கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் யார் அது? போலீஸ் வளையத்தில் இருந்தபோதே நடந்த சம்பவம்.. ஆடிப்போன சென்னை
சென்னை: கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. கொள்ளையை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார் திருடன்.. ஆனால், அதற்குள் போலீசார் விரைந்து வந்து, கொள்ளையனை மடக்கி பிடிக்க முயன்றனர்.. அப்போது மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நடந்து விட்டது.. இதுகுறித்த விசாரணையையும் போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
பிற மாநில பஸ்கள், புதுச்சேரி, காஞ்சிபுரம், பெங்களூரு பேருந்துகள் வந்து செல்லும் கோயம்பேடு பேருந்து நிலையம், மெட்ரோ ரயில் வசதியுடன் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும்.

பேருந்து நிலையத்தில் தொடர் திருட்டு சம்பவங்கள்
அத்தனை பரபரப்பு இருந்தாலும், கோயம்பேடு பகுதியில் அடிக்கடி திருட்டு, வழிப்பறி, குடிபோதையில் தகராறு உள்ளிட்ட குற்றச்சம்பவங்கள் மற்றும் சட்டவிரோத செயல்கள் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதனைத் தடுக்க கே11 கோயம்பேடு காவல் நிலைய போலீசார், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ட்ரோன் கேமரா மூலம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
கூட்டத்தை கண்காணித்த போலீசார், சந்தேகத்திற்குரிய வகையில் சுற்றித்திரிந்த நபர்களைப் பிடித்து விசாரணை நடத்தியதுடன், அவர்களை அங்கிருந்தும் அப்புறப்படுத்தியிருந்தனர்.. எனினும், மீண்டும் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு பகுதியில் திருட்டு சம்பவங்கள் தலைதூக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு
வண்டலூரை அடுத்த ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளர் அருள் (வயது 35), நேறுறு முன்தினம் இரவு தன்னுடைய பைக்கில் கோயம்பேடு 100 அடி சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். அப்போது பலத்த மழை கொட்டியது.. இதனால் மழையிலிருந்து ஒதுங்குவதற்காக, கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்குள் நுழைந்தார்.. ஓட்டேரியிலிருந்து பைக் ஓட்டி வந்ததாலும், நள்ளிரவு ஆகிவிட்டதாலும், அசதி ஏற்பட்டு, அந்த பஸ் ஸ்டாண்டிலேயே படுத்து தூங்கி விட்டார்.
நள்ளிரவு சுமார் 1 மணி அளவில், தூங்கிக் கொண்டிருந்த அருளின் அருகே நைசாக வந்து உட்கார்ந்த மர்மநபர் ஒருவர், அவரது சட்டைப் பையில் வைக்கப்பட்டிருந்த ரூ.2800 ரொக்கப் பணம் மற்றும் 2 விலை உயர்ந்த செல்போன்களை திருடிக்கொண்டு அங்கிருந்து தப்பியோட முயன்றுள்ளார்..
கழுத்தை அறுத்துக்குவேன்
அருள் தூங்கி கொண்டிருந்தாரே தவிர, பஸ் ஸ்டாண்டில் இருந்தவர்கள் இதை கவனித்து விட்டனர்.. உடனே அந்த நபரை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். இதுகுறித்து உடனடியாக கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு போலீசாருக்கும் தகவல் தந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் சபாநாயகம் மற்றும் காவலர் பாண்டிச்செல்வம் ஆகியோர், கொள்ளையனை பொதுமக்களிடம் இருந்து மீட்டு முறைப்படி கைது செய்து ஸ்டேஷனுக்கு அழைத்து செல்ல முயன்றனர்... உடனே அந்த திருடன், தன் பாக்கெட்டில் மறைத்து வைத்திருந்த கத்தியை திடீரென வெளியில் எடுத்து, "யாராவது என் கிட்ட வந்தால் கழுத்தை அறுத்துக்குவேன்" என்று வெறித்தனமாக கத்தினார்.. அத்துடன், தன்னுடைய கைகள், நெஞ்சு பகுதியில் அதே கத்தியால் சரமாரியாகவும் குத்திக்கொண்டார்.
ரத்தம் சொட்டச் சொட்ட
ரத்தம் சொட்டச் சொட்ட கையில் கத்தியுடன் மிரட்டிய திருடனை கண்டு, போலீசாரும், பொதுமக்களும் நிலைகுலைந்து போனார்கள். திருடனை எப்படிக் கட்டுப்படுத்துவது என்று யோசிப்பதற்குள், போலீசாரின் கவனத்தை திசைதிருப்பி மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பியோடிவிட்டார் அந்த திருடன்.
பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த கோயம்பேடு பேருந்து நிலையத்தில், போலீஸ் பிடியில் இருந்த கொள்ளையன் தனக்குத்தானே கத்தியால் குத்திக் கொண்டதும், தப்பியோடியதும், பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி விட்டது. ஆனால், தப்பியோடிய கொள்ளையன் யார்? என கோயம்பேடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. பஸ் ஸ்டாண்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தும் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டுள்ளனர்...!!


Click it and Unblock the Notifications
