பூத்தது பூந்தமல்லி.. குத்தம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு எப்போ வரும் தெரியுமா? குத்தம்பாக்கத்தில் குளுகுளு
சென்னை: தமிழகத்தில் முற்றிலுமாக குளிரூட்டப்பட்ட பஸ் ஸ்டாண்டு குத்தம்பாக்கத்தில் ரெடியாகி கொண்டிருக்கிறது.. இது எப்போது திறக்கப்படுகிறது தெரியுமா?
கடந்த 2019லேயே குத்தம்பாக்கம் பஸ் ஸ்டாண்டுக்கான அறிவிப்பு வெளியாகிவிட்டது.. இதற்காகவே, 24.8 ஏக்கர் நிலம் பெறப்பட்டது.. 336 கோடி ரூபாயில், 5 லட்சம் சதுர அடியில், 2021 பிப்ரவரியில், இந்த பஸ் ஸ்டாண்டு கட்டும் பணிகளும் ஆரம்பமாகின.

கோயம்பேட்டிலிருந்து, இந்த குத்தம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு 23 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது.. பூந்தமல்லியில் இருந்து 10 கிமீ தூரம் என்கிறார்கள்..
வசதிகள்: இப்போது அந்த திட்டம் திருத்தியமைக்கப்பட்டு, கூடுதலாக ஒரு தளத்துடன், பாத்ரூம் வசதி, பணியாளர்கள் ஓய்வறை போன்ற கூடுதல் வசதிகளுடன், மொத்தம் 396 கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடந்து வருகின்றன.
மேற்கு மாவட்டங்களான, வேலூர், கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் இதன் வழியே கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்கள் சென்று வரும் பஸ்களுக்காகவே, இந்த பஸ் ஸ்டாண்டு கட்டப்பட்டு வருகிறது.
இதைத்தவிர, தர்மபுரி, ராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களுக்கும் இங்கிருந்து பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. மொத்தத்தில், 136 பஸ்கள் நிறுத்துவதற்குரிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள்.
குத்தம்பாக்கம்: இப்போது விஷயம் என்னவென்றால், கிளாம்பாக்கத்தை போலவே, இந்த குத்தம்பாக்கம் பஸ் ஸ்டாண்டிற்கு செல்வதற்கு ரயில் வசதியோ, மெட்ரோ வசதியோ, இதுவரை இல்லை.. இப்போது கிளாம்பாக்கத்துக்கு செல்வதற்கு மக்கள் எப்படி, மாநகர பஸ்கள், ஆட்டோ, ஊபர், ஓலா போன்றவற்றை பயன்படுத்துகிறார்களோ, அதுபோலவேதான், இந்த குத்தம்பாக்கத்துக்கும் செல்ல வேண்டியிருக்குமாம்.
நசரத்பேட்டை வரை மெட்ரோ ரயில் இருக்கிறது என்றாலும், குத்தம்பாக்கம் வரை நீட்டிக்க வாய்ப்புள்ளது.. ஏற்கனவே, கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு விவகாரம் இன்னும் முடியாமல் உள்ளது. கோர்ட் வரை விவகாரம் சென்றுள்ளது.. சட்டசபையிலும் இதுகுறித்த விவாதங்கள் வெடித்து வருகிறது. கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டில் பயணிகள் போராட்டமே செய்துவிட்டனர்.
வசதிகள்: எனவே, இந்த குத்தம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு செயல்பாட்டுக்கு வருவதற்கு முன்பேயே, அங்கு தேவையான அனைத்து கட்டமைப்புகளையும் , வசதிகளையும் தயாராக வைத்திருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. இணைப்பு போக்குவரத்தை அதிகப்படுத்தினாலே வரக்கூடிய இடர்களை தடுத்துவிடலாம் என்கிறார்கள்.
வருகிற டிசம்பருக்குள் இந்த வேலைகள் எல்லாம் முடிக்கப்பட்டு பஸ் ஸ்டாண்டு செயல்பாட்டுக்கு வரும் என்று அமைச்சர் சேகர்பாபு ஏற்கனவே கூறியிருக்கிறார்.
அப்படியானால், கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு போலவே, வரும் பொங்கல் பண்டிகைக்கு இந்த குத்தம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு திறக்கப்படும் என தெரிகிறது... இந்த குத்தம்பாக்கம் பஸ் ஸ்டாண்டும் திறக்கப்பட்டுவிட்டால், வடமாவட்ட பயணிகளுக்கு வரப்பிரசாதமாக இது அமையும் என நம்பப்படுகிறது.. அத்துடன் நெரிசல் குறைவதுடன், சென்னையின் கம்பீரம் மேலும் நிமிரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications