“ஸ்டாலின் பயத்துல உறைஞ்சுபோய் கிடக்காரு.. அமித்ஷா வருகையால் திமுக அரண்டுபோச்சு”: சொல்வது எல்.முருகன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகையால் திமுகவினர் அரண்டு போயுள்ளதாகவும், ஜம்பம் பேசும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயத்தில் உறைந்து போயிருக்கிறார் என்றும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.

தமிழக மக்கள் சட்டசபை தேர்தலில் முடிவுரை எழுதி, திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பப்போவது உறுதி, அதுவரை நமக்கு தூக்கமில்லை என எல்.முருகன் கூறியுள்ளார்.

L Murugan Slams DMK Says CM Stalin Frozen with Fear After Amit Shah s Visit

எல்.முருகன் பதிலடி

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று மதுரையில் நடந்த பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். அப்போது, 2026ல் திமுக ஆட்சியை அகற்றப்போவது உறுதி என சூளுரைத்தார். இதற்கு திமுக தரப்பில் எதிர்வினைகள் எழுந்தன. இந்நிலையில், திமுகவுக்கு பதிலடி கொடுத்துள்ளார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன்.

பயத்தில் உறைந்துபோய்விட்டார் ஸ்டாலின்

மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் தமிழக வருகையால் ஒட்டுமொத்த திமுகவும் அரண்டுபோயிருக்கிறது. எத்தனை 'ஷாக்கள்' வந்தாலும் தமிழகத்தில் திமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்று ஜம்பம் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயத்தில் உறைந்து போயிருப்பது தெரிகிறது.

மத்திய அமைச்சர் அமித் ஷா பேச்சால் நடுங்கிப் போயிருக்கும் திமுகவினரின் பிதற்றல் பேச்சுக்களையும், அறிக்கைகளையும் பார்த்தாலே அனைவருக்கும் தெரிகிறது. திமுக ஆட்சிக்கு முடிவு கட்ட நாள் குறிக்கப்பட்டு விட்டது. பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி, அதில் 10 சதவீதத்தை கூட செய்யாமல் வரலாறு காணாத ஊழல் செய்து, மக்கள் பணத்தைக் கொள்ளையடித்து குடும்ப ஆட்சி நடத்தி வரும் மு.க. ஸ்டாலின், தனது ஆட்சியின் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்.

திமுகவினர் சிறைக் கம்பிகளை எண்ணப்போவது உறுதி

இந்தக் கொடூர ஆட்சியின் அவலங்களால் தமிழக மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். மதுபான ஊழலில் திளைத்து பலகோடி ரூபாய் மக்கள் பணத்தை சூறையாடிய டில்லி முதலமைச்சராக இருந்த கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சிக்கு எப்படி முடிவு கட்டப்பட்டதோ, அதேபோன்று தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் உறுதி என்று சூளுரைத்து இருக்கிறார் அமித் ஷா.

ஆட்சியில் இருக்கும் தி.மு.க ஊழலில் திளைத்துக் கொண்டு இருக்கிறது. டாஸ்மாக்கில் 35 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக ஊழல் செய்து மக்கள் பணத்தை சுரண்டி கொள்ளையடித்து கொண்டிருக்கும் திமுக ஆட்சியும், டெல்லி வழியில் முடிவுக்கு வரப்போவது உறுதி. ஆம் ஆத்மி தலைவர்களைப் போலவே திமுகவினரும் சிறைக் கம்பிகளை எண்ணப்போவதும் உறுதி.

கொடூர ஆட்சி

இதற்கு கட்டியம் கூறும் நிகழ்வாக அமைந்துள்ளது அமித் ஷாவின் தமிழக வருகை. பாஜக- அதிமுக கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைக்கப்போவது திண்ணம். ஏழை மக்களுக்காக பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கொடுக்கும் பணத்தை, தமிழகத்தின் நலனுக்கு செலவு செய்யாமல், ஏழை எளிய மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காமல் தடுத்து வரும் திமுக அரசை வீட்டுக்கு அனுப்பும் நாளை எதிர்பார்த்து தமிழக மக்களும் காத்து இருக்கின்றனர்.

திமுக ஆட்சியில் ஏழைகள் விலைவாசி ஏற்றத்தாலும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டும் சொல்லொண்ணா துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். அடியோடு கெட்டுப்போன சட்டம்- ஒழுங்கு, பாலியல் சம்பவங்களால் வெளியே நடமாட முடியாமல், பெண்கள் வீட்டிற்குள் முடங்கிப்போகும் சூழல், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மூலம் கரைபுரண்டு ஓடும் மதுபானம், போதைப்பொருட்களால் சீரழிவு, வேலைவாய்ப்பு இல்லாமல் தவிக்கும் இளைஞர்கள் என்று, திமுகவின் கொடூர ஆட்சியை தினந்தோறும் தமிழக மக்கள் அனுபவித்து வருகின்றனர்.

கோடி கோடியாக குவிக்கின்றனர்

திமுக ஆட்சியில் பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகள் ஒன்றல்ல, இரண்டல்ல. பாதிக்கப்பட்ட மக்களையே குற்றவாளிகளாக சித்தரித்து அவர்களுக்கு எதிராகவே வழக்கு தொடுத்து கைது செய்யும் கொடூர மதியாளர்களின் ஆட்சி தான் இது.

தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் அப்பாவி மக்கள் உயிரை இழக்கின்றனர். சாராய ஆலை நடத்தும் திமுக தலைவர்கள் கோடி கோடியாக குவிக்கின்றனர். டாஸ்மாக் மூலம் அவர்கள் விற்கும் மதுபானத்தை குடிக்கும் மக்கள், தங்கள் பணத்தையும் உயிரையும் இழந்து கொண்டிருக்கின்றனர்.

தமிழை வைத்து அரசியல் செய்யும் திமுக, மருத்துவம், பொறியியல் உட்பட உயர் கல்வியை தமிழில் கற்க இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்ற கேள்விக்கு இன்று வரை திமுக-வினரால் பதில் சொல்ல முடியவில்லை.

திமுக அரசுக்கு முடிவுரை

திராவிட மாடல் என்று வீராப்பு பேசி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று வரை இதற்கு பதில் சொல்ல திராணியில்லை. பாஜக எதிர்ப்பு என்ற பெயரில் பூச்சாண்டி அரசியல் செய்து வரும் மு.க.ஸ்டாலினின் நாடகங்களை திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் வேண்டுமானால் நம்பலாம். திமுகவினரின் போலி திராவிட மாடல் ஏமாற்று அரசியலை தமிழக மக்கள் நம்பப்போவதில்லை.

அறுபடை வீடான திருப்பரங்குன்றம் மலையை சிக்கந்தர் மலை என்று சொல்லும் திமுக அரசுக்கு, வரும் 22 ஆம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு பதிலடி கொடுக்கும். இந்த மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் பல லட்சக்கணக்கான மக்கள் திமுக அரசுக்கு முடிவுரை எழுதுவார்கள்.

ஒடிசா, ஹரியானா, மகாராஷ்டிரா, டெல்லி வழியில் தமிழகத்திலும் பாஜக கூட்டணி வெற்றி வாகை சூடி, ஆட்சியை கைப்பற்றும். அமித் ஷா கூறியபடி, திமுக ஆட்சியை வீட்டிற்கு அனுப்புவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று, தமிழக பாஜக தொண்டர்கள் ஒவ்வொருவரும் சிந்திப்போம், களப்பணியாற்றுவோம். சட்டசபை தேர்தல் வரை நமக்கு தூக்கமில்லை! வெற்றி நமதே!" எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+