நடிகர் தனுஷுக்கு வந்த புது சிக்கல்.. ரூ. 20 கோடி இழப்பு.. தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் நோட்டீஸ்!
சென்னை: நடிகர் தனுஷுக்கு பிரபல தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் ரூபாய் 20 கோடி இழப்பை ஈடுகட்ட வேண்டும் எனக் கோரி வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமா மட்டுமின்றி, இந்தி சினிமா, ஹாலிவுட் திரையுலகம் வரை கலக்கி வருகிறார் நடிகர் தனுஷ். நடிப்பது மட்டுமல்லாமல் இயக்குநராகவும் அசத்தி வருகிறார். இந்நிலையில், பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ள தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தனுஷுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு 'நான் ருத்ரன்' என்ற படத்திற்காக தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிலையில், அந்த படத்துக்கு பதிலாக, வேறு படத்தை நடித்து இயக்கி தருவதாக நடிகர் தனுஷ் கூறியுள்ளார். அதை ஏற்று, தனுஷ் உள்பட அந்தப் படத்தில் நடித்த நாகார்ஜுனா, எஸ்.ஜே.சூர்யா போன்ற நட்சத்திரங்களுக்கு முன்பணம், பிற செலவினங்களுக்காக, 20 கோடி ரூபாய் வரை செலவிட்ட நிலையில், தனுஷ் முழுமையான திரைக்கதையை வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்தப் படத்திற்கான பணிகளைச் செய்யாமல் தனுஷ் பிற படங்களுக்கு கால்ஷீட்டுகளை கொடுத்ததால் இந்தப் படம் பாதியிலேயே முடங்கியதாகக் கூறி, தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் வழக்கறிஞர் ஏ.சிதம்பரம், நடிகர் தனுஷுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், 2025 ஆம் ஆண்டு இறுதியில் கால்ஷீட் தருவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் விரைவில் முடிவை தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால், 20 கோடி ரூபாய் இழப்பை ஈடுகட்ட வேண்டும். அத்துடன் இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications