எல்ஐசி உடன் இணைந்த சபரிமலை தேவசம் போர்டு.. ரூ.2 லட்சம் இலவச காப்பீடு.. அரவணையும் வீட்டுக்கே வரும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு ரூ.2 லட்சம் இலவச காப்பீடு வழங்க தேவசம் போர்டு ஏற்பாடு செய்து வருகிறது. இதற்கான பணத்தையும் பக்தர்களிடம் வசூலிக்காமல் போர்டே செலுத்துகிறது. இதுதவிர, அரவணை பிரசாதத்தை தபால் மூலம் வீட்டுக்கே அனுப்பும் வசதியும் இந்த ஆண்டு அறிமுகமாகிறது. இந்த முறை சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு இன்னும் என்னென்ன புதிய வசதிகள் கிடைக்கப் போகின்றன? இங்கே சுருக்கமாக பார்க்கலாம்,.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு மண்டல, மகர விளக்கு சீசனில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இவர்களின் பாதுகாப்புக்காக திருவிதாங்கூர் தேவசம் போர்டு புதிய காப்பீட்டுத் திட்டத்தை கொண்டு வருகிறது.

sabarimala inside

ரூ.2 லட்சம் இலவச காப்பீடு

இதற்காகவே இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான LIC-யுடன் ஒப்பந்தம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இந்த சூப்பரான திட்டத்தின்படி, சபரிமலைக்கு வரும் பக்தர்களுக்கு ரூ.2 லட்சம் காப்பீடு கிடைக்கும்.

இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால், இதற்காக பக்தர்கள் தனியாக பணம் செலுத்த வேண்டியதில்லை. காப்பீட்டுக்கான மொத்த பணமான ரூ.1.5 கோடியை தேவசம் போர்டே செலுத்த திட்டமிட்டுள்ளது.

இயற்கையாக உயிரிழந்தாலும் காப்பீடு

இதுவரை சபரிமலை செல்லும் வழியில் சாலை விபத்தில் உயிரிழக்கும் பக்தர்களுக்கு ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் மாரடைப்பு உள்ளிட்ட இயற்கையான காரணங்களால் உயிரிழக்கும் பக்தர்களுக்கு காப்பீடு கிடைக்கவில்லை.

கடந்த மண்டல, மகர விளக்கு சீசனில் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் வழியில் மட்டும் 54 பக்தர்கள் மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார்கள்.. இதனால் இயற்கையாக உயிரிழக்கும் பக்தர்களின் குடும்பத்துக்கும் காப்பீடு வழங்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதையடுத்து, இயற்கையாக உயிரிழக்கும் பக்தர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் காப்பீடு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இதுபோல் உயிரிழக்கும் பக்தர்களின் குடும்பத்தினருக்கு தேவசம் போர்டு தனது சொந்தப் பணத்தில் இருந்து ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கி வருகிறது. இப்போது எல்ஐசி மூலம் ரூ.2 லட்சம் காப்பீடும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

சபரிமலை - ஸ்பாட் புக்கிங் காப்பீடு

இந்த காப்பீடு ஆன்லைனில் முன்பதிவு செய்து வரும் பக்தர்களுக்கு மட்டுமல்லாமல், ஸ்பாட் புக்கிங் மூலம் வரும் பக்தர்களுக்கும் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தரிசனத்துக்கு முந்தைய நாள் முதல் அடுத்த நாள் வரை என மொத்தம் 3 நாட்களுக்கு இந்தக் காப்பீடு பாதுகாப்பு கிடைக்கும்.

அதேபோல சபரிமலைக்கு வரும் பக்தர்கள் அரவணை பிரசாதம் வாங்குவதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலையை குறைக்கவும் புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, தபால் துறை மூலம் அரவணை மற்றும் அப்பம் பிரசாதங்களை பக்தர்களின் வீடுகளுக்கே அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக சபரிமலையில் உள்ள தபால் கவுண்டரில் பணம் செலுத்தி, வீட்டு அட்ரஸை கொடுத்துவிட்டு செல்லலாம். பிறகு பிரசாதங்கள் போஸ்டலில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படும். இதற்கு மட்டும் ஒரு சிறிய கட்டணம் வசூலிக்கப்படும்.

மேலும், மண்டல சீசன் தொடங்கும்போதே 50 லட்சம் டின் அரவணை பாயசம் இருப்பு வைக்கப்படும் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது. இதனால் பக்தர்களுக்கு அரவணை தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

நிலக்கல்லில் ஏஐ கேமரா

சபரிமலைக்கு வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்துவதில் ஏற்படும் சிரமத்தை குறைக்க நிலக்கல்லில் புதிய வசதிகள் செய்யப்படுகின்றன. அங்குள்ள 22 பார்க்கிங் பகுதிகள் 11 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, AI கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளன.

வாகனங்கள் உள்ளே வரும் இடம், வெளியே செல்லும் இடம் ஆகியவற்றில் கேமராக்கள் பொருத்தப்படும். இதன் மூலம் பார்க்கிங் பகுதிகளில் எத்தனை வாகனங்கள் உள்ளன என்பதை கணக்கிட முடியும். இந்தத் திட்டத்துக்கு சுமார் ரூ.4.5 கோடி செலவிடப்படுகிறது. இதில் போலீஸ் துறை ரூ.3.25 கோடியும், தேவசம் போர்டு ரூ.1.25 கோடியும் வழங்குகின்றன.

மேலும், சக்குப்பாலத்தில் 300 முதல் 400 கார்கள் வரை நிறுத்தும் வகையில் கூடுதல் பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஃபாஸ்டேக் சிஸ்டத்தையும் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

பக்தர்கள் ஓய்வெடுக்க புதிய வசதிகள்

மலைப்பாதையில் நடந்து செல்லும் பக்தர்கள் ஓய்வெடுக்க 200 ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. நிலக்கல்லில் ஒரே நேரத்தில் சுமார் 2,000 பேர் ஓய்வெடுக்கும் வகையில் 2 பெரிய பந்தல்களும் அமைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, சாலைகளில் எல்இடி விளக்குகள் அமைப்பது, அப்பாச்சிமேட்டில் ஓய்வெடுக்கும் இடத்தை மேம்படுத்துவது, வழிகாட்டி பலகைகள் வைப்பது போன்ற பணிகளும் நடந்து வருகின்றன. எருமேலி சாலையில் ஸ்பீட் பிரேக்குகளும் அமைக்கப்படுகின்றன. சக்குப்பாலம் வரை டாக்ஸி வாகனங்கள் செல்லவும் அனுமதி அளிக்கப்பட உள்ளது.

டோலி சேவை, கழிப்பறை ஏற்பாடு

மலை ஏற முடியாத பக்தர்கள் பயன்படுத்தும் டோலி சேவைக்கு இனி முன்கூட்டியே பணம் செலுத்த வேண்டும். இந்த முறையை அனைத்து டோலி சேவைகளிலும் கொண்டு வர தேவசம் போர்டு திட்டமிட்டுள்ளது.

சபரிமலையில் உள்ள கழிப்பறைகளை ஒப்பந்த அடிப்படையில் வேறு நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் வரை தேவசம் போர்டே நேரடியாக பராமரிக்க உள்ளது. ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படும். இதற்காக 200-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இதுதவிர, கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்த டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறைக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது. மண்டல, மகர விளக்கு சீசனில் பக்தர்களின் பாதுகாப்பு, வாகன நிறுத்தம், பிரசாதம், ஓய்வு வசதி என பல விஷயங்களில் தேவசம் போர்டு புதிய ஏற்பாடுகளை செய்து வருகிறது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+