தீப தூண் விவகாரம்.. இந்துத்துவாவுக்கு வெற்றியை ஏற்படுத்திக்கொடுக்கிறதா தவெக? வழக்கறிஞர்கள் கேள்வி
சென்னை: திருப்பரங்குன்றம் தீப தூண் விஷயத்தில் தமிழக அரசு தரப்பு வைத்த வாதங்கள், இந்துத்துவா அமைப்பின் வெற்றிக்கு உதவும் வகையில் அமைந்திருப்பதாக வழக்கறிஞர்கள் விமர்சித்திருக்கின்றனர்.
இது குறித்து வழக்கறிஞர் வாஞ்சிநாதன், "திருப்பரங்குன்றம் வழக்கு: உள்ளடி வேலை செய்கிறதா தவெக அரசு?" என சில கேள்விகளை எழுப்பியிருக்கிறார். இந்த கேள்விகள் பல்வேறு விவாதங்களை கிளப்பியிருக்கிறது.

"1.மதுரை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வின் முன் இந்து சமய அறநிலைத்துறையின் எழுத்துப்பூர்வ நிலைப்பாட்டின்படி, தர்கா அருகில் இருக்கக்கூடிய கிரானைட் தூண் கோயிலுக்கு சொந்தமானது என்ற நிலைப்பாடு எடுக்கப்படவில்லை. தவெக அரசு இசுலாமியர்களின் சொத்தை அபகரிக்க முயற்சிப்பது ஏன்?
2.உச்சநீதிமன்றத்தில் புதிய நிலைப்பாட்டை எடுக்க யார் நிர்பந்தம் தந்தது?
3. நேற்று சிக்கந்தர் தர்காவுக்கும், தர்கா அருகிலுள்ள கல் தூணுக்கும் இடையிலான தூரத்தையும் அதிகரித்து சொல்கிறது தவெக அரசு! ஏன்?
4.கார்த்திகை தீபம் ஏற்றும் இடமும் மோட்ச தீபம் ஏற்றும் இடமும் அருகருகே அமைந்திருக்க, இரண்டும் ஒன்றுதான் என்ற வாதத்தை இந்து சமய அறநிலையத்துறை உச்சநீதிமன்றத்தில் தவறாக முன்வைத்தது ஏன்?
5. சிதம்பரம் நடராஜர் கோவில் வழக்கில் உரிய முறையில் வாதிடாமல் கோட்டை விட்ட, மூத்த வழக்கறிஞர் ஜெய்தீப் குப்தா மற்றும் சேகர் நாப்டேவை இந்து சமய அறநிலைத்துறைக்கு மூத்த வழக்கறிஞர்களாக அமர்த்தியது ஏன்?
6. Tvk - வின் கரூர் வழக்கு, ஆதவின் முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யக் கோரிய வழக்கு, Tvk-ன் மற்ற வழக்குகளில் மூத்த வழக்கறிஞர்கள், இந்தியாவின், உச்ச நீதிமன்றத்தின் மிக முக்கிய வழக்கறிஞர்களான #அபிஷேக் மனுசிங்வி # கோபால் சுப்ரமணியம் #அரியமா சுந்தரம் உள்ளிட்டோர் ஆஜரானபோது, தமிழ்நாட்டின் மிக முக்கிய வழக்கான திருப்பரங்குன்றம் வழக்கில், நீதிபதிகள் கேட்கும் வகையிலான வாதங்களை முன்வைக்கக்கூடிய, உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்களை நியமிக்காதது ஏன்?
7. நேற்றைய திருப்பரங்குன்றம் வழக்கின் வாதத்தில், இந்து சமய அறநிலைய துறைக்காக வாதிட்ட, மூத்த வழக்கறிஞர் சேகர் நாப்தே சில நிமிடங்கள் மட்டும் பேசியது ஏன்?
8. இன்று நடக்க இருக்கும் நீதிமன்ற வாதங்கள் முறையாக முன் வைக்கப்படுமா?" என்று கேள்விகளை முன்வைத்திருக்கிறார்.
நவ.24ம் தேதி தமிழகம் முழுவதும் கார்த்திகை தீப திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மதுரை திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றப்படும். நூற்றாண்டுகளுக்கும் மேல் வழக்கமாக உச்சி பிள்ளையார் கோயிலில் உள்ள தீப தூணில்தான் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. ஆனால், இந்து அமைப்புகள்.. மலையில் சிக்கந்தர் தர்காவுக்கு அருகில் உள்ள கல் தூணில் தீபம் ஏற்ற வேண்டும் என்று கேட்கின்றனர். இப்படி இருக்கையில் இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வைத்த வாதங்கள் கவனம் பெற்றிருக்கின்றன.
நீதிமன்றத்தில் தமிழக அரசின் வாதம்
கடந்த 1923 ஆம் ஆண்டு சிவில் நீதிமன்றத்தின்படி, தர்கா அமைந்துள்ள பகுதி, படிக்கட்டுகள் மற்றும் நெல்லித்தோப்பு ஆகியவை நீங்களாக.. மலையின் மற்ற அனைத்து பகுதிகளும், அருள்மிகு சுப்ரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமானவை என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. மேலும் தர்காவுக்கு அருகில் உள்ள அந்த கல் தூண், வழிபாட்டிற்கான தூண் அல்ல என்றும்.. அது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நிலத்தை அளவீடு செய்வதற்காக நடப்பட்ட எல்லை அளவீடு கல் என்றும் அரசு தரப்பு வாதிட்டிருக்கிறது.
ஆனால், தமிழ்நாடு வக்பு வாரியம் மற்றும் தர்கா தரப்பு வழக்கறிஞர்கள்.. அந்த தூண் அமைந்துள்ள இடம், தர்காவில் எல்லைக்குள் வருவதாகவும்.. தர்காவை கடந்துதான் அங்கு செல்ல முடியும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்திருக்கின்றனர்.



Click it and Unblock the Notifications
