோர்ட்டில் சமர்ப்பித்தனர். இந்த வழக்கில் சிபிசிஐடி கைக்கு விசாரணை சென்றுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் இதில் தீவிரம் காட்டுகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஸ்டாலின் பேச்சு: இந்த நிலையில், இந்த வழக்கு குறித்து தமிழ்நாடு சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் கூட சமீபத்தில் பேசினார். அதில், இது தனிப்பட்ட ஸ்டாலின் அரசு அல்ல, திமுக என்ற தனிப்பட்ட கட்சியின் அரசு அல்ல. ஒரு இனத்தின் அரசாக, 8 கோடி மக்களின் அரசாக உள்ளது. திராவிட மாடல் அரசாக திகழ்கிறது;
மக்கள் நலன், கொள்கை இவை இரண்டையும் முன்னெடுக்கும் ஆட்சியாக 2 ஆண்டுகளை நிறைவு செய்ய இருக்கிறோம். தமிழ்நாட்டில் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் குற்றச்செயல்களில் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.
இப்போது நான் பேசுவதை அவையில் இல்லை என்றாலும் எதிர்கட்சித் தலைவர் தனது அறையில் இருந்து கேட்டுக்கொண்டு இருப்பார். மக்கள் மீதே துப்பாக்கி சூடு நடத்தியது யாருடைய ஆட்சி என்பது மக்களுக்கும் தெரியும். நேற்று இந்த அவையில் எதிர்கட்சித் தலைவர் பேசுகையில் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு பற்றி பேசினார். தூத்துக்குடியில் அமைதியாக மக்கள் ஸ்டெர்லைட்டிற்கு எதிராக போராடி வந்தனர்.
100 நாட்கள் அமைதியாக நடந்த போராட்டத்தில் துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்டது யார்? முதல்வராக இருந்த போதும் அவர் சொல்லவில்லை.. எதிர்கட்சித் தலைவராக இருந்த போதும் அவர் சொல்லவில்லை. கோடநாடு வழக்கில் எதிர்க்கட்சியாக மாறியதும் சிபிஐ விசாரணைக்கு எதிர்கட்சித் தலைவர் கோரிக்கை வைத்தார். அவர்கள் ஆட்சியில் தானே இந்த குற்றச்சம்பவம் நடந்தது. அப்போது ஏன் முறையாக விசாரணை செய்யவில்லை.
இதில் மேல் விசாரணையை எதிர்க்க மாட்டேன் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, அதன்பின் மேல் விசாரணைக்கு எதிராக பேட்டி அளித்தார். கோடநாடு பங்களா என்பதும் அந்த கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் அம்மையார் பயன்படுத்திய முகாம் அலுவலகம். உங்கள் ஆட்சியிலேயே இதை நீங்கள் சரியாக விசாரிக்கவில்லை. அந்த சம்பவம் நடந்ததும் முறையாக ஆதாரங்களை சேகரிக்கவில்லை. ஆண்டுகள் பல சென்றுவிட்டதால் சில விஷயங்களை கண்டுபிடிப்பதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. ஆனாலும் சிபிசிஐடி இதில் அதிரடி வேகம் காட்டி வருகிறது.
இதில் எடப்பாடி தடுமாறி வருகிறார். சயனுக்கு திமுக வழக்கறிஞர்கள் உதவி வருவதாக சொல்கிறார் எடப்பாடி. சயன் ஏற்கனவே எடப்பாடிக்கு எதிராக டெஹல்ஹாவில் பேட்டி கொடுத்தனர். இதற்காக சயனுக்கு எதிராக எடப்பாடி வழக்கு போட்டார்.அந்த வழக்கில் இருந்து அவரை காப்பற்றினோம். கோடநாடு வழக்கில் உண்மை வெளியே வரும். திமுக இதில் சும்மா இருக்காது. இதில் உண்மை குற்றவாளிகள் யார் என்பது.. உறுதியாக சொல்கிறேன்.. நிச்சயம் சொல்கிறேன்.. சிபிசிஐடி விசாரணையில் வெளியே வரும், என்று முதல்வர் ஸ்டாலின் பேசி இருக்கிறார்.












Click it and Unblock the Notifications