வாள் தூக்கி நின்னார் பாரு..விஷால் தனுஷ் ஓரமா போங்க! அரசியலுக்கு வரும் லெஜண்ட் அண்ணாச்சி! ஜரூராக வேலை
சென்னை: நடிகராக இருந்து முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கிறார் விஜய். இதை அடுத்து சூர்யா, விஷால், தனுஷ் என அடுத்தடுத்து அரசியலுக்கு வருவார்கள் என அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இந்த நிலையில் அதிரடி திருப்பமாக பிரபல தொழிலதிபரும் நடிகருமான லெஜெண்ட் சரவணன் அண்ணாச்சி அரசியலுக்கு வருவதற்கான ஏற்பாடுகளை துவக்கி விட்டார் என்கின்றனர். தற்போது ரசிகர் மன்ற கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அடுத்த வாரம் ரசிகர்களை நேரில் சந்திக்கிறார்.. விரைவில் அரசியல் கட்சி அறிவிப்பும் வரும் என்கின்றனர்.
தமிழக அரசியலையும் சினிமாவையும் அவ்வளவு சீக்கிரம் பிரித்துப் பார்த்து விட முடியாது. சொல்லப் போனால் தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளில் ஆண்டவர்களில், ஓபிஎஸ், எடப்பாடி பழனிச்சாமியை தவிர்த்து பெரும்பாலும் சினிமாத்துறையில் இருந்து வந்தவர்கள் என்றே சொல்லலாம்.

அண்ணா, ஜெயலலிதா, ஜானகி, ஸ்டாலின், தற்போது விஜய் என அனைவருமே சினிமாவில் இருந்து வந்தவர்கள் அல்லது சினிமாவுடன் தொடர்பு கொண்டவர்கள் தான். அதுமட்டுமல்லாமல் எம்ஜிஆருக்கு பின் பலரும் அரசியல் ஆசையுடன் சினிமாவில் இருந்து வந்து சூடு போட்டு கொண்டு திரும்பிச் சென்றிருக்கிறார்கள்.
தமிழக அரசியல்
சிவாஜி கணேசன், பாக்கியராஜ், டி ராஜேந்தர், சரத்குமார் என பலரை சொல்லலாம். என்ன இருந்தாலும் எம்ஜிஆர் போல் ஆக முடியாது என அரசிலிருந்து நடிகர்கள் பலரும் ஒதுங்கி இருந்த வேளையில் 'நான் வரேன்' என அரசியலில் எண்ட்ரி கொடுத்து இரண்டே ஆண்டுகளில் ஆட்சியைப் பிடித்து சாதித்து இருக்கிறார் விஜய். எம்ஜிஆர் கூட கூட்டணி அமைத்தது தான் போட்டியிட்டார். மேலும் திமுக, காங்கிரஸில் அரசியல் செய்த அனுபவம் அவருக்கு இருந்தது.
விஜய்
ஆனால் கட்சி ஆரம்பித்த உடனேயே ஆட்சியைப் பிடித்த வரலாற்றுச் சாதனையை விஜய் செய்திருக்கிறார். இதனையடுத்து நடிகர்கள் பலருக்கும் மீண்டும் அரசியல் ஆசை துளிர் விடத் தொடங்கி இருக்கிறது. விஷால், தனுஷ், ராகவா லாரன்ஸ், சூர்யா என அடுத்தடுத்து அரசியலுக்கு வரலாம் என அவரது ரசிகர்கள் சொல்லி வருகின்றனர். ரசிகர் மன்றத்தின் மூலம் மக்கள் பணிகள் செய்வது, கொடி அறிமுகம், பொதுக்கூட்டம் அளவுக்கு வந்து விட்டனர் நடிகர்கள்.
லெஜன்ட் சரவணன்
இந்த நிலையில் பிரபல தொழிலதிபர் லெஜன்ட் சரவணன் அண்ணாச்சி அரசியலுக்கு வர ஆயத்தப் பணிகளை தொடங்கிவிட்டார் என்கின்றனர். தென் மாவட்டத்திலிருந்து சென்னைக்கு வந்து மிகப்பெரிய சரவணா சாம்ராஜ்யத்தை உருவாக்கிய மூத்த அண்ணாச்சியின் வாரிசான லெஜெண்ட் சரவணன் அண்ணாச்சி தனது கடைக்கு தானே விளம்பரம் மாடலாக களமிறங்கினார். மேலும் தமன்னா, ஹன்சிகா மோத்வானி உள்ளிட்ட முன்னணி நடிகைகளுடன் விளம்பரத்தில் அவர் ஜோடி போட்டது பலரையும் ஆச்சரியப்பட வைத்தது.
விளம்பரம்
கிண்டல் கேலிகளை சந்தித்தாலும் அதனை கண்டு கொள்ளாமல் அதனை தனது விளம்பரமாக மாற்றிக் கொண்டார். அந்த விளம்பரமும் பெரு வெற்றி பெற்றது. பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் அண்ணாச்சி. அதற்கு பிறகு பல தொழில் அதிபர்களும் நடிகர் நடிகைகளை தங்கள் பிராண்ட் அம்பாசிடராக நடிக்க வைப்பதை விட்டுவிட்டு தாங்களே பிராண்டாக களம் இறங்கத் தொடங்கினர்.
சினிமா எண்ட்ரி
தொடர்ந்து சினிமாவுக்கு வந்த அண்ணாச்சி லெஜண்ட், லீடர் படங்களை முடித்திருக்கிறார். அடுத்து சில படங்களின் வேலைகளும் நடந்து வருகிறது. இதற்கிடையே தமிழக முழுவதும் தனக்கான ரசிகர் பட்டாளத்தை பெருக்கும் வகையில் காய்களை நகர்த்த துவங்கி இருக்கிறார் அண்ணாச்சி. அவருக்கு நெருக்கமான முத்ததுரை லெஜன்ட் ரசிகர் மன்றத்தின் அகில இந்திய தலைவராக நியமனம் செய்யப்பட்டு இருக்கும் நிலையில் தமிழக முழுவதும் மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள் உள்ளிட்டவர்களை நியமிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

நிர்வாகிகள் நியமனம்
தமிழகத்தை நான்கு மண்டலாங்களாக பிரித்து அதற்கென நிர்வாகிகளும் நியமனம் செய்யப்பட இருக்கின்றனர். ஒரு அரசியல் கட்சியில் இருப்பது போல மாணவர் அணி, இளைஞரணி, மகளிர் அணி, வழக்கறிஞர் அணி, ஆட்டோ ஓட்டுனர் அணி, அமைப்பு சாரா தொழிலாளர்கள் அணி என தனித்தனியாக அணி நிர்வாகிகளின் நியமனமும் நடைபெற்று வருகிறது. இதற்காக ஒரு வாட்ஸ் அப் குழு தொடங்கப்பட்டு பரபரப்பாக இயங்கி வருகிறது.
ஜரூராக வேலை
மேலும் வரும் செப்டம்பர் 12ஆம் தேதி பாடி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸில் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியும் நிர்வாகிகள் நியமன சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை ரசிகர் மன்றத்தின் தலைவரான முத்துதுரை செய்து வருகிறார். ரசிகர் மன்றம் என்ற ஏற்பாடு தற்போதைக்கு தான், விரைவில் அண்ணாச்சி அரசியலுக்கு வருவதற்கான முன்னோட்டம் தான் இந்த ஏற்பாடுகள் என்கின்றனர் அண்ணனின் விழுதுகள்.


Click it and Unblock the Notifications
