பாஜகவிற்கு வெள்ளை கொடி காட்டி.. ஊழல் வழக்குகளில் தப்பியவர்கள் லிஸ்ட்.. பெருசா போகுதே! டாஸ்மாக் கேஸ்?
சென்னை: 2014-ம் ஆண்டு பாஜக ஆட்சி வந்தது முதல், மத்திய விசாரணை அமைப்புகள் (ED, CBI, IT) மூலம் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் விசாரணைகளுக்கு உள்ளாகியிருந்த முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் பாஜகவில் இணைந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள்மீது இருந்த ஊழல் வழக்குகள் பாஜகவில் சேர்ந்த பிறகு நிறுத்தப்பட்டுள்ளன, அல்லது விசாரணை தாமதமாகி உள்ளது. இதோ, முக்கிய தலைவர்கள் மற்றும் அவர்கள்மீது இருந்த குற்றச்சாட்டுகளின் விவரம்.
மகாராஷ்டிரா முன்னாள் துணை முதல்வர் அஜித் பவார் மீது ரூ.25,000 கோடி கோ-ஆபரேட்டிவ் வங்கி ஊழல் வழக்கு இருந்தது. பாஜகவுடன் கூட்டணி சேர்ந்த பிறகு, அவர்மீது இருந்த வழக்குகள் முடக்கப்பட்டன. அதேபோல், பிரஃபுல் பட்டேல் மீது ஏர் இந்தியா ஒப்பந்த முறைகேடு வழக்குகள் இருந்தன; பாஜகவுடன் சேர்ந்த பிறகு நடவடிக்கை இல்லை.

முன்னாள் முதல்வர் அசோக் சவான் மீது ஆதர்ஷ் ஹவுசிங் சோசைட்டி ஊழல் வழக்கு நிலுவையில் இருந்தாலும், பாஜகவில் சேர்ந்த பிறகு விசாரணை முன்னேற்றம் இல்லை. ஹரியானா தொழிலதிபர் நவீன் ஜிந்தால் மீது கோல் பிளாக் ஒதுக்கீடு ஊழல் வழக்குகள் இருந்தன; பாஜகவில் சேர்ந்த பிறகு வழக்கு செயல்பாடின்றி உள்ளது.
அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மீது சாரதா சிட் பண்டு ஊழல் வழக்கு இருந்தது. BJPயில் சேர்ந்த பிறகு வழக்கு முன்னேற்றம் இல்லை. மேற்கு வங்கம் எதிர்க்கட்சி தலைவர் சுவேந்து அதிகாரி மீது நாரதா ஸ்டிங் ஆபரேஷன் வழக்கு இருந்தது; BJPயில் சேர்ந்த பிறகு நடவடிக்கை இல்லை.
சாகன் புஜ்பால், கிரிபாஷங்கர் சிங், சு.சி. ரமேஷ், வை.எஸ். சௌதரி, பிரதாப் சர்நாயக், ஹசன் முஷ்ரிப், பவனா கவாலி உள்ளிட்ட பலர் மீது இருந்த சொத்து சேர்ப்பு, பணப்புழக்கம், அரசுப் பணிகள் முறைகேடு வழக்குகள் பாஜகவில் சேர்ந்த பிறகு நடவடிக்கை இல்லாமல் உள்ளது.
இந்த நிலைமைக்கு எதிர்க்கட்சிகள் "BJP வாஷிங் மெஷின்" என விமர்சனம் செய்து வருகின்றன. ஊழல் குற்றச்சாட்டுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வாக்குறுதியுடன் வந்த பாஜக, தற்போது தங்கள் கட்சியில் இணையும் முன்னாள் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு மட்டும் சலுகை அளிப்பதாக அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அதே நேரம் ஆம் ஆத்மி உட்பட எதிர்ப்பை கைவிடாத கட்சித் தலைவர்கள் சிறைவாசம் அனுபவித்துள்ளனர்.
இப்போது டாஸ்மாக் விஷயத்தில் கடும் நடவடிக்கைகளை அமலாக்கத் துறை எடுத்துள்ள நிலையில், திமுக இன்னும் வலுவாக தனது பாஜக எதிர்ப்பை தொடருமா, தொடராதா என ஒவ்வொரு சேனலிலும் பட்டிமன்றம் நடத்தாத குறையாக விமர்சகர்கள் பேசத் தொடங்கிவிட்டனர்.












Click it and Unblock the Notifications