மினி பஸ்ஸில் தேவா ராஜ்ஜியம்.. மாங்காட்டில் கண்ணீருடன் தொடங்கி காலத்தையே கட்டிப்போட்ட "கானா பேரரசன்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: சில பாடல்களை கேட்டால் ஆடத் தோன்றும்.. சில பாடல்களை கேட்டால் காதல் நினைவுகள் வந்து போகும்.. இன்னும் சில பாடல்களோ, எத்தனை வருடங்கள் கடந்தாலும் மனசுக்குள் அப்படியே தங்கிவிடும்.. இந்த மூன்றையும் தன்னுடைய இசையில் கலந்து தேனாய் கொடுத்தவர், தேனிசைத் தென்றல் தேவா... இசை ரசிகர்களின் இதயத்தில் நிரந்தரமாக தங்கியிருக்கும் இசையமைப்பாளர் தேவாவை இங்கு நினைவுகூர்வதில் "ஒன்இந்தியா தமிழ்" பெருமை கொள்கிறது..

இன்று தேவா நம்முடன் இல்லை.. ஆனால், நகரத்து தெருக்களில் ஒலித்த கானா பாடல்களிலும், காதலர்களின் நினைவுகளில் தங்கிய மெல்லிசைப பாடல்களிலும், கிராமத்து மினி பஸ்களில் இப்போதும் ஒலிக்கும் பாடல்களிலும் தேவா வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

Legendary Deva Deva Emotional Journey Chennai Mini Bus Songs

ஒரு இசையமைப்பாளரின் வெற்றியை விருதுகளும் பாராட்டுகளும் மட்டுமே தீர்மானிப்பதில்லை... சாமானிய மனிதர்களின் வாழ்க்கைக்குள் அவருடைய இசை எவ்வளவு தூரம் பயணித்திருக்கிறது என்பதுதான் உண்மையான அடையாளம். அந்த வகையில் தேவாவுக்கு தனி இடம் உண்டு.

வறுமையில் தொடங்கிய பயணம்

சென்னை மயிலாப்பூர் விசாலாட்சித் தோட்டம் அருகிலிருந்த குடிசைப் பகுதியில், தபால்காரரின் மகனாக பிறந்து வளர்ந்தவர் தேவா. சின்ன வயசிலிருந்தே இசை மீது ஆர்வம்... அதே நேரத்தில் குடும்ப வறுமையும் அவரை சூழ, தூர்தர்ஷனில் ஃப்ளோர் மேனேஜராக வேலை கிடைத்தது. மாத சம்பளமோ வெறும் 450 ரூபாய். கோயில் கச்சேரிகளிலும் பங்கேற்று வருமானம் ஈட்டினால்தான், குடும்பத்துக்கு அன்றைய ஜீவனம்.

அந்த காலகட்டத்தில் கனகபா விஜயன் என்பவர் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் தொடர்பான 10 பாடல்களை ஒலிப்பதிவு செய்ய தேவாவை அணுகினார். அவரிடம் இருந்ததோ 900 ரூபாய் மட்டுமே. அந்த தொகையை வைத்துக்கொண்டு தன்னுடைய தம்பிகளின் உதவியுடன் பாடல்களை ஒலிப்பதிவு செய்து கொடுத்தார் தேவா.

மேல்மருவத்தூர் அடிகளார்

அப்போது மேல்மருவத்தூர் அடிகளாரை சந்தித்த தேவாவுக்கு, "உலகமெல்லாம் உன் பாடல் ஒலிக்கப்போகுது மகனே" என்று அவர் ஆசி வழங்கியதாக தேவா தனது பேட்டியில் ஒருமுறை நினைவுகூர்ந்திருந்தார்...

சினிமாவில் வாய்ப்புக்காக காத்திருந்த காலத்திலும் தேவா மனம் தளரவில்லை. தொடக்கத்தில் இசையமைத்த பல படங்களும் வெளியாகவில்லை... 1989-ல் வெளியான மனசுக்கேத்த மகராசா அவருடைய திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது. அடுத்து வந்த வைகாசி பொறந்தாச்சு படம், தேவாவை தமிழ் ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு உட்கார வைத்து விட்டது.

அண்ணாமலை - இன்னொரு ராஜ்ஜியம்

1992-ல் வெளியான அண்ணாமலை தேவாவின் வாழ்க்கையில் முக்கியமான டர்னிங் பாயிண்ட்.. அதில் ரஜினிகாந்த்தின் அறிமுக சீனில் "ஹே ஹே" என்ற பேக்கிரவுண்ட் இசையை அமைத்து, ரசிகர்களை சீட்டிலிருந்து எம்பி நின்று விசிலடிக்க வைத்தவர்.. இன்றளவும் சூப்பர் ஸ்டார் படங்களில், இந்த அறிமுக ஹைப்பை உயர்த்தி பிடித்திருப்பவர் தேவா..

மொழியிருந்தால்தான் இசையா என்ன? தேவாவின் இசைக்கு மொழியே தேவையில்லை.. "லாலாக்கு டோல் டப்பிமா" என்ற பாடல் வரி அர்த்தம் தெரியாமலேயே பட்டிதொட்டியெங்கும் ஆட்டம் போட வைத்தது.. வாலியின் வித்தியாசமான வரிகளுடன், தேவாவின் துள்ளலான இசை சேர்ந்தாலே, ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்.

விஜய் பாடல்கள்

விஜய் நடித்த தேவா படத்தில் இடம்பெற்ற "ஒரு கடிதம் எழுதினேன், அதில் என் உயிரை அனுப்பினேன்" பாடல் இன்றும் காதலர்களுக்கு நெருக்கமான பாடல்.. விஜய்யை தன்னுடைய படங்களில் அதிகமாக பாட வைத்த இசையமைப்பாளரும் தேவா தான்..!!

தேவா என்றதும் பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கானா பாடல்கள்தான். சென்னை நகரத்தின் பேச்சு வழக்கையும், தெருக்களின் தாளத்தையும், அன்றாட வாழ்க்கையின் சந்தோஷங்களையும் சினிமா பாடல்களுக்குள் கொண்டு வந்தவர் தேவா..எளிய வார்த்தைகள், உடனே பிடித்துக்கொள்ளும் மெட்டு, கால்களை தாளம் போட வைக்கும் இசை.. இதுதான் தேவாவின் "ஸ்மார்ட் டச்"

கானா - முகவரி

கானா பாடல்களை ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் அடைத்து வைக்காமல், ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களும் ரசிக்கும் வகையில் கொண்டு சென்றதில் தேவாவுக்கு முக்கிய பங்கு உண்டு. அதனால்தான் அவரது பாடல்கள் நகரத்து தெருக்களில் மட்டுமல்லாமல், கிராமங்களிலும் திருவிழாக்களிலும் மினி பஸ்களிலும் ஒலித்தன.

சென்னையின் தெருக்களிலும், வடசென்னை பகுதியிலும் ஒலித்த கானா பாடல்களை சினிமாவுக்குள் கொண்டு வந்து, அந்த இசைக்கு தனி அடையாளம் கிடைக்கச் செய்தவர்களில் தேவாவுக்கு முக்கிய இடம் உண்டு..

பெரிய இசைக்கருவிகள், பிரம்மாண்டமான இசைக்கோர்வைகள் இல்லாமலேயே, எளிய வார்த்தைகளையும் துள்ளலான இசையையும் வைத்து ஒரு பாடலை பட்டையை கிளப்ப வைக்க முடியும் என்பதை அவர் பலமுறை நிரூபித்தார்.

மெலடி தேவா

தேவாவை கானா இசைக்குள் மட்டும் அடக்கிவிட முடியாது. அவருடைய மென்மையான பாடல்களைப் பட்டியலிட்டால் அதுவே ஒரு தனி இசைத் தொகுப்பாக மாறிவிடும்.

"உன் பேர் சொல்ல ஆசைதான்", "நில்லடி என்றது உள்மனது", "முதன் முதலில் பார்த்தேன்" என்று காதலை மெதுவாக மனசுக்குள் இறக்கிவிடும் பாடல்கள் ஒருபக்கம் என்றால், "முத்து நகையே முழு நிலவே" பாடலில் எஸ்.பி.பி., ஜானகியின் குரல்கள் இணைந்து பயணத்துக்கே ஒரு தனி அழகைக் கொடுத்துவிடும்..

அதேபோல, "கூவுற குயிலு சேவலப் பார்த்து" பாடலில் புல்லாங்குழல் இசை, நிஜமாகவே ஒரு குயில் கூவுவதைப் போல மனசை மயக்கிவிடும்!

தேவாவின் துள்ளலிசைப் பாடல்கள் அதிகம் கொண்டாடப்பட்டதால், அவருடைய மெலடிகளுக்கு உரிய கவனம் கிடைக்காமல் போனதுண்டு. இந்த வருத்தம் ஆரம்பத்தில் தேவாவுக்கே உண்டு..

ஆனால், கானா பாடல்களால் ஒரு தலைமுறையை ஆட வைத்த தேவா, தனது மெலடிகளால் அதே தலைமுறையின் காதலையும் கண்ணீரையும் பேச வைத்தவர்.. காலம் மாறினாலும், சில பாடல்களின் இசை மட்டும் பழைய நினைவுகளின் கதவைத் திறந்து, கேட்பவரை அப்படியே அந்த நாட்களுக்கே அழைத்துச் சென்றுவிடும்,

சாதனை படைத்தே தேவா

இன்றைக்கு ஒரு படத்துக்கு இசையமைப்பதே பெரிய வேலை என்று பேசுகிறோம்.. ஆனால், 90-களில் தேவா இருந்த வேகமே வேறு! ஒரே வருடத்தில் 36 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்றால், அவருடைய உழைப்பையும் அந்தக் காலகட்டத்தில் அவருக்கு இருந்த மவுசையும் புரிந்துகொள்ளலாம்... தொடர்ந்து படங்கள், தொடர்ந்து பாடல்கள்.. ஆனாலும் ரசிகர்களுக்கு ஏதாவது ஒரு பாடலாவது மனதில் நிற்கும் வகையில் கொடுத்ததுதான் அவரது ஸ்பெஷாலிட்டியே.

எளிமைவாதி - யதார்த்தவாதி

தேவாவின் வாழ்க்கையைப் பற்றி பேசும்போது அவருடைய எளிமையையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது. வெள்ளை உடை, நெற்றியில் விபூதி என அவருக்கென்று ஒரு அடையாளம் இருந்தது. யாரையும் நோகடிக்கத் தெரியாத மென்மையான மனிதர் என்று அவரை நெருக்கமாக அறிந்தவர்கள் நினைவுகூர்வார்கள்... அவ்வளவு ஏன்? நாமே அவருடைய பல பேட்டிகளில் இதை கண்கூடாக பார்த்திருக்கிறோமே.

புகழின் உச்சத்தில் இருந்தபோதும், தன்னைச் சுற்றி ஒரு பெரிய பிம்பத்தை உருவாக்கிக் கொள்ளாதவர் தேவா.. அவருடைய இசையில் இருந்த மண் வாசனையும், மனிதர்களுக்கு நெருக்கமான அந்த எளிமையும், அவருடைய இயல்பிலிருந்தே பிறந்தவை என்பதுதான் அவரை இன்னும் நம் மனதுக்கு நெருக்கமாக்குகிறது..!!

தேவாவின் மறுபக்கம்

தேவாவின் இசைக்கு பெரிய இசை அறிவோ, நுணுக்கமான பயிற்சியோ தேவையில்லை.. முதல் முறை கேட்கும்போதே மனதில் ஒட்டிக்கொள்ளும் மெட்டுகள்தான் அவரது பலம். அதனால்தான் அவரது பாடல்கள் டீக்கடைகளில் தொடங்கி திருவிழாக்கள் வரை ஒலித்ததுடன், சாதாரண மக்களின் வாழ்க்கையிலும் பிரிக்க முடியாத ஓர் அங்கமாக மாறின..

தேவா பாடினால், அந்த குரலில், மண்ணின் மணம் மூக்கையே துளைத்துவிடும்.. அதன் துள்ளலும், மண்வாசனையும், மக்களின் அன்றாட வாழ்வியலும் அவரது பாடல்களில் இயல்பாகவே கலந்து கிடந்தன..

இசையைப் போலவே ஓவியத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவர் தேவா.. பலருக்கும் தெரியாத அந்தப் பக்கத்தில், இசையமைப்பாளர் என்ற அடையாளத்துக்கு அப்பால், தனக்குள் ஓர் ஓவியரையும் அவர் சுமந்துகொண்டிருந்தார்..!!

நினைவில் வாழும் தேவா

கிராமப்புறங்களில் ஓடும் மினி பஸ்களில் பயணித்தவர்களிடம் தேவாவின் பாடல்களை பற்றி கேட்டுப் பாருங்கள்... எத்தனையோ நினைவுகள் வந்து வந்து விழும்.... ஜன்னலோர இருக்கை, புழுதி பறக்கும் சாலை, பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருக்கும் முகம் தெரியாத பயணி, காதுக்குள் விழும் பாடல்கள்..இவற்றுக்கெல்லாம் பின்னணியில் தேவாவின் இசை இருந்திருக்கிறது.

இன்று தேவா இல்லை. ஆனால், ஒரு மினி பஸ்ஸில் "ஆத்து மேட்டு தோப்புக்குள்ள" என்று பி.சுசீலா குரலில் ஒலிக்கும்போதும், "ஒரு வெண்புறா" என்று யேசுதாஸ் குரல் மனதை வருடும்போதும், "ஆடியில சேதி சொல்லி" என்று சித்ராவின் குரல் காதில் விழும்போதும், "கருப்பு நிலா நீ தான் கலங்குவதேன்" என்று காதல் மனசுக்குள் இறங்கும்போதும், "ஓ ஓ மதுபாலா" என்று எஸ்.பி.பி.யின் குரல் மயக்கும்போதும் தேவா நம்முடன் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்.

சில இசையமைப்பாளர்களை அவர்களுடைய விருதுகள் அடையாளப்படுத்தும்... சிலரை அவர்களுடைய புகழ்பெற்ற படங்கள் அடையாளப்படுத்தும்... ஆனால் தேவாவையோ, ஒரு தலைமுறையின் பயணங்களும் காதலும் கொண்டாட்டங்களும் அடையாளப்படுத்தும்.

அதனால்தான் கிராமத்து மினி பஸ்களில் ஒலிக்கும் அந்தப் பாடல்களுக்கு நடுவே, இன்றும் தேனிசைத் தென்றல் வீசிக்கொண்டிருக்கிறது,.. தேவராஜ்ஜியம் முடிவதில்லை.. தேவா மறைந்தாலும், அவர் இசைத்த பாடல்கள் ஒலிக்கும் வரை, அந்த ராஜ்ஜியத்தின் இசை மட்டும் ஒருபோதும் ஓயாது.

வீ மிஸ் யூ தேவா சார்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+