போலி பத்திரம் மூலம் நிலம் அபகரிப்பு.. சிவகிரி ஜமீன் வாரிசுதாரர்கள் உள்பட 17 பேருக்கு.. கோர்ட் அதிரடி
சென்னை: போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை பத்திரப்பதிவு செய்த சிவகிரி ஜமீனின் வாரிசுதாரர்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாடு ரியல் எஸ்டேட் என்ற தனியார் நிறுவனத்திற்கு, சென்னை நுங்கம்பாக்கம் சாலையில் சொந்தமான 45 கிரவுண்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை தங்களுடைய குடும்ப சொத்து எனக் கூறி சிவகிரி ஜமீனின் வாரிதாரர்கள் ராணி பாலகுமாரி நாச்சியார் உள்ளிட்டோர் இணைந்து போலியான ஆவணங்களை தயார் செய்து, கடந்த 2006 ம் ஆண்டு அதை சுலைமான் கான் என்பவருக்கு பொது அதிகாரம் வழங்கி, பின்னர் கீழ்ப்பாக்கத்தை சேர்ந்த நீஜீர் என்பவர் பெயருக்கு மாற்றி பத்திரப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதை எதிர்த்தும், நிலத்தை அபகரித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் நிர்வாகி கேசன் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்கை விசாரித்த சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நீதிமன்ற நீதிபதி கோதண்டராஜ், போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்தது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து சிவகிரி ஜமீன் வாரிசுதாரர்கள் உள்ளிட்ட 17 பேருக்கு தலா 30 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த அபராத தொகையில் இருந்து 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை இழப்பீடாக தமிழ்நாடு ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார். மேலும் அபராத தொகையை கட்ட தவறினால் 2 மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications