பெண் ஓட்டுநர்கள் ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம்! தொழிலாளர் நலத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்!
சென்னை: பெண் ஓட்டுநர்கள் சொந்தமாக ஆட்டோ வாங்குவதை ஊக்குவிக்கும் பொருட்டு, 500 பெண் ஓட்டுநர்களுக்கு 1 லட்சம் ரூபாய் மானியம் வழங்கப்படும் என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் அறிவித்துள்ளார்.
இதேபோல், இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில் 11 இடங்களில், புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பையும் அவர் வெளியிட்டுள்ளார்.
தொழிலாளர் நலத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் இன்று நடைபெற்ற நிலையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகளில் முக்கியமானவைகளின் விவரம் வருமாறு;

தொழிற்பயிற்சி நிலையம்
இளைஞர்களுக்கு, பயனுள்ள வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதற்கும் தொழிற்சாலைகளுக்கு ஏற்றவாறு இளைஞர்களுக்கு தொழிற்பயிற்சி அளித்து
வேலைவாய்ப்பை உருவாக்கிடவும் கடலூர் மாவட்டம் மங்களூர், சிவகங்கை மாவட்டம் மானாமதுரை, திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு,
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி,
தருமபுரி மாவட்டம் அரூர், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, பெரம்பலூர் மாவட்டம் குன்னம், கோயம்புத்தூர் மாவட்டம் - வால்பாறை ஆகிய 11 இடங்களில், புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் 97.55 கோடி ரூபாய் செலவில் துவக்கப்படும்.

வேலைவாய்ப்பு முகாம்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், தனியார் துறை நிறுவனங்களில் அதிகளவில் பணி நியமனம் பெற, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் நடத்தும் பெரிய அளவிலான ஒவ்வொரு வேலைவாய்ப்பு முகாமிற்கும் தற்பொழுது வழங்கப்பட்டு வரும் 1 லட்சம் ரூபாயினை 2 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். இதற்கானமொத்த செலவினம் 3.04 கோடி ரூபாய் ஆகும்.

ஆட்டோ ரிக்சா
தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற
பெண் ஓட்டுநர்கள், சொந்தமாக ஆட்டோ ரிக்சா வாகனம் வாங்குவதை ஊக்குவிக்கவும், உருவாக்கவும், அவர்களின் வருமானம் ஈட்டும் பொருட்டும், 500 பெண் ஓட்டுநர்களுக்கு புதியதாக ஆட்டோ ரிக்சா வாகனம் வாங்கும் செலவினத்தில் தலா 1 இலட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படும்.

கட்டுமானத் தொழிலாளர்கள்
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற கட்டுமானத் தொழிலாளர்கள் விபத்து மரணம் அடைந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும் விபத்து மரண உதவித் தொகை 1 இலட்சம் ரூபாயிலிருந்து 2 இலட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும். தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற பெண் கட்டுமானத் தொழிலாளர்களுக்கு தற்பொழுது வழங்கப்பட்டு வரும் மகப்பேறு நலத்திட்ட உதவித் தொகை 6,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.












Click it and Unblock the Notifications