"நல்லா இருக்கீங்களா".. மறைந்திருக்கும் "செக்"குகள்.. கொரோனாவுக்கு மத்தியிலும் வீசப்படும் அஸ்திரம்!
முக ஸ்டாலினை அமித்ஷா நலன் விசாரிக்க என்ன காரணங்கள் என்பதே பேச்சாக உள்ளது
சென்னை: ஊரடங்கு ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு சில அரசியல் சமாச்சாரங்கள் சத்தமில்லாமல் தமிழகத்தில் நடந்து வரவே செய்கின்றன... மாற்று கட்சிகளுக்குள் கொக்கி போடுவதும், செக் வைப்பதும், நட்பு பாராட்டி கொள்வதும் என ஆச்சரியங்கள் நிகழ்ந்து வருகின்றன!
கொரோனாவைரஸ் பரவல் தடுப்பு குறித்த அனைத்துக் கட்சி கூட்டத்தை பிரதமர் சில தினங்களுக்கு முன்பு கூட்டியிருந்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணியுடன் பிரதமர் மோடி ஆலோசித்திருந்தார்.
இதையடுத்து திமுக தரப்பில் ஒரு செய்திக்குறிப்பும் வெளியானது.. அந்த செய்தி குறிப்புதான் இன்றைய நாள் வரை ஹாட் டாப்பிக்!! பிரதமர் பேசினார், நலம் விசாரித்தார், கழக தலைவர் அவரிடம் கோரிக்கைகளை வலியுறுத்தினார்.. என்பதெல்லாம் சொல்லிவிட்டு, கடைசியில், "இதேபோல் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் திமுக தலைவரை தொடர்புகொண்டு நலம் விசாரித்தார்' என்ற வரிகள் இடம்பெற்றிருந்தன!!

முக ஸ்டாலின்
பிரதமர் பேசியதைவிட இந்த வரிகள்தான் அனைவராலும் கவனிக்கப்பட்டது.. தமிழகத்தின் பெரிய கட்சி, எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் பிரதமர் பேசினார் சரி, அமித்ஷா ஏன் முக ஸ்டாலினை விசேஷமாக விசாரித்தார்? இதற்கு என்ன காரணம்? இது வெறும் நலன் விசாரிப்புதானா? அரசியல் நாகரீகமா? அல்லது இணக்கமான போக்கா என தெரியவில்லை. ஆனால் சில தினங்களுக்கு முன்பு வேறு ஒரு விஷயம் கசிந்தது.

கோரிக்கை
திமுக தலைவரின் கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றை பிரதமரிடம் அளிக்க திமுக எம்பிக்கள் டிஆர்பாலு, கனிமொழி போன்றோர் பிரதமரை சந்தித்துள்ளனர்.. அமித்ஷாவையும் சந்தித்தித்துள்ளனர்.. அப்போது, "நீங்கள் பாஜகவோடு கூட்டணி வைக்க வேண்டாம்.. அதற்காக ஏன் காங்கிரசுடன் இன்னும் கூட்டணி வைக்க வேண்டும்? காங்கிரஸை மட்டும் கூட்டணியில் இருந்து விலக்கினால் திமுகவை எந்த தொந்தரவும் செய்ய மாட்டோம்" என்று சொல்லியதாக தெரிகிறது. ஆனால் இது எந்த அளவுக்கு உண்மை என தெரியவில்லை.

கேஎஸ் அழகிரி
ஆனால், காங்கிரசுடன் சமீப காலமாக திமுகவுக்கு மோதல் போக்கு உள்ளது என்பதையும் மறுக்க முடியாது... கே.எஸ். அழகிரியே சில முறை நேரடியாகவும், மறைமுகமாகவும்கூட கூட்டணி தர்மம் குறித்த தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார்.. மேலும் சிஏஏவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் டெல்லியில் நடத்திய கூட்டத்தை திமுக புறக்கணித்ததும் கவனிக்கத்தக்க ஒன்று!

திமுக
இது எல்லாவற்றிற்கும் மேலாக, திமுக 3-வது பெரிய கட்சியாக இருந்தாலும் இப்போதெல்லாம் பாஜகவை பகைத்து கொள்வது குறைவாகவே தென்படுகிறது.. ஆரம்பத்தில் அதாவது ஒரு வருடத்திற்கு முன்பு இருந்த வெறுப்பு அரசியல் இப்போது காட்டம் குறைவாகவே உள்ளதாகவும் தெரிகிறது.. பலமான எதிர்ப்பு இல்லை.. வலுவான கண்டனங்கள் இல்லை.

பாஜக - திமுக
இதுபோன்ற சூழலில்தான் அமித்ஷா ஸ்டாலினிடம் நலம் விசாரித்தார் என்ற வரிகள் பல்வேறு யூகங்களை ஏற்படுத்தி வருகின்றன... ஒருவேளை இது அதிமுகவுக்கு பாஜக வைக்கப்படும் செக் என எடுத்து கொள்வதா அல்லது காங்கிரஸை வீழ்த்த அமித்ஷாவின் அடுத்த வியூகம் என எடுத்து கொள்வதா தெரியவில்லை. ஒருவேளை திமுக-பாஜகவுக்குள் இணக்கமான போக்கு ஏற்படுமானால், அது 2 கட்சிகளுக்குமே கூடுதல் பலம்தான்.

அஸ்திரம்
ஏனெனில், திராவிட கட்சிகள் இல்லாமல் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது என்ற நிலைமையை பாஜக தற்போது நன்கு உணர்ந்துள்ளது.. அந்த வகையில், தற்போது வலிமை வாய்ந்த கட்சியாக அதிமுக உருவெடுத்து வரும் நிலையில், பாஜகவுடன் வரும் தேர்தலில் கூட்டணி வைக்குமா? அப்படி கூட்டணி வைத்தாலும் உரிய தொகுதிகளை அதிமுக பாஜகவுக்கு ஒதுக்குமா? என்பதெல்லாம் சந்தேகம்தான்.. எனவேதான் திமுகவுடன் நட்பு சூழல் உருவாக்க நினைக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது அதிமுகவை மிரள வைக்க பாஜக எடுக்கும் அஸ்திரமாககூட இருக்கலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்!!

நிலுவை
இன்னொரு பக்கம், திமுக - காங்கிரஸ் கூட்டணியில் அதிருப்தி நிலவுவதையும் பாஜக தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளவும் தவறவில்லை.. அதனாலேயே கனகச்சிதமாக காய் நகர்த்த தொடங்கி உள்ளது... திமுகவை பொறுத்தவரை, 2ஜி உள்ளிட்ட கேஸ்கள் நிலுவையில் உள்ளது... பாஜக நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் அவைகளை தூசி தட்டி திரும்ப எடுத்து திமுகவுக்கு செக் வைக்கலாம்.. அதனாலேயே பாஜகவை மேலும் பகைத்து கொள்ள திமுகவும் இந்த சூழலில் விரும்பாததால், இணக்கமான போக்கையே நாசூக்காக கையாண்டு வருகிறது.

பிரசாந்த் கிஷோர்
அதுமட்டுமில்லை.. திமுக இந்து விரோத கட்சி கிடையாது என்பதை உடைக்கும் ஒரு டார்கெட்டை பி.கே.வும் கையில் எடுத்துள்ளார் என கிசுகிசுக்கப்பட்டது.. அந்த வகையில் பாஜக - திமுகவின் நட்பு அரசியல் ஒரு வருடத்தில் எப்படி உருமாறுமோ என்பது மிகப்பெரிய எதிர்பார்ப்புதான். அரசியலில் காட்சிகளும், கோலங்களும் அடிக்கடி மாறுவது இயல்புதான்.. ஆனால் "நல்லா இருக்கீங்களா" என்று ஸ்டாலினை அமித்ஷா விசாரித்ததின் பின்னணியில் சிக்கி உள்ளது அதிமுகவா, காங்கிரஸா? என்பதுதான் தெரியவில்லை!












Click it and Unblock the Notifications