கொளத்தூரில் தேர்தல் முறையாக நடக்கவில்லை.. 3 எந்திரங்கள் சரியில்லை.. நீதிமன்றத்தை நாடுவோம்.. திமுக
சென்னை: கொளத்தூர் தொகுதியில் முறையாக தேர்தல் நடக்கவில்லை என திமுக தெரிவித்துள்ளது. ஆய்வு செய்த 8 எந்திரங்களில் 3 எந்திரங்கள் சரியாக இல்லை என்றும், பூத் எண் 57 இல் உள்ள எந்திரங்களை சீல் வைத்து பாதுகாப்பாக வைக்க வேண்டும் எனவும் என்.ஆர் இளங்கோ தெரிவித்துள்ளார். மு.க ஸ்டாலின் ஆலோசனைப்படி நீதிமன்றத்தை நாடுவோம் என திமுக என்.ஆர் இளங்கோ கூறியுள்ளார்.
கொளத்தூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 14 வாக்குச்சாவடிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தது. இதையடுத்து இவிஎம் எந்திரங்கள் ஆய்வு செய்யும் பணி கடந்த 29 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.

கொளத்தூர் தொகுதி
நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமாக மு.க ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு இருந்தார். இவரை எதிர்த்து தவெக சார்பில் விஎஸ் பாபு களம் இறங்கினார். தேர்தல் ரிசல்டில் மு.க ஸ்டாலினை, விஎஸ் பாபு 8,795 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.
தேர்தல் முடிவுகள் வெளியாகி 2 மாதங்களுக்கும் மேல் ஆகியுள்ள நிலையில், கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 14 வாக்குச்சாவடிகளில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தது. இதையடுத்து, சீல் வைக்கப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்த கொளத்தூர் தொகுதிக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடந்த 29 ஆம் தேதி ஆய்வு செய்யப்பட்டது.
முறையாக தேர்தல் நடக்கவில்லை
மாநகராட்சி ஆணையர் சமீரன் முன்னிலையில் இவிஎம் இயந்திரங்கள் திறக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ உள்ளிட்டோரும் தவெக சார்பில் விஎஸ் பாபுவின் பிரதிநிதிகள், வழக்கறிஞர்கள் பங்கேற்று இருந்தனர். ஒரு நாளைக்கு 2 வாக்குச்சாவடிகள் வீதம் மொத்தம் 14 வாக்குச்சாவடிகளுக்கு 7 நாட்களாக இந்த வாக்குந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்று 4-வது நாளாக வாக்கு எந்திரங்கள் சரிபார்க்கும் பணி நடந்தது.
இந்நிலையில் திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர் இளங்கோ கொளத்தூர் தொகுதியில் தேர்தல் முறையாக நடைபெறவில்லை என கூறியுள்ளார். அவர் கூறுகையில், வாக்கு எந்திரத்தில் 2 சீல்கள் இல்லை. புதிதாக அட்ரஸ் டேக் இருந்தது. எனவே இந்த மொத்த தேர்தலிலேயுமே வாக்கு பதிவு எந்திரங்கள் சரியாக பாதுகாக்கப்படவில்லை. அல்லது சரியாக பாதுகாக்கப்படாததால் இந்த தேர்தல் முறையான தேர்தல் இல்லை என்பதை அறிவியல் பூர்வமாகவும், சட்டரீதியாகவும் தெரிந்துகொள்ள முடிந்தது.
3 எந்திரங்கள் சரியாக இல்லை
இதனை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் 30 ஆம் தேதி 19 கேள்விகளை எழுப்பி கடிதம் கொடுத்து இருக்கோம். கடந்த 3 நாட்களாக நடந்த ஆய்வினை வீடியோ பதிவு செய்து இருக்கிறோம். வாக்குச்சாவடி 57இல் உள்ள எந்திரத்தில் 2 சீல் இல்லை. எனவே இதனை சீல் வைத்து பத்திரமாக பாதுகாக்க வேண்டும். ஆய்வு செய்த 8 எந்திரங்களில் 3 எந்திரங்கள் சரியாக இல்லை. 30 சதவீதத்திற்கும் மேலாக அதில் நம்பிக்கை இல்லை.
மொத்தம் நடைமுறையிலேயே நம்பிக்கை இல்லை. இதுவரை கிடைத்து இருக்கிற சாட்சியே போதுமானது. இந்த தேர்தல் சரியான நடைமுறையில் நடக்கவில்லை என்பதற்கு. இது தொடர்பாக மு.க ஸ்டாலினின் அறிவுறைப்படி உயர் நீதிமன்றத்தையோ, அல்லது உச்ச நீதிமன்றத்தையோ நாடுவோம். பூத் எண் 57 இல் உள்ள எந்திரங்களை சீல் வைத்து பாதுகாப்பாக வைக்க வேண்டும். ஏனென்றால் நாங்கள் நீதிமன்றத்தில் இதனை சமர்ப்பிக்க வேண்டியிருக்கும்" என்று கூறினார்.
100 சதவீதம் துல்லியமாக உள்ளது
முன்னதாக சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன், உச்ச நீதிமன்றம் கொடுத்த ஆணையின் படி தேர்தல் ஆணையம் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு பணியினை செய்து வருகிறது. இவிஎம் எந்திரங்கள் மீது எந்த சந்தேகமும் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த ஆய்வானது நடந்து வருகிறது. நேற்று முன் தினம் நடந்த ஆய்வில் இதுவரை எந்த குளறுபடியும் இல்லை. 100 சதவீதம் துல்லியமாக இருந்தது.
மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ள 14 வாக்குச்சாவடிகளின் இயந்திரங்கள் மட்டும் ஆய்வு செய்யப்படும். இந்த வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் அந்தந்த கட்சி பிரதிநிதிகளிடம் எடுத்து காண்பிக்கப்படும். பின்னர் மீண்டும் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். இவிஎம் மெஷினின் நம்பகத்தன்மையை பரிசோதனை செய்வதற்காக நடைபெறும் முறை தான்" என பேசியிருந்தார்.


Click it and Unblock the Notifications
