“வயிறெரியுதா? விண்வெளித் தொழிலிலும் தமிழ்நாடு முன்னேறும்”.. அமைச்சர் டிஆர்பி ராஜா காட்டம்
சென்னை: "ராக்கெட் மேலே கிளம்பும்போது, கீழே புகையும் நெருப்பும் வருவதைப் பார்க்கலாம். அரசியல் எதிரிகளுக்கு புகையட்டும்." என திமுக அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். விண்வெளித் தொழில் கொள்கைக்கு தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை அண்ணாமலை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் விமர்சித்திருந்த நிலையில் அமைச்சர் டிஆர்பி ராஜா விமர்சித்துள்ளார்.
தமிழக அமைச்சரவை கூட்டத்தில் விண்வெளி தொழில் கொள்கை 2025க்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஆகியோர் விமர்சித்திருந்தனர். அதற்கு தொழில் துறை அமைச்சர் டிஆர்பி ராஜா பதிலடி கொடுத்துள்ளார்.

அமைச்சர் டிஆர்பி ராஜா பதிலடி
"எந்தத் துறையாக இருந்தாலும் அதில் இந்தியாவுக்கே முன்னோடியாகத் திகழும் திராவிட மாடல் தமிழ்நாட்டின் மற்றுமொரு அறிவியல் பாய்ச்சல்தான் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள விண்வெளித் தொழில் கொள்கை 2025. கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக இதற்கானத் திட்டமிடல்களும் தயாரிப்புகளும் மேற்கொள்ளப்பட்டு ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர் நிறுவனங்களைச் சேர்ந்த வல்லுநர்கள் பங்கேற்புடன் இந்தக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் IIT Madras startup ஆன Agnikul உள்ளிட்ட விண்வெளி தொழில்நுட்பம் சார்ந்த புத்தொழில் நிறுவனங்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இத்தகைய தமிழ்நாட்டு நிறுவனங்களுடன் இந்திய அளவிலும், வெளிநாடுகளிலும் உள்ள சர்வதேச தரம் வாய்ந்த நிறுவனங்களைக் கொண்டு தமிழ்நாட்டில் அடுத்த பல ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பையும் அளிக்கும் மகத்தான முயற்சிக்கான launch pad ஆக விண்வெளித் தொழில் கொள்கை 2025 அமைந்துள்ளது.
காப்பி அடிக்கும் குஜராத்
ஆனால் தமிழ் நாட்டின் நலனில் அக்கறை இல்லாத அற்பமான எதிர்கட்சிகள் நம்பி நாராயணன் ஆலோசகராக இருக்கும் ஒரு நிறுவனத்தோடு கோர்த்து பேசுவது அற்பமான செயல். எந்தவித முதலீடும் செய்யாத அந்த நிறுவனத்திற்கும் இந்த கொள்கைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லாத நிலையில் விண்வெளி ஆராய்ச்சியில் அவர் செய்த சாதனைகளுக்கு இந்த வீணர்கள் கொடுக்கும் பரிசா இது. கீழ்த்தரமாக தமிழ்நாட்டின் வளர்ச்சி மீது செற்றை அள்ளி வீசும் அற்பர்கள் தங்களது கேவலமான அரசியல் போக்கை நிறுத்துவது நல்லது.
அதே போல நம்மை பார்த்து copy அடித்து குஜராத் மாநிலம் ஒரு கொள்கையை வெளியிட்டு உள்ளது. அப்போது அது அடிமைகளின் முதலாளிகளின் நண்பர்களுக்காகவா ? தமிழ்நாடு அவர்களை விட சிறப்பான ஒரு கொள்கையை தயார் செய்து விட்டதே என்ற வயிற்றெரிச்சல் காரணமாகவா ?
ராக்கெட் புகை மாதிரி
தமிழ்நாட்டில் எந்தவொரு நல்லது நடந்தாலும் வயிறெரியும் அரசியல் காழ்ப்புணர்வு கூட்டம், இந்த விண்வெளித் தொழில் கொள்கையை விமர்சித்து கொச்சைப்படுத்துவதாக நினைத்து ஐ.ஐ.டி. வல்லுநர்கள், புத்தொழில் நிறுவனங்களின் இளந்தமிழர்கள், வேலை வாய்ப்பு பெறவிருக்கும் மகளிர்- இளையோர் ஆகியோரையும் சேர்த்தே கொச்சைப்படுத்துகிறது.
தமிழ்நாட்டை வஞ்சிப்பதையே கொள்கையாகக் கொண்டிருக்கும் கட்சியினரும், அவர்களுக்கு அடிமை சாசனம் எழுதிக்கொடுத்துவிட்ட கட்சியினரும் திட்டமிட்டு பரப்ப நினைக்கும் பொய்களை முறியடித்து, விண்வெளித் தொழிலிலும் தமிழ்நாடு முன்னேறும்.
ராக்கெட் மேலே கிளம்பும்போது, கீழே புகையும் நெருப்பும் வருவதைப் பார்க்கலாம். அரசியல் எதிரிகளுக்கு புகையட்டும். திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டின் விண்வெளித் தொழில் வளர்ச்சி ராக்கெட் போல உயர்ந்திடும்." எனத் தெரிவித்துள்ளார்.
அண்ணாமலை விமர்சனம்
முன்னதாக அண்ணாமலை வெளியிட்ட பதிவில், "தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினின் மருமகன் விண்வெளி தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனத்தை தொடங்கியதிலிருந்து தமிழ்நாடு விண்வெளி தொழில்துறை கொள்கை எதிர்பார்க்கப்பட்டது. தமிழகத்தின் நிழல் முதல்வர் சபரீசன், 22.07.2024 அன்று முதல் வானம் ஸ்பேஸ் எல்எல்பியின் நியமிக்கப்பட்ட பங்குதாரராக உள்ளார்.
இந்த நிறுவனம் 20% மூலதன மானியத்தைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்தத் தொழில்துறை கொள்கையை கோபாலபுரம் குடும்பத்தின் தொழில்துறை கொள்கை என்று அழைப்பது தான் பொருத்தமானதாக இருக்கும்.
தமிழ்நாடு போதிய முதலீடுகள் இல்லாததால் பாதிக்கப்பட்டுள்ளது, 2025 ஆம் நிதியாண்டில் புதிய முதலீடுகளுக்காக போராடி வருகிறது. இதோ ஒரு சர்வாதிகார அரசு அவரது குடும்பத்திற்கு பயனளிக்கும் வகையில் ஒரு தொழில்துறை கொள்கையை வெளியிடுகிறது. அவமானம்!" என காட்டமாக விமர்சித்துள்ளார்.
டிடிவி தினகரன் விமர்சனம்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்ட பதிவில், "திமுக ஆட்சிக்கு வந்த 4 ஆண்டுகளில் விண்வெளி தொழில்நுட்ப வளர்ச்சி சார்ந்த எந்தவித முன்னெடுப்பையும் எடுக்காத அரசு, முதல்வரின் குடும்பத்தைச் சார்ந்த ஒருவர், விண்வெளி ஆராய்ச்சி சார்ந்த நிறுவனத்தை தொடங்கியபின் விண்வெளிக் கொள்கையை வெளியிட்டிருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
ஏற்கெனவே உலக முதலீட்டாளர்கள் மாநாடு, முதல்வரின் வெளிநாட்டு பயணத்தின்போது ஈர்க்கப்பட்டதாகக் கூறப்படும் முதலீடுகள் கானல் நீராகவே காட்சியளித்து வரும் நிலையில், முதல்வரின் குடும்பத்தை சார்ந்த தனிநபருக்காக அரசு நிர்வாகத்தின் அதிகாரத்தை பயன்படுத்துவது எந்த வகையில் நியாயம்?" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications