‛‛ஹேப்பியான தேவநாதன்’’.. பாஜக கூட்டணியில் ஐஎம்கேஎம்கே-வுக்கு ஒரு தொகுதி.. கையெழுத்தானது ஒப்பந்தம்!
சென்னை: வரும் லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்துக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
இந்தியாவில் 7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் என்பது ஏப்ரல் 19 ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதி மற்றும் புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.

தமிழ்நாட்டில் பாஜக தலைமையில் புதிதாக கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. பாஜக கூட்டணியில் பாமக, அமமுக, ஓபிஎஸ் அணி, தமிழ் மாநில காங்கிரஸ், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், ஐஜேகே, புதிய நீதிக்கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் உள்பட பல கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் இன்று வேட்பு மனுத்தாக்கல் தொடங்கியது. இதையடுத்து பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு ஒப்பந்தம் இன்று வரிசையாக கையெழுத்தானது. அதன்படி பாமகவுக்கு 10 தொகுதிகளும், அமமுகவுக்கு 2 தொகுதிகளும் வழங்கப்பட்டுள்ளது. ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஒரு தொகுதி, புதிய நீதிக்கட்சிக்கு ஒரு தொகுதி வழங்கப்பட்டுள்ளது.
அந்த வரிசையில் தேவநாதனின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்துக்கும் ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் எந்த தொகுதி என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியின் பெயர் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகத்தின் தேவநாதன் முதலில் பகுஜன் சமாஜ் கட்சியில் செயல்பட்டு வந்தார். அந்த கட்சியின் தமிழக பொறுப்பாளராக இருந்தார். அதன்பிறகு 'யாதவர் மகாசபை' என்ற பெயரில் இயக்கம் நடத்தி வந்தார். வின்டிவியை நடத்தி வந்த இவர் யாதவர் மகாசபை என்பதை 2011ம் ஆண்டு அரசியல் கட்சியாக மாற்றினார். "அக்னி பறவைகள்' என்று பெயரிட்டார். அதன்பிறகு அவரது கட்சியின் பெயர் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகமாக மாறியது.
இந்நிலையில் தான் வரும் லோக்சபா தேர்தலில் பாஜக கூட்டணியில் தேவநாதன் உள்ள நிலையில் அவருக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications