உத்தரகாண்ட்டில் பிறந்த யோகி ஏன் உபிக்கு முதல்வரானார்? குஜராத் மோடி ஏன் வாரணாசி போனார்?
சென்னை: உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் ஏன் உபிக்கு முதல்வராக இருக்கிறார். அவரது சொந்த மாநிலத்திலேயே அவர் அரசியல் செய்யலாமே? என்ற ஒரு விமர்சனத்தை முன்வைத்துள்ளார் பத்திரிகையாளர் கார்த்திகேயன்.
ஒடிசா மாநில தேர்தல் அரசியலே இப்போது ஒரு தமிழரை மையமாக வைத்துத்தான் நடந்து வருகிறது. தேர்தல் களத்தில் உள்ள வி.கே.பாண்டியன் அந்தளவுக்கு பாஜகவின் கண்களை உறுத்த ஆரம்பித்திருக்கிறார்.

'பூரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையின் சாவியே தமிழ்நாட்டில்தான் உள்ளது' என்று மோடி முன்வைத்த விமர்சனம் இன்றைக்கு மாநிலம் தாண்டிய கவனத்தைக் கவர்ந்துள்ளது.
தமிழ்நாட்டிற்கு வரும்போது எல்லாம் தமிழ்மொழியின் பெருமை, திருக்குறளின் சிறப்பு என்று பேசும் பிரதமர் மோடி, ஒடிசாவில் ஒரு தமிழரை வைத்து அரசியல் செய்யத் துணிந்திருக்கிறார்.
மாநிலம் தாண்டி மாநிலம் சென்று அரசியலில் ஈடுபடுவது தவறா? டெல்லியிலிருந்த இந்திரா காந்தி ஏன் ரேபரேலிக்குப் போய் போட்டியிட்டார். டெல்லியில் பிறந்து வளர்ந்த ராகுல் ஏன் வயநாட்டுக்கு வந்து போட்டிப் போடுகிறார்.
குஜராத்தில் முதல்வராக இருந்த மோடி ஏன் வாரணாசியில் போய் போட்டிப் போடுகிறார். இவர்கள் அனைவரும் மாநிலம் விட்டு மாநிலம் போய் தேர்தலில் நிற்பது சரி என்றால், வி.கே.பாண்டியன் ஒடிசாவில் போட்டியிடுவதில் என்ன தவறு?

தமிழ்நாட்டில் உள்ள ராமேஸ்வரத்தில் போட்டியிட இருந்ததாகப் பிரதமர் மோடியே பேசி இருக்கிறாரே? அவர் ஏன் தமிழ்நாட்டுக்கு வந்து போட்டியிட வேண்டும் என்று விரும்பினார்?
இப்படிப் பல கேள்விகள் உள்ளன. அதற்கு எல்லாம் அரசியல் ரீதியான ஒரு விளக்கத்தை முன்வைத்துள்ளார் பத்திரிகையாளர் கார்த்திகேயன்.
பாஜக ஏன் இப்படி கடவுளை வைத்துத் தேர்தல் களத்தைக் கட்டமைத்து வருகிறது என்பதற்கு ஒரு விளக்கத்தை அவர் கொடுத்துள்ளார்.
பிரதமர் மோடியின் இந்தத் தமிழர் வெறுப்பு பேச்சு பற்றி, கார்த்திகேயன், "வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர் இன்னொரு மாநிலத்திற்கு மிக உயர்ந்த பொறுப்புக்கு வரக்கூடாது என்று பாஜகவினர் பிரச்சாரம் செய்கிறார்கள். குறிப்பாகப் பிரதமர் மோடியும் அமித்ஷாவும் இந்தப் பிரச்சாரத்தை முன்னெடுத்திருக்கிறார்கள். ஒடிசாவில் இந்தப் பிரச்சாரத்தை பாஜக செய்து வருகிறது.

குறிப்பாகத் தமிழ்நாட்டைச் சேர்ந்த வி.கே. பாண்டியன் ஒடிசா அரசியலில் ஈடுபடக் கூடாது என்று மோடி பேசுகிறார். அமித்ஷாவும் பேசுகிறார். அப்படி என்றால், அகமதாபாத்தைச் சேர்ந்த மோடி வாரணாசியில் எம்பி ஆகலாமா? அது சரியா?
அதைப்போல உத்தரகாண்ட்டை சேர்ந்த யோகி ஆதித்யநாத் உத்திரப் பிரதேசத்திற்கு முதலமைச்சராகலாமா? மாநிலத்தைத்தான் பிரிந்துவிட்டார்களே அப்போது அவர் உத்தரகாண்ட் மாநில அரசியலில்தான் இருக்க வேண்டும்? அவர் ஏன் உபிக்குப் போனார்? இந்த ஒரு கேள்வியும் எழுகிறது இல்லையா?
இந்த மாதிரியான பேச்சுக்கள் எல்லாம் வெறுப்பு அரசியலைத்தான் உருவாக்கும். மேலும் மாநிலங்களுக்கு இடையேயான உணர்வுகளைத் தூண்டிவிடும். இதன் மூலமாக ஏதாவது ஆதாயம் கிடைக்குமா? என்று பாஜகவினர் நினைப்பது மோசமான அரசியல்.
தமிழர் எனப் பிரித்துப் பேசி அரசியல் செய்வது எல்லாம் தரம் குறைந்த அரசியலைத்தான் காட்டுகிறது.
இதற்கு மேலாக பாஜக வேட்பாளர் சம்பித் பத்ரா, 'பூரி ஜெகன்நாதரே மோடியின் பக்தர்' தான் என்று பேசுகிறார். அதற்காக மன்னிப்பு கேட்டிருக்கிறார். மோடி அதற்கு மேல் சென்று தான் பயாலஜிக்கலாக பிறந்தவன் இல்லை. கடவுளின் அவதாரம் என்கிறார்.
மனிதர்களிடையே வேறுபாடுகளை தூண்டி விட்டுவிட்டு கடவுள் என்று சொல்கிறார்கள். மனிதாபிமானம் பற்றி எல்லாம் கவலைப்படாமல் கடவுளோ தங்களை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இது என்ன மாதிரியான அரசியல்?

மதத்தைத் தாண்டி பாஜகவால் ஒரு அரசியல் கருத்தை முன்வைக்க முடியவில்லை. தேசிய அளவில் உள்ள மக்கள் பிரச்சினைகளைப் பிரதிபலிப்பதைப் போல ஒரு கொள்கையை முன்வைக்க முடியவில்லை.
2014இல் ஊழல் ஒழிப்பு, வளர்ச்சி மற்றும் 'குஜராத்' மாடல் என்பதை முன்வைத்து பிரதமர் வேட்பாளராகக் களத்திற்கு வந்தார் மோடி. அப்போது மோடிக்கு என்று தனியான பிம்பம் ஒன்றும் இல்லை.
அதன்பின்னர் 2019இல் புல்வாமா தாக்குதல் பெரிய அளவில் பாஜகவுக்குக் கைகொடுத்தது. அதை வைத்து மீண்டும் ஆட்சிக்கு வந்தார்கள்.
வடமாநிலங்களில் விலைவாசி உயர்வு கடுமையாக மக்களைப் பாதித்துள்ளது. அதைப் போல வேலைவாய்ப்பின்மை கடுமையாக நிலவுகிறது. இந்தப் பிரச்சினைகளை வடமாநில ஊடகங்கள் மிகக் கடுமையாக வெளிப்படுத்தி வருகின்றன. அதைச் சமாளிக்க முடியாமல்தான், இந்த மாதிரியான பரப்புரைகளை பாஜக செய்து வருகிறது.
மாநில ரீதியாக உள்ள கட்சிகள் பாஜக மீது மிகக்கடுமையான விமர்சனங்களை முன்வைக்கின்றன. குறிப்பாக ஸ்டாலின் தமிழ்நாட்டின் முறையாக நிதி ஒதுக்கப்படவில்லை என்று ஆதாரங்களை அடுக்குகிறார். அதை பாஜகவால் எதிர்கொள்ள முடியவில்லை.
அதைப்போலக் கர்நாடக முதல்வர் தங்களின் மாநில வளர்ச்சிக்குச் சரியான நிதி வழங்கப்படவில்லை என்று நீதிமன்றம் போய் சட்டரீதியாக போராடுகிறார். அதற்குச் சரியான பதிலடி கொடுக்க பாஜகவினால் முடியவில்லை.
இந்த மாதிரியான பிரச்சினை அனைத்து மாநிலங்களில் உள்ளன. அகிலேஷ் யாதவ் உத்தரப் பிரதேசத்தில் வைக்கக் கூடிய புகார்களையோ அல்லது பீகாரில் தேஜஸ்வி யாதவ் வைக்கக் கூடிய புகார்களையோ பாஜக தலைவர்களால் சரியாத பதிலடி தர முடியவில்லை.
ஆகவேதான், கடவுள்களை மையமாக வைத்தே பாஜக தேர்தல் அரசியலைச் செய்து வருகிறது. அதிலும் கூட நிலையான வாதத்தை மோடி வைக்கவில்லை.
முதலில் இஸ்லாமியர்களை விமர்சிக்கிறார். அடுத்து வேறு மாநிலம் போய் அப்படிப் பேசவே இல்லை என்கிறார். ஏன் இவ்வளவு குழப்பம்? ஏன் இவ்வளவு தடுமாற்றம்?
இதுவரை உலகளவில் மோடி மிகப்பெரிய பேச்சாளர் என்றே சொன்னார்கள். ஆனால், அவரே இன்று இந்தளவுக்குக் குழம்பிப் போய் பேசுகிறார். ஊழலை ஒழிப்பேன் என்றுதான் 2014இல் ஆட்சிக்கு வந்தார். இன்று தேர்தல் பத்திர ஊழல் அவருக்கு முன்பாக மிகப்பெரிதாக நிற்கிறது.
யாரை எல்லாம் ஊழல்வாதிகள் என்று பாஜக சொன்னதோ அவர்களை எல்லாம் இன்று கட்சியில் சேர்த்துள்ளார்கள். அசோக் சவான், நாராயண் ரானே, ஹேமந்த் பிஸ்வா சர்மா, முகுல் ராய் எனப் பெரிய பட்டியலே போடலாம். அந்தளவுக்குப் பெரிய பட்டியலே உள்ளது.
ஆக, இதற்கு எல்லாம் பாஜகவினரிடம் என்ன பதில் உள்ளது. அதை மறைக்கத்தான் கடவுளை வைத்து அரசியல் செய்கிறது பாஜக" என்கிறார்












Click it and Unblock the Notifications