திட்டமிட்ட வன்முறை- விநாயகர் சதுர்த்தி சிலைகள், ஊர்வலங்களுக்கு தடை விதிக்க மக்கள் அதிகாரம் கோரிக்கை
சென்னை: மத வன்முறைகளைத் தூண்டும் வகையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அமைக்கப்படும் விநாயகர் சிலைகள், ஊர்வலங்களுக்கு தமிழக அரசு தடை விதிக்க வேண்டும் என்று இடதுசாரி அமைப்பான மக்கள் அதிகாரம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
Recommended Video
இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மக்கள் அதிகாரம் அமைப்பின் பொதுச்செயலாளர் காளியப்பன் அனுப்பியுள்ள கடிதம்: விநாயகர் வழிபாடு என்பது தமிழர்களின் தொன்மையான மரபு வழிபட்ட வழிபாடு அல்ல. இது கிபி ஆறாம் நூற்றாண்டிற்குப் பிறகு தமிழக மக்களிடம் பார்ப்பனர்களால் திணிக்கப்பட்ட ஒரு வழிபாடு என்பது வரலாற்று அறிஞர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மை. இருப்பினும் விநாயகர் சதுர்த்தி என்று கொண்டாடப்படுகின்ற இந்த விழா 1990க்கு முன்பு வரை ஒரு எளிய சாதாரண வழிபாடாக மட்டுமே இருந்தது.
குடும்பங்களில் களிமண் விநாயகர் சிலையை வைத்து வழிபடுவது, அருகாமை நீர் நிலைகளில் கரைப்பது,விநாயகர் கோயில்களில் பூஜைகள் செய்வது என்ற அளவோடு எந்த சிக்கலும் இல்லாமல் நடந்த ஒரு எளிய வழிபாடு. ஆனால் தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ், பாஜக, விசுவ இந்து பரிசத் போன்ற பார்ப்பன மதவாத சனாதன அமைப்புகள் தங்கள் செல்வாக்கை உயர்த்திக்கொள்ள விநாயகர் சதுர்த்தி விழாவை பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

தமிழகத்தின் விநாயகர் சதுர்த்தி
பொது இடங்களில் பெரும் பெரும் விநாயகர் சிலைகளை பிளாஸ்டர் ஆப் பாரிஸ் போன்ற பொருட்களைக் கொண்டு உருவாக்கி நிறுவி தொடர்ச்சியாக பல நாட்கள் வழிபாடு நடத்துவது, பின்னர் 'விசர்ஜன ஊர்வலம்' என்ற பெயரில் அவற்றை எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பது என்ற முறையை தமிழ்நாட்டில் விசுவ இந்து பரிசத்தும் இந்து முன்னணியும் தான் 1990களில் தொடங்கினார்கள் என்பது நாம் அறிந்த வரலாறு. இந்த விசர்ஜன ஊர்வலத்தை இஸ்லாமியர்கள் பெருமளவில் வாழும் ஊர்களில் அவர்களுடைய வழிபாட்டுத் தலங்கள் வழியாக எடுத்துச் செல்வது, அந்த ஊர்வலத்தில் இஸ்லாமிய வெறுப்பு கோஷங்களை முழங்குவது, அதன் வழியாக கலவரத்தையும் பதட்டத்தையும் உருவாக்குவது என்ற நடைமுறையை கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாக இவர்கள் நடத்தி வருகிறார்கள் என்பது தமிழக அரசு அறியாத ஒன்று அல்ல. இதற்காக பெருமளவிலான காவல்துறை ஈடுபட வேண்டிய கட்டாயம் ஏற்படுவதும் நாம் அறிந்ததே. எனவே எவ்வகையில் பார்த்தாலும் விநாயகர் விசர்ஜன ஊர்வலம், பொதுவெளியில் வைத்து வழிபாடு என்பது ஒரு மதநிகழ்வாக இல்லை. முழுக்க முழுக்க பிற்போக்கு சனாதன சக்திகள் மதப்பிளவை உருவாக்கும் தீய நோக்கத்தோடு நடத்தப்படுகின்ற ஒரு அரசியல் நடவடிக்கை என்பதே உண்மை.

கலவரங்களுக்கு சதி
இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் நிலவும் இந்து முஸ்லிம் கிறித்தவ ஒற்றுமை, நல்லிணக்கம், பகுத்தறிவு, மதசார்பற்ற பண்பாடு ஆகியவை பாரதிய ஜனதா கட்சி இந்து முன்னணி போன்ற அமைப்புகள் கால்பதிப்பதற்கு மிகப்பெரும் தடையாக இருப்பதையும் அதன் வழியாக தேர்தலில் தாங்கள் செல்வாக்கு பெற முடியாமல் தோற்றுப் போவதையும் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக பாரதிய ஜனதா கட்சி கோயில் பிரச்சினைகளையும், திராவிட எதிர்ப்பு, திமுக எதிர்ப்பையும், பெரியார் எதிர்ப்பையும் பரவலாக செய்து வருவதுடன் பல்வேறு இடங்களில் கலவரங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக தந்தை பெரியார் அவர்களின் சிலையை இழிவு படுத்துவதன் மூலம் பதற்றத்தையும் கலவரத்தையும் திட்டமிட்டு உருவாக்குகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டும் வருகின்ற 31ஆம் தேதி நடக்க இருக்கும் விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் ஆங்காங்கே கலவரங்களைத் திட்டமிடுவதாக பரவலாக பேசப்படுகிறது.

உரிமை பறிப்பு இல்லை
குறிப்பாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் ஒவ்வொரு ஆண்டும் அவர்கள் பதட்டத்தை உருவாக்குகிறார்கள் என்பது ஒரு தொடர்கதை. திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் மாவட்ட அளவிலான பாஜக இந்து முன்னணி தலைவர்கள் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தியில் கலவரம் நடக்கும், திருவாரூரை நாங்கள் பாஜகவின் கோட்டையாக மாற்றுவோம் என்பது போன்ற பேச்சுக்களை பொதுவெளியில் பகிரங்கமாக பேசி வருகின்றனர். திருவாரூர் கலைஞர் பிறந்த ஊர் என்பதால் அந்த ஊரை மையப்படுத்தி நடத்தப்படுகின்ற நிகழ்ச்சிகள் தமிழக அளவில் கவனம் பெறும் என்றே வெளிப்படையாக பேசுகிறார்கள். மக்கள் இயல்பாகவும் தாங்களே முன்வந்தும் கொண்டாடுகின்ற விழாக்கள் தான் மத உரிமை. ஆனால் குறிப்பிட்ட அரசியல் அமைப்புகள் பெருமளவில் பணத்தை செலவிட்டு திட்டமிட்டு உருவாக்கும் இத்தகைய விழாக்கள் மத உரிமை ஆகா.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களுக்கு தடை
தமிழ்நாட்டில் கடந்த முப்பது ஆண்டுகளாக மெல்ல மெல்ல உருவாக்கப்பட்ட இந்த அரசியல் நடவடிக்கையை ஒரு மத நடவடிக்கையாக மாற்ற முயல்வதை தமிழக அரசு அனுமதிக்க கூடாது. மேலும் இந்த விழாக்களுக்காக தயாரிக்கப்படுகின்ற பெரும் பெரும் விநாயகர் சிலைகள், அவற்றை எடுத்துச் சென்று நீர் நிலைகளை கரைப்பது இவை பெரும் அளவிலான சுற்றுச்சூழல் கேடுகளையும் உருவாக்குகின்றன. எனவே தமிழக அரசு இதில் எவ்வித் தயக்கமுமிஐன்றி இந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை தடை செய்ய வேண்டும். அவ்வாறு தடை செய்வதற்குத் தமிழக மக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தருவார்கள். பாரதிய ஜனதா கட்சி இந்து முன்னணி போன்ற மதவாதிகள் மட்டுமே எதிர்ப்பு தெரிவிப்பார்கள். எனவே அவர்களுடைய எதிர்ப்பை இந்துக்களின் எதிர்ப்பாகவோ தமிழக மக்களின் எதிர்ப்பாகவோ கருதுவதற்கு எவ்வித நியாயமும் இல்லை. எனவே வருகின்ற 31ஆம் தேதி பொது இடங்களில் விநாயகர் சிலைகளை நிறுவுவதற்கும், அவற்றை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பதற்கும் தமிழக அரசு தடை விதித்து, மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மக்கள் அதிகாரம் கோரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications