தனிநபர் கடன் வாங்குறீங்களா? மாதத் தவணை முக்கியம்.. இந்த தவறுகளை செய்யாதீங்க
சென்னை: தனி நபர் கடன் வாங்கறீங்களா? சில தவறுகளை மட்டும் நீங்கள் செய்யாமல் இருந்தாலே போதும், பல சிக்கல்கள் வராமல் தடுக்கலாம்.. ஏனென்றால், திடீர்னு பணம் தேவைப்படும்போது பலருக்கும் கை கொடுப்பது தனிநபர் கடன்தான்.. வங்கியும் சில நேரம் நாம் கேட்பதைவிட அதிகமான தொகையை கடனாக கொடுக்க முன்வரும். ஆனால், அதிக பணம் கிடைக்கிறது என்பதற்காக அதிகமாக வாங்கிவிட்டால், அதுவே பிறகு பெரிய சுமையாக மாறிவிடும். இதற்கு சில விஷயங்களில் கவனமாக இருந்தாலே போதும்.
வீட்டு செலவு, மருத்துவச் செலவு, திருமணம், படிப்பு என பல காரணங்களுக்காக தனி நபர் கடனை வாங்க நேரிடுகிறது.. ஆனால், தேவைக்கு அதிகமாக கடன் வாங்காமல் இருக்க வேண்டும்..

தனிநபர் கடன்
வங்கி ரூ.5 லட்சம் தருகிறது என்பதற்காக 5 லட்சத்தையும் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. நமக்கு உண்மையில் எவ்வளவு பணம் தேவையோ, அதை மட்டும் வாங்குவது நல்லது. ஏற்கனவே வேறு கடன் இருக்கிறதா, கடன் அட்டை பணம் கட்ட வேண்டியிருக்கிறதா என்பதையும் சேர்த்து கணக்குப் போட வேண்டும்.
அடுத்ததாக, வட்டி குறைவாக இருக்கிறது என்று மட்டும் பார்த்து கடன் வாங்க வேண்டாம்.. கடனுக்கான செலவு வட்டி மட்டும் கிடையாது. கடன் கொடுப்பதற்காக வங்கி வசூலிக்கும் கட்டணம் உள்ளிட்ட வேறு செலவுகளும் இருக்கலாம். அதனால், கடன் வாங்கும்போது மொத்தமாக எவ்வளவு பணத்தை திருப்பிக் கட்டப் போகிறோம் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
மாதத் தவணை முக்கியம்
மாதத் தவணை குறைவாக இருக்கிறது என்பதற்காக நீண்ட காலத்துக்கு கடன் வாங்குவதும் தவறுதான். உதாரணத்துக்கு, 3 ஆண்டுகளுக்கு பதிலாக 5 வருடங்களுக்கு கடன் வாங்கினால் மாதம் கட்ட வேண்டிய தொகை குறையலாம். ஆனால், இன்னும் 2 ஆண்டுகள் கூடுதலாக வட்டி கட்ட வேண்டியிருக்கும். அதனால் மாதத் தவணை மட்டும் குறைவாக இருக்கிறதா என்று பார்க்காமல், கடைசியில் மொத்தமாக எவ்வளவு கட்டப் போகிறோம் என்பதையும் பார்க்க வேண்டும்.
அதேபோல, கடனை முன்கூட்டியே முடித்துவிடலாம் என்று நினைத்தால் அதற்கான விதிமுறைகளையும் முன்பே தெரிந்து கொள்ள வேண்டும். சில கடன்களை குறிப்பிட்ட காலத்துக்கு முன்பே முடித்தால் அதற்காக தனியாக கட்டணம் வசூலிக்கப்படலாம். இதை கடன் வாங்கிய பிறகு தெரிந்து கொள்வதைவிட, வாங்குவதற்கு முன்பே தெரிந்து கொள்வது நல்லது.
விண்ணப்பங்கள் - கடன் ஹிஸ்டரி
இன்னொரு முக்கியமான விஷயம்... ஒரே நேரத்தில் பல வங்கிகளிடம் கடன் கேட்டு விண்ணப்பிக்க கூடாது.. . ஒவ்வொரு வங்கியும் உங்கள் கடன் விவரத்தைப் பார்க்கும். தொடர்ந்து பல இடங்களில் கடன் கேட்பது உங்கள் கடன் ஹிஸ்டரியில் பதிவாகலாம். அதனால் தேவையான இடங்களை மட்டும் பார்த்து விண்ணப்பிப்பது நல்லது.
மாதத் தவணையை தேதி தவறாமல் கட்டுவதும் ரொம்ப முக்கியம். ஒரு மாதம் தாமதமாக கட்டினால் என்ன? என்று அலட்சியமாக இருக்கக்கூடாது. தொடர்ந்து தவணை தாமதமானால், உங்கள் கடன் வரலாறு பாதிக்கப்படலாம். எதிர்காலத்தில் வேறு கடன் வாங்கும்போது இதனால் சிக்கல் வர வாய்ப்பு இருக்கிறது.
கையெழுத்து - வட்டி - கட்டணம்
கடைசியாக, கையெழுத்துப் போடுவதற்கு முன்பு கடன் தொடர்பான எல்லா ஆவணங்களையும் படித்துப் பார்க்க வேண்டும்.. எவ்வளவு கடன், எவ்வளவு வட்டி, என்னென்ன கட்டணம், மாதத் தவணை எவ்வளவு, எப்போது கட்ட வேண்டும், முன்கூட்டியே கடனை முடித்தால் என்ன விதிமுறை என எல்லாவற்றையும் தெரிந்து கொண்ட பிறகே ஒப்புக்கொள்ள வேண்டும்.
சுருக்கமாக சொன்னால், வங்கி எவ்வளவு கடன் தருகிறது? என்பதைவிட, நம்மால் ஒவ்வொரு மாதமும் எவ்வளவு திருப்பிக் கட்ட முடியும்? என்பதைத்தான் முதலில் பார்க்க வேண்டும். அவசரத்துக்காக வாங்கும் தனிநபர் கடன், பிறகு நமக்கே பெரிய சுமையாக மாறாமல் பார்த்துக் கொள்வதுதான் முக்கியம்..!!!


Click it and Unblock the Notifications
