டாஸ்மாக்கில் பில்லிங்.. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு குடிமகன்கள் சவால்
சென்னை: டாஸ்மாக்கில் பில்லிங் மட்டுமல்ல.. எதை வேண்டுமானாலும் கொண்டு வாங்க.. குவாட்டருக்கு எக்ஸ்ட்ரா 10 ரூபாய் வாங்குறதை உங்களால் நிறுத்தவே முடியாது என அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு குடிமகன்கள் சவால் விட்டுள்ளனர். ராணிப்பேட்டை உள்பட சில மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டிலுக்கு பில் வழங்கும் நடைமுறை, சோதனை அடிப்படையில் இன்று தொடங்கி உள்ள நிலையில், இந்த விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.
தமிழகத்தில் 4,829 டாஸ்மாக் கடைகள் இருக்கின்றன. இந்த டாஸ்மாக் கடைகளில் குவாட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதாக புகார்கள் உள்ளது. இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குடிமகன்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால் எதுவும் இன்று வரை மாறவில்லை..

இந்நிலையில் டாஸ்மாக் கடைகளில் வழங்கப்படும் மதுபாட்டில்களுக்கு பில் வழங்கும் திட்டத்தை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி டாஸ்மாக் கடைகளில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்களுக்கு ரசீது வழங்குதல், மதுபாட்டில்களில் பார்கோட் அச்சிட்டு அதன் மூலம் தொடர்ச்சியாக கண்காணிப்பது உள்ளிட்ட நடவடிக்கைளை டாஸ்மாக் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.
இதற்காக மென்பொருள் தயாரிக்க ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமான ரயில்டெல் நிறுவனத்துக்கு ரூ.294 கோடி மதிப்பிலான பணி வழங்கப்பட்டிருந்தது. இதன்படி டாஸ்மாக் கடைகள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு வருகிறது. சோதனை முறையில் மதுபானங்களுக்கு ரசீது கொடுக்கும் நடைமுறை டாஸ்மாக் கடைகளில் இன்று அமலுக்கு வந்துள்ளது. முதற்கட்டமாக ராணிப்பேட்டையில் உள்ள 7 கடைகளில் இப்பணி தொடங்கி உள்ளது. டாஸ்மாக் கடைகளின் செயல்பாடுகளை கணினிமயமாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த பில்லிங் முறை செயல்படுத்தப்பட்டிருக்கிறது.
டாஸ்மாக் கடைகளில் உள்ள விற்பனையாளர்கள் கையடக்க ஸ்கேனர் மூலம் ஒவ்வொரு பாட்டிலிலும் உள்ள கலால் வரியுடன் கூடிய லேபிள்களை ஸ்கேன் செய்து பில் ரசீதுகளை வாடிக்கையாளரிடம் வழங்கப்படுகிறது. மேலும் மதுபாட்டில்களை ஸ்மார்ட் போன் மூலம் ஸ்கேன் செய்தால், அந்த பாட்டில் எங்கே வாங்கப்பட்டது, எந்த தேதியில் வாங்கப்பட்டது, இது எந்த பேட்ச்சை சேர்ந்தது, மதுபான ஆலையில் இருந்து எப்போது வெளியே கொண்டு வரப்பட்டது போன்ற பல்வேறு விவரங்களை அறிய முடியும். இந்த திட்டம் மூலம் பாட்டிலுக்கு கூடுதலாக 10 ரூபாய் வாங்குவது தடுக்கப்படும் என அரசு எதிர்பார்க்கிறது.
ஆனால் நடைமுறையில் அது சாத்தியமில்லை என்று குடிமகன்கள் குற்றம்சாட்டுகின்றனர். டாஸ்மாக்கில் பில்லிங் மட்டுமல்ல.. எதை வேண்டுமானாலும் கொண்டு வாங்க.. குவாட்டருக்கு எக்ஸ்ட்ரா 10 ரூபாய் வாங்குறதை உங்களால் நிறுத்தவே முடியாது என அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு குடிமகன்கள் சவால் விட்டுள்ளனர். பாட்டிலுக்கு 10 ரூபாய் எக்ஸ்ட்ரா வாங்குதற்கும் சேர்த்த பில் போடுவார்களா என்று நெட்டிசன்கள் சிலர் கிண்டல் செய்துள்ளனர்.
இன்னும் சில நெட்டிசன்கள், கூகுள் பே வாங்கும் போதே, 10 ரூபாய் அதிகமாகவே வாங்குகிறார்கள். 340 ரூபாய்க்கு 350 ரூபாய் போட சொல்கிறார்கள். இதேபோல் பீர் பாட்டிலுக்கு 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரையிலும், ஆஃப் பாட்டிலுக்கு 20 முதல் 30 ரூபாய் வரையிலும், புல் பாட்டிலுக்கு 40 ரூபாய் 60 ரூபாய் வரையிலும் கூடுதலாக வாங்குகிறார்கள். இதை எல்லாம் பில்லிங் வந்தால் தடுக்க முடியும் என்று நினைக்கிறீர்களா என்றும் குடிமகன்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications