மீண்டும் கோயம்பேடு பிஸி.. கிளாம்பாக்கத்திலும் கூட்டம்.. கடகடன்னு "910" சர்ப்ரைஸ் அறிவித்த தமிழக அரசு
சென்னை: சுபமுகூர்த்தம் உள்ளிட்ட தொடர் விடுமுறை காரணமாக சிறப்பு பஸ்களை, தமிழக போக்குவரத்து துறை அறிவித்திருக்கிறது.
பணிநிமித்தம், கல்வி, உட்பட பல்வேறு காரணங்களுக்காக, சொந்த ஊரிலிருந்து பொதுமக்கள் நகரங்களுக்கு கிளம்பி செல்வது வழக்கம்.. அதன்படி, சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர் போன்ற தொழிற்நகரங்களில் வெளியூர் மக்கள் ஏராளமானோர் தங்கியிருக்கிறார்கள்.

தொடர் விடுமுறை: இவர்கள் வார இறுதி நாட்களில் அல்லது பண்டிகை நாட்களில் அல்லது தொடர் விடுமுறை நாட்களில், அவரவர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதும் வழக்கம்..
அதுவும் இல்லாமல் இப்போது கோடை விடுமுறை நடந்து வருவதால், பலரும் சுற்றுலா தலங்களுக்கு சென்று வருகிறார்கள்.. இதுபோன்ற சமயங்களில் பஸ்கள், ரயில்கள் என எல்லா இடங்களிலும் நெரிசல் காணப்படும்..
தெற்கு ரயில்வே: எனவே, பயணிகளின் வசதிக்காக, போக்குவரத்துக் கழகமும், தெற்கு ரயில்வேயும் பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகின்றன.. ஒவ்வொரு தருணத்திலும், சிறப்பு பஸ்களையும், சிறப்பு ரயில்களையும் இயக்கி வருகின்றன.. அந்த வகையில், இந்த முறையும் ஸ்பெஷல் பஸ்களை தமிழக போக்குவரத்து துறை அறிவித்திருக்கிறது.
இதற்கு இன்னொரு காரணமும் உள்ளது.. வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பகல் நேர பயணத்தை தவிர்த்து இரவில் பயணிக்கிறார்கள்.. தற்போது சுபமுகூர்த்த நாட்களும் வரப்போகின்றன.. அதாவது, 3 மற்றும் 5-ந்தேதி விசேஷ நாட்களாக இருப்பதால் வெளியூர் பயணம் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால்தான், சென்னையில் இருந்தும் பிற இடங்களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சிறப்பு பஸ்கள்: இதுகுறித்து வெளியாகியிருக்கும் அறிவிப்பில், "வருகிற வெள்ளிக்கிழமை பயணம் செய்ய 6 ஆயிரம் பேரும், சனிக்கிழமை பயணத்திற்கு 7 ஆயிரம் பேரும் முன்பதிவு செய்துள்ளனர். கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 3-ந்தேதி 290 பஸ்களும், 4-ந்தே 365 பஸ்களும் இயக்கப்படுகிறது.
அதேபோல, கோயம்பேட்டில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 3,4-ந்தேதியில் 55 பேருந்துகளும் இயக்க இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தினசரி இயக்கக்கூடிய 2,100 பஸ்களுடன் கூடுதலாக இந்த சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. மேலும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு கோவையில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 200 சிறப்பு பஸ்களும் இயக்கப்பட உள்ளது.
முன்பதிவு: 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) சொந்த ஊர்களில் இருந்து சென்னை திரும்ப அனைத்து இடங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.. எனவே கூட்ட நெரிசலை தவிர்க்க www.tnstc.in. மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்க வேண்டும்" என்று அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் மோகன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications