“கேம் விளையாட, வீடியோ பார்க்க அல்ல.. லேப்டாப்பை கல்விக்கு யூஸ் பண்ணுங்க” உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை: "யூடியூப் பார்ப்பதற்கும், படம் பார்ப்பதற்கும், கேம் விளையாடுவதற்கு மட்டும் லேப்டாப் பயன்படுத்தாமல் கல்லூரி மாணவர்கள் லேப்டாப்பை கல்விக்காகவும், வேலைவாய்ப்புக்காகவும் பயன்படுத்த வேண்டும். எதை கொடுத்தாலும் அதனை பாதுகாத்து பன்மடங்கு ஆக்கக்கூடிய ஆற்றல் பெண்களுக்கு உண்டு. அந்தவகையில் இந்த லேப்டாப் எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியாக பெருகும் என நம்புகிறோம்." என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.
சென்னை அண்ணா சாலை காயிதே மில்லத் அரசினர் மகளிர் கலை கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்கான 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவிகள் 898 பேருக்கு தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மடிக்கணினி வழங்கினார்.

பின்னர் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், "காயிதே மில்லத் கல்லூரி மாணவிகள் உங்களிடம் மிகவும் பிடித்த விஷயம் என்னவென்றால், உங்களுடைய சமூக அக்கறை. கல்லூரிக்கு வந்தோம், படித்தோம், டிகிரி வாங்கினோம், வீட்டுக்கு சென்றோம். வேலைக்கு சேர்ந்தோம் என்றில்லாமல் சமூக நலன் சார்ந்த பல்வேறு விசயங்களுக்காக தொடர்ந்து குரல் கொடுக்கக்கூடியவர்கள்தான் இந்த காயிதே மில்லத் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் நீங்கள்.
முந்தைய ஆட்சியாளர்கள் பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார்கள். ஆனால் 2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் லேப்டாப் திட்டம் நிறுத்தப்பட்டது. மீண்டும் லேப்டாப் திட்டம் தொடங்கப்பட வேண்டும் என கோரிக்கைகள் வந்த போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பள்ளி மாணவர்களுக்கு கொடுப்பதை விட கல்லூரி மாணவர்களுக்கு கொடுத்தால் படிப்புக்கும் உதவியாக இருக்கும், வேலைக்கும் உதவியாக இருக்கும் என விரும்பினார். அதனால் கல்லூரி மாணவர்களுக்கு அரசு சார்பில் லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது.
இந்த கல்விக்கான நிதியை நம்முடைய திராவிட மாடல் அரசு வெறும் செலவாக பார்க்கவில்லை. நம்முடைய தமிழ்நாடு மாணவர்களுடைய வளர்ச்சிக்கான முதலீடாகதான் நம்முடைய அரசு பார்க்கின்றது. பெண்களுடைய கைகளில் இருக்கக்கூடிய சமையல் கரண்டியை பிடுங்கி, அவர்கள் கையில் புத்தகத்தை கொடுக்க வேண்டும் என்று தந்தை பெரியார் சொன்னார். நம்முடைய முதலமைச்சர், புத்தகத்தை மட்டுமல்ல, இன்றைக்கு லேப்டாப்களையும் சேர்த்து உங்கள் கைகளில் ஒப்படைத்துள்ளார். ஏனென்றால், பெண்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்தவர் நம் முதல்வர்.
பெண்கள் படிக்க வேண்டும், பெண்களுக்கு கல்வி முக்கியம், பெண்களின் கல்விக்காக கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் புதுமைப்பெண் திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. யூடியூப் பார்ப்பதற்கும், படம் பார்ப்பதற்கும், கேம் விளையாடுவதற்கு மட்டும் லேப்டாப் பயன்படுத்தாமல் கல்லூரி மாணவர்கள் லேப்டாப்பை கல்விக்காகவும், வேலைவாய்ப்புக்காகவும் பயன்படுத்த வேண்டும். எதை கொடுத்தாலும் அதனை பாதுகாத்து பன்மடங்கு ஆக்கக்கூடிய ஆற்றல் பெண்களுக்கு உண்டு. அந்தவகையில் இந்த லேப்டாப் எதிர்காலத்தில் தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியாக பெருகும் என நம்புகிறோம்.
Perplexity artificial intelligence வசதியோடு இந்த லேப்டாப் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பெரிய, பெரிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு நிச்சயம் இந்த லேப்டாப் உங்களுக்கு உதவியாக இருக்கும். இன்னும் பல்வேறு திட்டங்களை நம்முடைய திராவிட மாடல் அரசு உங்களுக்கு தர இருக்கிறது. எனவே இந்த அரசிற்கு எப்போது நீங்கள் துணையாக இருக்க வேண்டும். லேப்டாப் பெற்ற உங்கள் அத்தனை பேரின் எதிர்காலம் சிறக்க வாழ்த்துகள்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications