கொளத்தூர் தவெக எம்எல்ஏ விஎஸ் பாபு அட்மிட் ஆகி இரண்டு மாதங்கள் நிறைவு! உடல் நிலை எப்படி உள்ளது?
சென்னை: கொளத்தூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ விஎஸ் பாபு மருத்துவமனையில் அட்மிட் ஆகி இரண்டு மாதங்கள் ஆகியுள்ளது. அவரது உடல்நிலை குறித்து செப். 22 ஆம் தேதிக்கு பிறகு மருத்துவமனை தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அப்டேட் எதுவும் வெளியாகவில்லை. எனவே, அவரது உடல் நிலை பற்றி வெளிப்படைத்தன்மையுடன் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட வேண்டும் என கொளத்தூர் தொகுதி மக்கள் கூறும் கருத்தாக உள்ளது.
கொளத்தூர் தொகுதியில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவர் விஎஸ் பாபு. 75 வயதான விஎஸ் பாபுவுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக விஎஸ் பாபுவை குடும்பத்தினர் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட விஎஸ் பாபு உடல் நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. ஆனால் செப்டம்பர் 22 ஆம் தேதிக்கு பிறகு விஎஸ் பாபு உடல் நிலை குறித்து எந்த அப்டேட்டும் மருத்துவமனை தரப்பில் இருந்து வெளியாகவில்லை. முதல்வர் விஜய், விஎஸ் பாபுவை நேரில் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்துவிட்டு சென்றார்.
அதேபோல, அமைச்சர்கள் அருண் ராஜ், வெங்கட ரமணன் உள்ளிட்டோரும் விஎஸ் பாபுவை நேரில் சந்தித்து நலம் விசாரித்து விட்டு சென்றனர். மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் இருந்தாலும், தற்போதுவரை அவரது உடல் நிலை குறித்து மருத்துவமனை தரப்பில் அறிக்கை எதுவும் வெளியிடப்படாமல் இருப்பதற்கு கொளத்தூர் மக்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
விஎஸ் பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்றோடு இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட நிலையிலும், அவரது உடல்நிலை குறித்த அப்டேட்கள் வெளியாகி 50 நாட்கள் ஆகிவிட்டதால், தங்கள் தொகுதி மக்கள் பிரதிநிதிக்கு என்ன ஆனது, அவர் எப்போது பூரண நலம் பெற்று வீடு திரும்புவார் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே நிலவி வருகிறது. இதற்கிடையே, கடந்த இரு தினங்களுக்கு முன்பாக விஎஸ் பாபு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுவிட்டதாக சமூகவலைத்தளங்களில் வீடியோக்கள் பரவின.
எனினும் அவை பழைய வீடியோக்கள் என்பது பின்னர் தெரியவந்தது. இது குறித்து அமைச்சர் அருண் ராஜ்ஜிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த அருண் ராஜ், விஎஸ் பாபு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து அவரது உடல் நிலை குறித்து மருத்துவர்கள் கண்காணித்து வருகிறார்கள். கூடிய விரைவில் உடல் நிலை குறித்த அப்டேட் மருத்துவமனை தரப்பில் இருந்து வெளியாகும்" என்று கூறியிருந்தார்.
கொளத்தூர் தொகுதியில் முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலினை தோற்கடித்ததால், விஎஸ் பாபு கவனம் பெற்ற எம்.எல்.ஏவானார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஎஸ் பாபு, தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது உடல் நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம், அவ்வப்போது அறிக்கை வெளியிட வேண்டும் என்பதே தொகுதி மக்களின் கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications
