லியோ FDFS.. டக்கென்று வந்து விழுந்த கேள்வி.. வானதி சீனிவாசன் சொன்ன அடேங்கப்பா பதில்
சென்னை: சினிமா படங்களுக்கு ஆர்வமாக சென்று பார்க்கும் பழக்கம் எனக்கு கிடையாது என்று கோவை தெற்கு தொகுதி பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார். லியோ ட்ரெயிலர் பரபரப்பாக பேசப்பட்டதால் பார்த்தேன். மற்றபடி முதல் நாள் முதல் காட்சி எல்லாம் யார் படத்திற்கும் நான் போனதில்லை என்று கூறியுள்ளார் வானதி சீனிவாசன்.
லியோ விளம்பரம்: எங்கும் லியோ எதிலும் லியோ என்று ஒரே லியோ படம் பற்றிய பேச்சாகத்தான் உள்ளது. பல கோடி செலவு செய்தால் கூட இப்படி ஒரு விளம்பரம் கிடைத்திருக்காது. விஜய் நடித்த லியோ படம் வரும் 19ஆம் தேதி நாளை மறுநாள் வெளியாக உள்ளது. இந்த படத்தின் முதல் பாடல் நான் ரெடிதான் வரவா வெளியானது தொடங்கி ட்ரைலர் வரைக்குமே சர்ச்சைக்கு பஞ்சமில்லாமல் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

4 மணி காட்சி: லியோ திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி 4 மணிக்கு வெளியாக இருந்த நிலையில் அதற்கு நீதிமன்றம் அனுமதி மறுத்ததது. இதையடுத்து, 7 மணி காட்சிக்காவது அனுமதி கோரி தற்போது படக்குழுவினர் தமிழக அரசிடம் கேட்டு வருகின்றனர்.
ஜெயக்குமார்: லியோ இசை வெளியீட்டு விழாவுக்கு அரசு அனுமதி மறுத்த நிலையில், ரசிகர்கள் காட்சிக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் சமூக வலைத்தளங்களில் வசை பாடி வருகின்றனர். விஜய்க்கு ஆதரவாக அதிமுக, பாஜக தலைவர்கள் கோதாவில் குதித்துள்ளனர். லியோவிற்கு ஏன் நெருக்கடி கொடுக்கப்படுகிறது என்று தன் பங்குங்கு ஒரு விளக்கத்தை கொடுத்துள்ளார் ஜெயக்குமார்.
அண்ணாமலை ஆதரவு: தமிழக பாஜக தொடர்ந்து விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகிறது. விஜய் அரசியலுக்கு வருவதை தீய சக்திகள் எதிர்த்தால் மக்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சமீபத்தில் தெரிவித்திருந்தார். சில வருடங்களுக்கு முன்பு மெர்சல் படம் வெளியாகி இருந்த சமயத்தில், விஜய்யை ஜோசப் விஜய் என்று அழைத்து வம்புக்கு இழுத்து பாஜக, தற்போது அவருக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருப்பது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
கடந்த வாரம் வெளியான லியோ டிரெய்லரை, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தனது வீட்டு தொலைக்காட்சியில் பார்ப்பது போன்ற புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தது பரபரப்பாக பேசப்பட்டது. விஜய் ரசிகர்களும் பாஜக ஆதரவுடன் தமிழக முதல்வராக பதவியேற்கிறார் விஜய் என்று போஸ்டர் ஒட்டியிருந்தனர்.
கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசனிடம், கேள்வி கேட்ட செய்தியாளர் ஒருவர், "லியோ படம் டிரெய்லரை நீங்கள் பார்த்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டது. நாளை மறுதினம் படம் வெளியாகிறது. நீங்கள் முதல் நாள் முதல் காட்சிக்கு போவீர்களா?" என கேள்வியெழுப்பினார். இப்படி ஒரு கேள்வி வரும் என்று எதிர்பார்க்காத வானதி, ஏன் இப்படி? என்று பார்த்து விளையாட்டாக முறைத்தார்.
செய்தியாளருக்கு பதில் அளித்த வானதி சீனிவாசன், இதுவரை முதல் நாள் முதல் காட்சி எல்லாம் யார் படத்திற்கும் நான் போனதில்லைங்க. அன்றைக்கு லியோ டிரெய்லர் பரபரப்பாக பேசப்பட்டது. அதனால் பார்த்தேன். படங்களை பொறுத்தவரை நல்ல காமெடி படமாக இருந்தா மட்டும்தான் பார்ப்பேன். இல்லனா, நம்ம கட்சிக்காரர்கள், அக்கா இந்த படம் நலலா இருக்கு பாருங்கனு சொன்னா பார்ப்பேன். மத்தபடி படங்களுக்கு ஆர்வமாக சென்று பார்க்கும் பழக்கம் எனக்கு கிடையாது" என வானதி சீனிவாசன் கூறினார்.












Click it and Unblock the Notifications