குஷ்புவுக்கு பாஜக கொடுத்த கவுரவம்... தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளராக நியமனம்..!
சென்னை: பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளராக குஷ்பு நியமிக்கப்பட்டுள்ளார்.
இதற்கான அறிவிப்பை பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இன்று பிற்பகல் வெளியிட்டுள்ளார்.
தம்மை கவுரவப்படுத்தும் வகையில் செயற்குழு சிறப்பு அழைப்பாளராக நியமிக்கப்பட்டதற்கு ட்விட்டர் மூலம் கட்சி தலைமைக்கு குஷ்பு நன்றி தெரிவித்துள்ளார்.

குஷ்புவுக்கு பதவி
பாஜகவின் நடவடிக்கைகளில் இருந்து சில நாட்களாக ஒதுங்கியே இருந்த குஷ்புவுக்கு முக்கியப் பதவி திடீரென தேடி வந்திருப்பது சக கட்சியினரை வியப்படைய வைத்துள்ளது. உத்திரப் பிரதேசத்தில் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து நேற்று தான் ட்விட்டரில் விளாசியிருந்தார். விவசாயிகள் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இதையடுத்து குஷ்பு பாஜகவில் அதிருப்தியாக இருப்பதாகவும், இதனால் தான் அவர் கட்சி செயல்பாடுகளில் இருந்து கூட ஒதுங்கியே இருந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

செய்தித்தொடர்பாளர்
குஷ்புவுக்கு ஏற்கனவே பாஜக தலைமை தேசிய செய்தித் தொடர்பாளர் என்ற பொறுப்பை கொடுக்க முன் வந்தது. ஆனால் அந்தப் பொறுப்பு தனக்கு வேண்டாம் எனக் கூறி ஒதுங்கிக்கொண்டார் குஷ்பு. இதற்கு காரணம் விவசாயிகள் உள்ளிட்ட இன்னும் பல விவகாரத்தில் கட்சி நிலைப்பாட்டுடன் அவர் வேறுபட்ட காரணம் தான் எனக் கூறப்படுகிறது. எல்.முருகன் பாஜக மாநிலத் தலைவராக இருந்த போது குஷ்புவுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் இப்போது சற்று குறைந்திருப்பதும் கவனிக்கத்தக்கது.

அவசியம்
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு பதில் அளிப்பதற்கு குஷ்பு போன்ற நபர்கள் கட்சிக்கு அவசியம் தேவை எனக் கருதிய பாஜக மேலிடம், வாலண்டியராக வந்து இப்போது முக்கியப் பொறுப்பு கொடுத்துள்ளது. பாஜக தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளராக குஷ்புவுடன் சேர்த்து ஹெச்.ராஜாவும் நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்ககூடிய செயற்குழு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர் என்ற முறையில் குஷ்பு கலந்துகொண்டால் நிச்சயம் தனது மனதில் தோன்றிய கருத்தை ஒளிவுமறைவின்றி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொன்.ராதாகிருஷ்ணன்
இதனிடையே தமிழகத்தில் இருந்து முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்திற்கான பிரதிநிதித்துவத்தில் இவருக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. பொன்.ராதாகிருஷ்ணனுக்கு ஆளுநர் பதவி கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கட்சிப் பதவி கொடுக்கப்பட்டிருப்பது அரசியல் களத்தில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications