காதல் திருமணம்! சிறுவன் கடத்தல் வழக்கு! கே.வி. குப்பம் எம்எல்ஏ ஜெகன் மூர்த்தி எங்கே?
சென்னை: காதல் திருமணம் செய்த இளம்பெண்ணை மீட்க, காதலனின் தம்பியான 17 வயது சிறுவனை கடத்திய வழக்கில் கே.வி.குப்பம் எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை நடத்த அவரது வீட்டிற்கு திருவள்ளூர் எஸ்பி சென்ற போது அவர் வீட்டில் இல்லை என்பதாலும், அவருடைய போன் ஸ்விட்ச் ஆப் என்றதாலும் அவர் எங்கே என போலீஸார் தேடி வருகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம், களாம்பாக்கத்தை சேர்ந்தவர் லட்சுமி (44). இவர் கணவர் ஏற்கெனவே இறந்துவிட்டார். இவருக்கு இரு மகன்கள் உள்ளனர். மூத்த மகன் தனுஷ் (23). இவர் இன்ஸ்டாகிராம் மூலம் தேனியை சேர்ந்த விஜயஸ்ரீ (21) என்பவருடன் பழகியுள்ளார்.

நாளடைவில் இது காதலாக மாறியதாக தெரிகிறது. இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும் காதலில் உறுதியாக இருந்தனர். இவர்களது காதல் விஜய் ஸ்ரீயின் குடும்பத்தினருக்கு தெரியவந்தது. இதனால் அவருடைய தந்தை வனராஜ் (55) தனது மகளின் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
விஜயஸ்ரீ
அவர் குடும்பத்தில் உள்ளவர்களும் விஜயஸ்ரீயை கடுமையாக கண்டித்துள்ளனர். காதல் திருமணத்திற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிப்பதால், இனி நம்மால் தனுஷுடன் சேர்ந்து வாழ முடியாது என விஜயஸ்ரீ நினைத்தார். இதையடுத்து "வீட்டை விட்டு வெளியே சென்று நாம் திருமணம் செய்துக் கொண்டு மகிழ்ச்சியாக வாழலாம்" என்பதை தனுஷிடம், விஜயஸ்ரீ தெரிவித்தாராம்.
வீட்டை விட்டு வெளியேறிய ஜோடி
திட்டமிட்டபடி இருவரும் வீட்டை விட்டு வெளியே சென்றனர். அதாவது விஜயஸ்ரீயை தேனியில் இருந்து அழைத்து வந்த தனுஷ், கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி சென்னையில் பதிவு திருமணம் செய்து கொண்டனர். இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.
வீட்டில் கடும் எதிர்ப்பு
இந்த நிலையில் விஜய் ஸ்ரீ, வீட்டில் இல்லாததால் வீடே இரண்டாகியுள்ளது. இதனால் தனுஷ் மீது விஜய ஸ்ரீயின் குடும்பத்தினருக்கு ஆத்திரம் ஏற்பட்டது. தங்களுக்கு தெரிந்த இடங்களில் எல்லாம் விஜய ஸ்ரீயை தேடியும் அவர் கிடைக்கவில்லை.
மகளை மீட்க முயற்சி
இதையடுத்து தனக்கு தெரிந்த தொடர்புகளை பயன்படுத்தி மகளை மீட்டு விடலாம் என விஜயஸ்ரீயின் தந்தை கணக்கு போட்டுள்ளார். இதற்காக வனராஜ், மதுரையைச் சேர்ந்த மகேஸ்வரி (55) என்ற பெண்ணை அணுகியுள்ளார். மகேஸ்வரிக்கு திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த அரசியல் பிரபலங்கள், வழக்கறிஞர்களை தெரியும் என்பதால் எப்படியும் மகளை மீட்கலாம் என உறுதி கொடுத்துள்ளார்.
சீனுக்குள் வந்த ஜெகன்மூர்த்தி
பூந்தமல்லி ஆண்டரசன்பேட்டையை சேர்ந்தவரும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவருமான கே.வி. குப்பம் எம்எல்ஏ பூவை ஜெகன்மூர்த்தியிடம் சொல்லி மகளை மீட்கும் முயற்சியில் வனராஜ் தீவிரப்படுத்தியுள்ளார். இதனால் தனுஷின் தாய்க்கு அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள் மிரட்டி, எப்படியாவது விஜய ஸ்ரீயை ஒப்படைக்க வேண்டும் என மிரட்டினராம். இதனால் தனுஷின் தாய் லட்சுமி என்ன செய்வது என தெரியாமல் திகைத்துள்ளார்.
மிரட்டல்
இந்த நிலையில் வனராஜ், தனது உறவினர்களான மணிகண்டன் (46), கணேசன் (47) ஆகியோருடன் வாகனங்களில் ஆட்களை திரட்டி கொண்டு திருவள்ளூருக்கு சென்றாராம். பூவை ஜெகன்மூர்த்தி சொன்னபடி, பூந்தமல்லியை அடுத்த துத்தம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வழக்கறிஞர் சரத்குமார் (35) என்பவரை சந்தித்தனராம்.
தாயை மிரட்டிய கும்பல்
பின்னர் கடந்த 6ஆம் தேதி நள்ளிரவு கிளாம்பாக்கத்திற்கு சென்று, அங்கு தனுஷை தேடினராம். அங்கு அவர் இல்லை என்பதால் லட்சுமியை மிரட்டினாராம். ஆனால் லட்சுமியோ தனக்கு எதுவும் தெரியாது என கூறினாராம். இதனால் ஆத்திரமடைந்த வனராஜ், அங்கிருந்த தனுஷின் தம்பி 17 வயது சிறுவனை காரில் கடத்தி சென்றனர்.
போலீஸில் புகார்
தனுஷையும் விஜய ஸ்ரீயையும் ஒப்படைத்தால் மட்டுமே சிறுவனை விடுவிப்போம் என அந்த தாயிடம் மிரட்டிவிட்டு சென்றனராம். இதனால் லட்சுமி, 100-க்கு போன் செய்து விவரத்தை தெரிவித்தார். இந்த புகாரின் பேரில் விசாரணையை போலீஸார் தொடங்கினர்.
5 பேர் கைது
இதையறிந்த வனராஜ், அந்த சிறுவனை அடுத்த நாளே அதிகாலை கொண்டு வந்து வீட்டருகே இறக்கிவிட்டுச் சென்றாராம். இந்த நிலையில் தனிப்படை போலீஸார் வனராஜ், மணிகண்டன், கணேசன், மகேஸ்வரி, சரத்குமார் ஆகிய 5 பேரை இந்த கடத்தல் வழக்கில் நேற்று கைது செய்தனர்.
பூவை ஜெகன்மூர்த்தி வீடு
அவர்களை தொடர்ந்து புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் எம்எல்ஏவுமான ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை நடத்த அவரது வீட்டிற்கு திருவள்ளூர் மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாள் தலைமையிலான திருவாலங்காடு போலீஸார் சென்றனர்.
தலைமறைவு
அப்போது வீட்டின் கேட்டை பூட்டிய புரட்சி பாரதம் கட்சியினர், போலீஸாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை கட்டுப்படுத்திய போலீஸார் வீட்டிற்குள் சென்றனர். அங்கு பூவை ஜெகன்மூர்த்தி இல்லை. இதனால் அவரை தனிப்படை அமைத்தும் தேடி வருகிறார்களாம்.












Click it and Unblock the Notifications