லிவிங் டூ கெதர்: திருமணம் செய்யாமல் வாழும் ஆண் - பெண்..! உயர்நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு
லிவிங் டூ கெதர் குறித்து உயர்நீதிமன்றம் முக்கிய கருத்தை வெளியிட்டுள்ளது
சென்னை: திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்தவர்கள், குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர எந்த சட்டப்பூர்வ உரிமையும் கிடையாது என்று சென்னை ஹைகோர்ட் தெரிவித்துள்ளது.
முற்போக்கானதொரு மாற்றம் பொது சமூகத்தால் ஏற்கப்பட்டு நிலைபெற வேண்டுமானால், அது பற்றிய விவாதங்களும் பரவலாக எழ வேண்டும்.. அப்படிப்பட்ட ஒரு விஷயம்தான் லிவிங் டூ கெதர்.
லிவிங் டு கெதர் என்றால், புரிதல் வயது வந்த ஒரு ஆணும் பெண்ணும் ஒன்றாக சேர்ந்து வசித்து பார்க்கும் ஒரு மனோபாவம்..

எண்ணிக்கை
எல்லாவிதத்திலும் ஒத்துவந்தால் சேர்ந்து வாழ்வது, இல்லாவிட்டால் பிரிந்துவிடுவது.. இது அச்சு அசலான மேற்கத்திய நாகரீகம். உடல்ரீதியான புரிதல், மனரீதியான புரிதல் என ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதற்காக சேர்ந்து வாழ்ந்து பார்க்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.. இதைநோக்கிதான் இன்றைய பெரும்பாலான இளைய சமுதாயம் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த எண்ணிக்கை நாளடைவில் அதிகமாகி கொண்டே போகிறது.. இதற்கு மேலும் சில காரணங்கள் உள்ளன..

திருமணங்கள்
யார் தலையீடும் இல்லாமல் தனியாக வாழ்க்கை நடத்த இளம் ஆணும், பெண்ணும் பலர் நினைக்கிறார்கள்.. இதற்கு அவர்களுக்கு உறுதுணையாக கை நிறைய சம்பளமும் காரணம். அதுமட்டுமல்ல, திருமணம் என்ற பந்தத்திற்குள் கட்டுண்டு கிடப்பதை பெரிதாக யாரும் விரும்புவதில்லை.. மேற்கத்திய வாழ்க்கையின் தாக்கம் அதிகமாகி கொண்டே போவதுடன், எதையும் லேசாக எடுத்து கொள்ளும் மனோபாவமும் பெருகி கொண்டே போவதுதான், லிவிங் டூ கெதர் அதிகரிப்புக்கு காரணமாக அமைந்து வருகிறது.

கருத்துக்கள்
இந்த லிவிங் டூ கெதர் குறித்த பல்வேறு வழக்குகள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது.. அது குறித்து அந்தந்த மாநில நீதிமன்றங்களும் தங்கள் கருத்தை சொல்லி கொண்டுதான் வருகின்றன.. 2013-ல்
இது தொடர்பான வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் நடந்தது.. அப்போது நீதிபதிகள், ''திருமணம் செய்து கொள்வதோ, செய்து கொள்ளாமல் இருப்பதோ ஒருவரின் தனிப்பட்ட விருப்பம். திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது, இந்தியாவில் சமூகத்தாலோ, சட்டத்தாலோ அங்கீகரிக்கப்படவில்லை. அப்படி இருந்தும், திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது குற்றமோ, பாவமோ அல்ல. இந்த உறவு, திருமண உறவு போன்றது அல்ல. இத்தகைய உறவை பல நாடுகள் அங்கீகரிக்கத் தொடங்கி விட்டன" என்று கூறியிருந்தனர் .

சமூகநெறிகள்
2014-ல் இதுபோலவே ஒரு வழக்கு திருச்சி கோர்ட்டில் நடந்தது.. அப்போது நீதிபதிகள், "திருமணம் செய்து கொள்ளாமல் ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது சமூக நெறிமுறைகளுக்கு எதிரானது என ஹைகோர்ட் கூறியுள்ளது. வெளிநாடுகளில் நடந்த சம்பவத்துக்கு, இந்தியாவில் வழக்குப் பதிவு செய்ய முடியாது என்றும் நீதிமன்றம் திருமணம் செய்யாமல் ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழ்வது சமூகநெறிகளுக்கு எதிரானது" என்று கருத்து தெரிவித்திருந்தது.

கருத்து
இந்நிலையில், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவர்கள், குடும்ப நல நீதிமன்றங்களில் வழக்கு தொடர சட்டப்பூர்வ உரிமையில்லை என்று சென்னை ஹைகோர்ட் தற்போது தெரிவித்துள்ளது... ஜோசப் பேபி என்பவருடன் சேர்த்து வைக்கக்கோரி கலைச்செல்வி என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

மனுதாக்கல்
கோவை இடையர்பாளையத்தை சேர்ந்தவர் கலைச்செல்வி.. இவர் ஜோசப் பேபி என்பவரை 2013ல் திருமணம் செய்ததாகவும், 2016முதல் ஜோசப் தனியாக வசித்து வருவதால் தங்களை சேர்த்து வைக்க கோரி கோவை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ஆனால், தனக்கும், கலைச்செல்விக்கும் திருமணம் நடக்கவில்லை எனக் கூறி, அவரது வழக்கை நிராகரிக்க கோரி ஜோசப் பேபியும் மனுத்தாக்கல் செய்தார்.

தள்ளுபடி
இரு மனுக்களையும் விசாரித்த கோவை நீதிமன்றம், கலைச்செல்வியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து கலைச் செல்வி தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன் மற்றும் நீதிபதி விஜயகுமார் அடங்கிய அமர்வு, பண பரிவர்த்தனை தொடர்பான முன் விரோதத்தால் கலைச்செல்வி இந்த வழக்கை தொடர்ந்துள்ளார் என்பது ஆதாரங்களில் இருந்து தெளிவாவதாக கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

அதிரடி
இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் குடும்பம் நடத்தியுள்ளதாக குறிப்பிட்ட நீதிபதி, திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்தவர்கள்,தங்களுக்குள் எழும் பிரச்சைகளுக்கு குடும்ப நல நீதிமன்றத்தை நாட எந்த சட்டப்பூர்வ உரிமையும் இல்லை எனவும் தீர்ப்பில் தெளிவுபடுத்தியுள்ளார்... உயர்நீதிமன்றத்தின் இந்த கருத்து, மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications