நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான்.. கைவிட மாட்டான்! கழுத்து நிறைய நகையுடன் கூமாபட்டி தங்கத்துரை! சூப்பர்ல
சென்னை: கடந்த ஜுன் மாதம் உலகம் முழுவதும் ட்ரெண்டிங்கில் இருந்தார் கூமாபட்டியை சேர்ந்த தங்கதுரை. 'ஏங்க கூமாபட்டிக்கு வாங்க' என அவர் போட்ட வீடியோ உலக அளவில் வைரல் ஆனது. இந்த நிலையில் அவரைச் சுற்றி சில விமர்சனங்கள் எழுந்ததால் கடும் மன உளைச்சலில் இருப்பதாக பேசி இருந்தார். இந்த நிலையில் தற்போது பிரபலமான நகைக்கடை விளம்பரம் ஒன்றில் கழுத்து நிறைய நகைகளோடு மாடலாக நடித்திருக்கிறார் தங்கதுரை. தற்போது அவருக்கு சமூக வலைதளங்களில வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
திடீர் திடீரென சமூக வலை தளங்களில் ஏதாவது ஒரு விவகாரம் ட்ரெண்டாவது வழக்கம். அப்படித்தான் கடந்த ஜூன் மாதம் சமூக வலைதளங்களில் 'ஏங்க கூமாபட்டிக்கு வாங்க' என இளைஞர் ஒருவர் போட்ட ரீல்ஸ் அதிக அளவில் ட்ரெண்ட் ஆனது.
"ஏங்க எங்க ஊரு கூமாபட்டி சொர்க்கபூமிங்க.. தண்ணிய பாருங்க.. சர்பத் மாதிரி இருக்கும்.. 7அப் மாதிரி இருக்கும்! தனி ஐலாண்டு கூமாபட்டி.. கல்யாணம் ஆகலையா கூமாபட்டிக்கு வாங்க.. கவலையா இருக்கா கூமாப்பட்டிக்கு வாங்க.. லவ் ஃபெயிலியரா கூமாபட்டிக்கு வாங்க..! என விதவிதமாக வசனத்தோடு தங்கதுரை போட்ட வீடியோக்கள் அதிகமாக பகிரப்பட்டது.

இதை அடுத்து கூகுள் மேப் தொடங்கி பல சமூக வலைதளங்களில் கூமாபட்டி ட்ரெண்டானது. பலரும் ஆர்வத்தோடு அந்த ஊரை பற்றி விசாரிக்க தொடங்கினர். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே இருக்கும் ஒரு சின்ன கிராமம் தான் கூமாப்பட்டி. கோவிலாறு அணை, பிளவக்கல் பெரியாறு அணை ஆகிய அணைகளுக்கு முன்னதாக இது இருக்கிறது.
இதனையடுத்து தங்கதுரையின் ரீல்ஸ் வீடியோவை நம்பி பலரும் அந்த பகுதிக்கு படையெடுத்து சென்றனர். வீடியோவில் போட்டது போல கூமாபட்டியை சுற்றி எந்த நீர் நிலையிலும் இல்லை எனவும், பிளவக்கல் அணையில் குளிக்க அனுமதி இல்லை எனவும் பொதுப்பணித்துறை கூறியது. இதற்கிடையே தொடர்ந்து தொலைக்காட்சிகள் பலரும் தங்கதுரையை நேரில் சந்தித்து பேட்டி எடுத்தன.
அப்போது பேசிய அவர் பிளவக்கல் அணையை சீரமைக்க நிதி ஒதுக்கியும் தற்போது வரை பணிகள் நடைபெறவில்லை. எனவே, அணையை சீரமைத்து பூங்கா அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் போலி விளம்பரம் செய்ததாக சிலர் தங்கதுரை மீது கடுமையான விமர்சனங்களை முன் வைத்தனர். அதே நேரத்தில் பலரும் பிரமோஷன் செய்து பிற பொருட்களை விற்பனை செய்து கொண்டிருக்க தனது ஊரை உலக அளவில் புகழ் பெற செய்ய வேண்டும் என நினைத்த தங்கதுரைக்கு வாழ்த்துகளும் குவிந்தது.
இதற்கிடையே தொடர்ந்து பலரும் தனக்கு போன் செய்வதாகவும், தன்னை குறித்த நெகட்டிவ் விமர்சனத்தால் தான் மிகுந்த மன உளைச்சலில் இருப்பதாக கூறி வீடியோ வெளியிட்டு இருந்தார் தங்கதுரை. அதற்குப் பிறகு அவர் என்ன ஆனார் என்பது தெரியவில்லை. இந்த நிலையில் தற்போது பிரபலமான நகைக்கடை விளம்பரம் ஒன்றில் கழுத்து நிறைய நகைகளோடு மாடலாக நடித்திருக்கிறார் தங்கதுரை. தற்போது அவருக்கு சமூக வலைதளங்களில வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
தமிழகத்தின் பிரபலமான துணி விற்பனை மற்றும் நகை விற்பனை குழுமமான சென்னை சில்க்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்ரீ குமரன் தங்கமாளிகை விளம்பரத்தில் நடித்திருக்கிறார் தங்கதுரை. தனது வழக்கமான ஸ்டைலில் 'ஏங்க வாங்க' என பேசி அந்த வீடியோவில் அவர் ப்ரமோஷன் செய்திருக்கிறார். இது ப்ரோமோஷன் வீடியோ என்றாலும் முதன்முறையாக ஒரு சாதாரண கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் நகைக்கடை விளம்பரத்தில் நடித்திருக்கிறார். அவருக்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி எனவும், தங்கதுரை தொடர்ந்து பல உயரங்களை அடைய வேண்டும் என வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.












Click it and Unblock the Notifications